Pages

Thursday, June 16, 2016

பாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய "கண்ணா நீ எங்கே"

பாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய
🎻 கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே 👧🏼🐇🍁

எண்பதுகளின் இலங்கை வானொலிப் பிரியர்கள் மறக்கவொண்ணாத பாடல்களில் ஒன்று "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே". 
ருசி கண்ட பூனை திரைப்படத்துக்காக பாடகி எஸ்.ஜானகி மழலைக் குரலாக மாறிப் பாடிய 
இந்தப் பாடல் அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டது. பின்னாளில் இந்தப் பிரபல மழலைக் குரலில் எஸ்.ஜானகி "டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே" https://youtu.be/HNoIw28F5zg பாடலைப் பாடுகையில் இவர் குட்டிப் பையனாகவும், மலேசியா வாசுதேவன் தந்தையாக அமையும் வண்ணம் கங்கை அமரன் இசையில் மெளன கீதங்கள் திரைப்படத்துக்காக இசையமைக்கப்பட்டது.

"கண்ணா நீ எங்கே" பாடலுக்குப் பின்னால் பலரும் அறியாத செய்தி ஒன்றும் இருக்கிறது. இந்தப் பாடலைப் பாடியது மட்டுமன்றி எழுதியதும் எஸ்.ஜானகி தான் என்பதே அது.
பஞ்சு அருணாசலம் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த "ருசி கண்ட பூனை" திரைப்படத்தை இயக்கியவர் அவரால் இயக்குநராக "கல்யாண ராமன்" திரைப்படத்தில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.என்.ரங்கராஜன் அவர்கள்.
இந்தப் படத்தில் இன்னொரு புதுமை பி.சுசீலா, எஸ்.ஜானகி பெண் குரல்கள் தவிர்த்துப் 
 பின்னணி பாடிய ஆண்குரல் இசைஞானி இளையராஜா மட்டுமே. படத்தின் பின்னணி இசையிலும் இளையராஜாவின் ஆலாபனை சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.

முழு நேரப் பாடகரே கவிஞராக இருப்பது என்பது அந்தக் காலத்தில் புதுமையானதொரு விடயம். இன்றைய தனுஷ் காலத்தில் இதெல்லாம் பழகிப் போன சமாச்சாரம்.
ஆனால் பாடலின் காட்சித் திறன் அறிந்து பாடல் எழுதும் வல்லமை கொண்ட பாடகரைத் தமிழ்த் திரையுலகம் கண்டது புதுமை.
முன்னர் நண்டு திரைப்படத்துக்காக பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ் எழுதிய ஹிந்திப் பாட்டு அத்தகையது. அந்தப் பாடல் இது தான் https://youtu.be/yUI1FLexJrY

திரையுலகின் சகலகலாவல்லி என்று சிறப்பிக்கப்படும் பி.பானுமதி நடிகை, பாடகி, பாடலாசிரியை, இசையமைப்பாளர், கதாசிரியை, இயக்குநர்  என்ற பன்முகம் கொண்டவர். இந்தியாவின் முதல் பெண் திரைப்பட இயக்குநர் என்ற பெருமையைக் கொண்டவர்.

எஸ்.ஜானகி முன்னணிப் பாடகியாகப் பரவலான ரசிக நெஞ்சங்களைத் தனதாக்கிக் கொண்டவர், ஜீவ மரணப் போராட்ட, என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளராகவும் இயங்கியிருக்கிறார். 
ருசி கண்ட பூனை படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களே மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் இருக்கின்ற போது, அதே படத்தில் பஞ்சு அருணாசலம், கங்கை அமரன்  ஆகியோர் மற்றைய பாடல்களை எழுத "கண்ணா நீ எங்கே" பாடலை எஸ்.ஜானகி எழுதிப் பாடியது புதுமை என்பதற்கு இன்னொரு நியாயம் கற்பிக்கலாம், அது என்னவெனில் அந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சூழல். 
படத்தைப் பார்த்தவர்களுக்கு பாடல் திரையில் வரும் பின்புலத்தை ஒட்டிய வரிகளைப் பொருத்திப் பார்த்துச் சிலாகிப்பர். கிருஷ்ண ஜெயந்தி காலத்தில் வானொலிகளில் இந்தப் பாடலை ஒலிபரப்புமளவுக்குப் பின்னாளில் போற்றப்பட்ட சிறப்பு மிகுந்தது.
சரி, இனிப் பாடல் வரிகளோடு எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே" பாடலைக் கேட்டு ரசிப்போம்.

https://youtu.be/HFDzZBCT0OI

0 comments: