Pages

Wednesday, December 21, 2016

தமிழ்த் திரையிசை 2016 அலசல்


ஒரு படைப்பை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய காரணிகளில், ஒன்று அந்தப் படைப்பு மீதான நுகர்வோரின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் விளையும் தானாக எழும் எதிர்பார்ப்பு, இன்னொன்று குறித்த படைப்பைச் சந்தைப்படுத்தும் பாங்கினால் நுகர்வோரைத் தேடிச் சென்று அவர்களை ஆட்கொள்வது என்ற ரீதியில் அமைந்திருக்கும். இது திரையிசைப் பாடல்களுக்கும் பொருந்தும்.
கடந்த பல ஆண்டுகளாக அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை வைத்துச் செய்யும் அலசலை இந்த ஆண்டிறுதியிலும் செய்ய முனைந்துள்ளேன்.
இதற்கிடையில் இருவேறு திசைகளில் இருந்து இந்த மாதிரி ஒரு பகிர்வைத் தத்தம் பத்திரிகைகளுக்குக் கொடுக்குமாறு நண்பர்கள் கேட்டிருந்தாலும் இதைக் கொடுப்பதற்கான மன ஆர்வம் பரிபூரணமாக இல்லாததால் தட்டிக் கொண்டே போனது. இப்போது கை கூடியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் திரையுசையின் போக்கில் இன்னார் தான் என்றில்லாமல் ஒரே ஆண்டில் பல்வேறு புதுப் புது இசையமைப்பாளர்கள் தம் வல்லமையைக் காட்டி ரசிகர்களைக் கட்டியிழுக்கும் ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. இதனால் புதுப் புது உத்திகளையும், பாய்ச்சலையும் இசையமைப்பாளர்களால் காட்ட முடிகின்றது.

2016 ஆண்டைப் பொறுத்தவரை பாடலாசிரியர் முத்துக்குமாரின் அகால மரணம் தான் தமிழ்த் திரையிசை உலகின் முதற்பெரும் தாக்கமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பாடலாசிரியர் அண்ணாமலையின் மரணமும் பாடலாசிரியர்களைத் தேடி அறிந்து கொள்ளும் இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது.
ஆனால் இந்த ஆண்டின் முற்பகுதியில் காலமான பாடலாசிரியர் கவிஞர் காளிதாசனின் இறப்பைப் பரவலாக அறிந்து உணராததைக் கவலையுடன் பார்க்கிறேன். தேனிசைத் தென்றல் தேவாவின் ஆரம்பகாலத்துப் பாடல்களில் குறிப்பாகக் கிராமிய மணம் கொண்ட பாடல்களில் கவிஞர் காளிதாசன் கொடுத்த பங்களிப்பு மிகப் பெரிது. அவரை வானொலிப் பேட்டியெடுக்கப் பல்லாண்டுகளாகத் தேடியும் எனக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. இறப்புச் செய்தி தான் வந்து சேர்ந்தது பெருந்துயரம்.

பாடகர் என்ற வகையில் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பை ரசிக உலகம் கவலையோடு எதிர்கொண்டது. 
ஒரு சில பாடல்கள் பாடிச் சென்றாலும் "அம்மா என்றால் அன்பு" பாடல் வழி பிரபலமாகிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இழப்பையும் தமிழ்த் திரையிசையின் துயர் பகிரும் பக்கங்களில் பதிய வேண்டும்.

இசைத்தட்டையும், ஒலி நாடாவையும் தேடி ஓடிக் கேட்ட காலம் கடந்து இன்று தனிப் பாடல் பகிர்வு, பின்னர் கொஞ்சக் காலம் இடைவெளி விட்டு
அனைத்துப் பாடல்களும் வெளியீடு என்று YouTube ஐ நம்பிய பொறிமுறை அமைந்திருக்கிறது. குறித்த பாடலின் உருவாக்கத்துக்கு முந்தியே அவற்றை ஒலியேற்றும் போது வரிகளை ஆங்கிலத்தில்  கொடுப்பது (தமிழிலும் கொடுக்கும் இரட்டை முறைமை வர வேண்டும்) , பாடகர், படம் மட்டுமன்றி பாடலாசிரியர், இசையமைப்பாளர், இன்னும் குறித்த பாடலுக்குப் பின்னால் தொழில் நுட்ப ரீதியில் உழைத்தவர்களின் விபரங்களை அந்தந்தப் படங்களின் பாடல் உரிமம் பெற்ற நிறுவனங்களே உயர் ஒலித்தரத்தில் கொடுப்பது நல்ல விடயம்.
அத்தோடு iTunes மற்றும் Google Play வழியாகவும் கட்டண முறையில் கேட்கும் முறைமை இயங்கினாலும் அவற்றைத் தமிழ்ச் சூழல் உள்வாங்குவது மிகவும் குறைவாக இருப்பதையே அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில் Doopadoo தளம் http://www.doopaadoo.com/அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 9 மாதங்களுக்குள் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இது Raaga மற்றும் Saavn இசைத்தளங்களின் பாவனையாளரைக் கணிசமாக உள்வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரபல பாடகர்கள், பாடலாசிரியர்களால் இந்த Doopadoo தளம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளதுடன் படங்களின் எழுத்தோட்டத்திலும் கூட விளம்பரப்படுத்தப்படுலின்றது.

