'இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியைத் தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ'
வானொலி ஒலிபரப்புக் கூடத்துள் வந்த வேகத்தில் அப்போது இந்தப் பாடலைத் தான் அன்றைய நாளின் முதல் பாடலாக வானலையில் தவழ விடுகிறேன்.
மெல்பர்னில் அதுவரை காலமும் படிப்பில்
செலவழித்து விட்டு சிட்னியில் வேலையில்லாப் பட்டதாரியாக வந்து ஆத்ம திருப்திக்காக ஊதியமற்ற வானொலி வாகனத்தில் ஏறிச் சவாரி செய்த Y2K கால கட்டம் அது. இந்தப் பாடல் ஏனோ என் மனநிலையைப் பாடுமாற் போல இருந்தது. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கும் எனக்கும் அன்று தான் முதல் சந்திப்பு. தனியான இருந்த என்னை அரவணித்து ஆறுதல் சொல்லுமாற் போல என்னவொரு திடீர் பந்தம் இந்தப் பாட்டுக்கும் எனக்கும்?
'சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் கனவைக் கொஞ்சம் சுமக்குமோ'
"கண்ணுக்குள் நிலவு' திரைப்படத்தின் பாடல்கள் அப்போது தான் மலேசியாவின் அலையோசை இசைத்தட்டு நிறுவனத்தின் வெளியீடாகப் பாலித்தீன் பொதி செய்யப்பட்டு சிட்னிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வானொலி நிலையத்துக்கு வரும் வழியில் அந்தக் கடையை எட்டிப் பார்த்தபோது இதைக் கண்ட போது கண்ணுக்குள் நிலவே தான். சுடச் சுட அந்தப் பாடலை ஒலிபரப்பிய நிகழ்வை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது என் பிரத்தியோக இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இந்த இசைத்தட்டு.
'கண்ணுக்குள் நிலவு' படத்தில் "நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்" அதுவும் மறக்கக் கூடியதா என்ன?
இந்தப் படம் வந்த போது உடனடிப் பிரபலமானது என்னவோ "ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது" பொதுவாகவே அதிக ஜனரஞ்சக அந்தஸ்துப் பெறும் பாடல்களைக் கொஞ்சம் நிதானமாகவே அனுபவிக்கலாமே என்ற என் கொள்கையில் இந்தப் பாட்டும் விதிவிலக்காக அமையவில்லை.
"தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
விழியோரம் வழி வைக்கிறேன்,
என்னைத் தாலாட்ட வருவாளா"
"கிறுகிறுவெண்டு படித்து முடித்து விட்டு உடனேயே நாட்டுக்குப் போகவேண்டும்" என்று என் மனச்சாட்சியை உறுக்கிக் கொண்டிருந்த காலமது. மெல்பர்ன் வந்து இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருக்கிறது ஆனால் இரண்டு யுகங்கள் போலத் துன்புறுத்திய தனிமையும், இரவைப் பகலாக்கித் தொழில் சுமந்து, பகலில் பாடப்புத்தகம் சுமந்து கொண்டிருந்த நாட்கள். இதுவே ஒரு யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகமாகவோ, பேராதனை வளாகமாகவோ இருந்தால் பச்சைக் குடை அசோக மரங்களில் கீழ் காதல் மொழி பேசிக் கொண்டிருக்கும். இங்கோ கற்பனைக் கோட்டை எழுப்பி
"விழியோரம் வழி வைக்கிறேன்"
'காதலுக்கு மரியாதை" காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு பாடலாக அதே படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மாறி மாறி என் விருப்பத் தேர்வில் முன் நிற்கும். இப்போது அது
"ஏ இந்தா இந்தா இந்தா
ஐயா வூடு
தெறந்து தான் இருக்கு"
கேட்கும் போதே இடம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை.
"நீயா அட நானா நெஞ்சை முதன் முதல் இழந்தது யார் ந ந ந ந ந
காதல் எனும் ஆற்றில் இங்கு முதன் முதல் குதித்தது யார்,
தென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா"
பாடல் ஆரம்பிக்கும் போது ஒரு வாத்தியம் கீச்சிட ஆரம்பிக்குமே அந்த நேரமே கண்களை மூடி இசை வாகனமேறி கனவுலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் சீடி பொருத்திய வாக்மேன் மடியில் கிடக்க, மேசையில் ஒருக்களித்துப் படுத்துக் கண் மூடியபடி பாடலோடு ஐக்கியமாகியிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் படம் வந்து பதினைந்து ஆண்டுகளைத் தொடப் போகிற பாட்டு ஆனால் இன்னும் பதினைந்து ஆண்டுகள் போனாலும் பருவக் குமரியாகத் தான் இருக்கும் போல இந்தப் பாட்டு, "அள்ளிக் கொடுத்தேன் மனதை"
இசைஞானி இளையராஜாவின் 'காதலுக்கு மரியாதை' படத்தில் இளங்கவி பழநி பாரதியின் பாடல்கள் என்று எழுத்தோட்டத்தில் காட்டி வெற்றிக் கூட்டணி அமைக்கிறார்கள். நாயகன் விஜய் இன் திரையுலக ஆரம்ப வாழ்வின் திருப்புமுனைப் படங்களில் ஒன்று. சங்கிலி முருகன் தயாரிப்பு, அப்படியே விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடுத்த தசாப்தம் வரை வெற்றியை அள்ளிக் கொட்டப் பிள்ளையார் சுழி போட்ட படம்.
"கண்ணுக்குள் நிலவு" படத்திலும் அதே பாசில், இளையராஜா, விஜய், கூட்டணி
இங்கேயும் முழுப் பாடல்களும் பழநிபாரதிக்குச் சீர் செய்ய, அவரும் இன்றளவும் இந்தப் பாடல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு வரிகளை அணிகலனாக்கியிருக்கிறார் ராஜாவின் முத்தான மெட்டுகளை வைத்து.
இயக்குநர் பாசிலின் அந்த இரண்டு படங்களோடு அவரின் சீடர் சித்திக் இன் "ப்ரெண்ட்ஸ்". அதிலும் விஜய், இசைஞானி இளையராஜாவோடு, இளங்கவி பழநி பாரதியே முழுப்பாடல்களையும் ஆக்கித் தந்தார்.
"இரவு பகலைத் தேட"
http://www.youtube.com/watch?v=4soLRlhOfPc&sns=tw
"என்னைத் தாலாட்ட வருவாளோ"
http://www.youtube.com/watch?v=8SnPN4-NF9I&sns=tw
"தென்றல் வரும் வழியை"
http://www.youtube.com/watch?v=tOPjl71yoaQ&sns=tw
2 comments:
அருமையான பகிர்வு அன்பரே..சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள்.."இரவு பகலை தேட.." எப்போது கேட்டாலும் ஒரு இனம்புரியாத சோகம்/சந்தோஷம்..அதிலும் அண்டை நாட்டில் வாழும் என்னைப்போன்றோருக்கு...(இன்று வரை அதன் காணொளி பார்த்ததில்லை..பார்க்கவும் விரும்பவில்லை..)
ஒவ்வொரு வரியும் முத்தானவை..
"நாடோடி மேகம்...ஓடோடி இங்கே..யாரோடு உறவாடுமோ..??"
"..கடலை சேரா நதியைக் கண்டால்...
தரையில் ஆடும் மீனைக் கண்டால்..
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்.."
"கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்..
தனியாக அழகில்லையே.."
இந்த வாரம் முழுக்க ஒரே பாடல்தான்..ரிப்பீட்டு...!!
நன்றி
மிக்க நன்றி நண்பர் யோகேஷ் உங்கள் மனப்பகிர்வை அறிந்தேன்
Post a Comment