Pages

Saturday, February 20, 2016

மலேசியா வாசுதேவன் 💐 பூங்காற்று திரும்பாத ஐந்து வருடங்கள்


பாட்டிசைக் கலைஞர் மலேசியா வாசுதேவன் இறந்து இன்றோடு ஐந்து வருடத்தைத் தொட்டு விட்டது.

எத்தனையோ பாடகர்கள் பரவசப்படுத்தியிருந்தாலும் மலேசியா வாசுதேவன் ஒலிக்கும்போதெல்லாம் "எங்கள் அண்ணர் குரல்" என்று உரிமையெடுத்துக் கொள்ளும் மனது
என்று ஒரு ட்விட்டைச் சில நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தேன்.

இன்று காலை நான் படைத்த "விடியல்" வானொலி நிகழ்ச்சியிலே அவர் தம் பாடல்களோடு மானசீக நினைவுப் பகிர்வை வழங்கியிருந்தேன்.
பல்வேறு நாடுகளில் இருந்து நேயர்கள் இணைந்து தம் பகிர்வை வழங்கிக் கொண்டிருந்தார்கள். நிறைவாக "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலை ஒலிபரப்புகிறேன். நிகழ்ச்சி முடிவடையச் சில நிமிடத் துளிகளே இருக்கிறது ஆனாலும் மலேசியா வாசுதேவன் பாடிய பகுதி இன்னும் வரவில்லை. அப்போது தியாகேசன் என்ற நேயர் 
"பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே" என்று ஆரம்பித்து மலேசியா வாசுதேவன் பாடிய வரிகள் முழுதையும் தன் இனிய குரலால் பாடிச் சிறப்புச் சேர்த்தார். நெகிழ்ந்து விட்டேன் நான். இப்படியான எதிர்பாராத அனுபவங்கள் வாழ்நாள் பேறு.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டிருந்த பின்னணிப்பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் தனது 67 வயதில் தனது இதயத்துக்கு நிரந்தர ஓய்வு கொடுத்திருக்கின்றார். 
இவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட சேதி பல மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தாலும் மீண்டும் மிடுக்கோடு சங்கீத மகா யுத்தம் போன்ற இசை நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது மலேசியா வாசுதேவன் என்னும் கலைஞனை நாம் அவ்வளவு சீக்கிரம் இழக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பை இன்று பொய்யாக்கிவிட்டார். 

மலேசியா வாசுதேவனைப் பொறுத்தவரை அவர் தமிழ்த்திரையுலகுக்கே தன்னைத் தாரை வார்த்துக் கொண்ட பாடகர். எண்பதுகளிலே சிவாஜி கணேசனுக்கும், ரஜினிகாந்த்திற்கும் பொருந்திப் போனது அவர் குரல். என்னம்மா கண்ணு போன்ற நையாண்டிப் பாடல்கள் ஆகட்டும் , அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, அடி ஆடு பூங்கொடியே போன்ற மென்மையான உணர்வு சொட்டும் பாடல்களாகட்டும் மலேசியா வாசுதேவன் தனித்துவமானவர். 

குறிப்பாக முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.
இந்தக் கலைஞனுக்கு அஞ்சலி பகிரும் விதமாக முன்னர் நான் பகிர்ந்து கொண்ட இடுகைகளில் இருந்து சில பகிர்வுகள், இந்தப் பாடல்களைப் பதிவுக்காக மீளக் கேட்கும் போது இன்னும் இன்னும் இவர் இழப்பின் சோகம் பற்றிக்கொள்கிறது :(

நண்டு படத்தில் மலேசியா வாசுதேவனின் "அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா" என்னும் அற்புதக் குரல்

 http://www.youtube.com/watch?v=vvGoH5zLvg4&sns=tw 

80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள். 

ஒரு காலகட்டத்தில் T.M.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.

அத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது. 

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி "சும்மா தொடவும் மாட்டேன்"
 http://www.youtube.com/watch?v=TTcntiPkaKE&sns=tw 

சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குநரும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். "அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லை என்பது எவ்வளவு கொடுமை.

நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.
 http://www.youtube.com/watch?v=N0mHQ4EDHDY&sns=tw 

சாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்

முதலில் "ஆகாயம் பூமி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.
 http://www.youtube.com/watch?v=1wVjoIrspiM&sns=tw 

சாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். "மாலை வேளை ரதிமாறன் வேலை" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.
 http://www.youtube.com/watch?v=gR7mRvdnXDE&sns=tw 

மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் "ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். 
 http://www.youtube.com/watch?v=7L9eXOrbLrE&sns=tw 

அதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய "இந்த அழகு தீபம்" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்
 http://www.youtube.com/watch?v=dA_20yp0jmQ&sns=tw 

நிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது
 http://www.youtube.com/watch?v=W7N5Cv2P7F8&sns=tw 

ராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா "ஆயிரம் மலர்களே" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.
 http://www.youtube.com/watch?v=IqGGZCqxESs&sns=tw 

சுவரில்லாத சித்திரங்கள்" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் "காதல் வைபோகமே" பாடல் தனித்துவமானது. மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.
 http://www.youtube.com/watch?v=mQdqhRac_PU&sns=tw 

என்றோ கேட்ட இதமான ராகங்கள் தொகுப்பில்

"அடுத்தாத்து ஆல்பட்" பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் "இதயமே.... நாளும் நாளும் காதல் பேச வா...." இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும். 

வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்

இப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு

ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்

இப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில் 

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

எனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.
 http://www.youtube.com/watch?v=gi63VBk345s&sns=tw
.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு பிரபா, நெடு நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிக்கும் போது நெகிழ்கிறேன். எனக்கும் திரு வாசுதேவனின் குரல் மிகப் பிடித்த ஒன்று. அடுத்த வாரிசு படத்தில் ஒரு பாடல்
மிகப் பிரபலம்.கம்பீரமும் மென்மையும் இணைய முடியும்
என்பதற்கு ஒரே அடையாளம் அவர். மிக நன்றி மா.
அத்தனை பாடல்களும் அமுதம். கோடை காலக் காற்றே நான் ரசித்து ருசிப்பேன்.
லிஸ்ட் மிக நீளம்.அதனால் எழுதவில்லை.

Child Artists said...

அன்பு பிரபா , தங்கள் தளம் சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம் . மிக நன்றாக உள்ளது .இளையராஜாவின் கண்ணுக்கொரு வண்ணக்கிளி பற்றிய தகவல் தங்களின் பதிவுகளில் கண்டு பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன் . மலேசியா வாசுதேவன் பற்றிய பதிவு அருமை . மேலும் 1984ம் வருடம் இளையராஜாவின் இசையில் வந்த 'நியாயம் ' என்ற படத்தில் நான்கு பாடல்கள் உண்டு . அதில் மூன்று பாடல்கள் திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது தான். அதிலும் கருது காத்தாடுது குருவி கூத்தாடுது மற்றும் வெட்கப்பட வேணாம் ஏ வெட்டுகிளியே ஆகிய பாடல்கள் அருமையானவை . அதிகம் கேட்கபடாத இளையராஜா பாடல்களில் இவைகளும் அடக்கும் . மிக்க நன்றி பிரபா
செந்தில் சிகாமணி ஸ்ரீவில்லிபுத்தூர் .

Child Artists said...

அன்பு பிரபா , தங்கள் தளம் சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம் . மிக நன்றாக உள்ளது .இளையராஜாவின் கண்ணுக்கொரு வண்ணக்கிளி பற்றிய தகவல் தங்களின் பதிவுகளில் கண்டு பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன் . மலேசியா வாசுதேவன் பற்றிய பதிவு அருமை . மேலும் 1984ம் வருடம் இளையராஜாவின் இசையில் வந்த 'நியாயம் ' என்ற படத்தில் நான்கு பாடல்கள் உண்டு . அதில் மூன்று பாடல்கள் திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது தான். அதிலும் கருது காத்தாடுது குருவி கூத்தாடுது மற்றும் வெட்கப்பட வேணாம் ஏ வெட்டுகிளியே ஆகிய பாடல்கள் அருமையானவை . அதிகம் கேட்கபடாத இளையராஜா பாடல்களில் இவைகளும் அடக்கும் . மிக்க நன்றி பிரபா
செந்தில் சிகாமணி ஸ்ரீவில்லிபுத்தூர் .