தற்போது US மற்றும் Australia வில் கிட்டும் YouTube Red எனும் முறைமை எதிர்காலத்தில் பாரிய இசை நுகர்வோர் சந்தையை உள்வாங்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. 

YouTube Red இல் என் இசை அனுபவம் இதோ

கடந்த சில மாதங்களாக கட்டற்ற இன்னிசையைப் பருக ஒரு புதிய வழித்தடத்தைக் கண்டுள்ளேன். அதுதான் YouTube Red.
பாடல் பிரியர்களுக்கு இதுவொரு அருமையான படைப்பு. பணியிடம் நோக்கிய பயணத்தின் போது YouTube இல் பாட்டுக் கேட்டுக் கொண்டே தட்டச்சு வேலைகளோ அல்லது சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது என்பதோ சாத்தியமில்லாத ஒன்று. 

பாடல் கேட்பதற்கு முதல் தெரிவாக YouTube ஐ நாடுவதற்குக் காரணம் விரும்பிய பாடலை அந்த நேரத்தில் இருக்கும் நமது மனவோட்டத்துக்கேற்ப கேட்க முடிவது தான். அத்தோடு  எத்தனை பாடல்களைத் தான் கைப்பேசியில் நிரப்பி வைப்பது? இப்போது புதிய பாடல்களைக் அதி திறமான ஒலித்தரத்தில் YouTube இல் தான் குறித்த படப் பாடல்களின் ஒலிப்பதிப்பு உரிமம் பெற்ற நிறுவனங்களே வெளியிடுகின்றன. அத்தோடு பழைய, இடைக்காலப் பாடல்களையும் மேம்படுத்தப்பட்ட ஒலியோடு தனி நபர்கள் மற்றும் இளையராஜாவின் அதிகாரபூர்வப் பக்கம் போன்றவை கொடுக்கின்றன. கட்டற்ற இலவசமான சேவை என்பதால் இது சாத்தியம். எனக்கெல்லாம் SoundCloud காரன் செய்த சந்தா மோசடியால் இப்படியான தளங்களை விட்டு YouTube தான் கதி என்று ஆகிவிட்டது.

Smart Phone யுகம் வந்ததில் இருந்து பெருங்குறையாக இருந்தது சமகாலத்தில் YouTube இல் காணொளியை இயக்கி விட்டு இன்னொரு காரியத்தைச் செய்ய முடியாத நிலை. இந்த Multitasking முறைமைக்கு (Background Play) YouTube Red வழியேற்படுத்துகிறது. இப்போதெல்லாம் ஒரு பாடலைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பின்னணியில் YouTube இல் பாடலை ஒளிக்க(ஒலிக்க) விட்டு அதை ரசித்தவாறே iPhone Notes இல் எழுத ஆரம்பிப்பேன். 

YouTube இல் ஒரு பாடலைக் கேட்க ஆரம்பிக்கும் போதோ அல்லது ஒரு நிகழ்ச்சி/படத்தைப் பார்க்கும் போதோ இடையில் விளம்பரம் வந்து அறுக்கும் என்ற நிலையும் YouTube Red இனால் களையப்பட்டுள்ளது.

இன்னொரு மிக முக்கியமான அனுகூலமாக YouTube இல் விரும்பிய பாடலையோ, படத்தையோ Offline  பாவிக்க வழி செய்கிறது. இணைய இணைப்பு இருக்கும் போது வேண்டியதை Offline Video வாக இறக்கி விட்டு, இணையப் பாவனையைச் சேமிக்க வேண்டி இந்த முறைமையைப் பயன்படுத்தலாம். அத்தோடு பயணம் போகும் போது iPad இல் YouTube இலிருக்கும் தேவையான படங்களை இறக்கி விட்டுப் பார்க்கலாம்.

இந்த YouTube Red பரவலான கவனத்தை ஈர்த்து வெற்றிகரமான செயலியாக அமையும் பட்சத்தில் எதிர்காலத்தில் நேரடி ஒலி, ஒளிபரப்புகள் கூடத் தங்கு தடையின்றி அஞ்சல் செய்யும் வாய்ப்பு அதிகமாகும். அத்தோடு பாடல்களைக் கேட்பதற்கான ஒரே செயலியாக இதையே சார்ந்திருக்கும் வாய்ப்பும் பெருகும். YouTube Red மாதாந்தக் கட்டணமாக 10 அமெரிக்க டாலர் அறவிடப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு YouTube Red சென்று சேர்ந்துள்ளதா தெரியவில்லை. அப்படியாயின் அந்தந்த நாட்டுக் கணக்கு வழக்கின்படி நியாயமான கட்டணத்தை அறவிடலாம்.

சரி இனி 2016 ஆம் ஆண்டில் மூத்தவர்களும் இளையவர்களுமாகக் கொடுத்த பாடல்களில் வென்றதும், மனதில் நின்றதும், நொந்ததும் என்று அடுத்த பகிர்வுகளில் பார்ப்போம். இது என் தனி ஆவர்த்தனம் என்பதால் பகிர்வில் கொடுக்கப் போகும் பாடல்களில் பெரும்பாலானவை சுய ரசனை, என் காதுக்கெட்டிய வானலைப் பகிர்வுகளாக இருக்கும்.

முதலில் இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்து இன்னும் வெளிவராத படத்தில் இருந்து மனதைக் கொள்ளை கொண்ட பாடலோடு. அந்தப் பாடல் எதுவென்பதை அறிய அடுத்த பதிவு வரை காத்திருங்கள் 😀

0 comments: