Pages

Wednesday, June 10, 2015

பாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு


பாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு சொல்லு

"காதல் சாதி" திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்து முழுமையாக வெளிவராத படங்கள் என்ற பட்டியலில் அடங்கும். இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்க நடிகர் உதயா. பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் இதுவாகும்.

இந்தப் படத்திற்காக மொத்தம் ஒன்பது இசையமைக்கப்பட்டவை என்பதை நினைக்கும் போதுதான் முடங்கிவிட்ட படத்தால் அருமையான பாடல்களும் விழலுக்கு இறைத்ததாகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும். கஸ்தூரிராஜா இதற்கு முன்னர் தேவா இசையில் "மவுன மொழி" படத்துக்காகப் பத்துப் 
பாடல்களைப் பெற்றுப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

"காதல் சாதி" திரைப்படப் பாடல்கள் 2001 ஆண்டு வாக்கில் வெளியான போது அந்தக் காலகட்டத்தில் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரணி ஆகியோர் பாடகராக ஒரு சில படங்களில் பாடி வந்தனர். இந்தப் படத்திலும் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது. தவிர இசைஞானி இளையராஜா, கோவை கமலா, உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.
பாடகி மஹதியின் குரலை மேற்கத்தேயப் பாணியில் கேட்டுப் பழகிய காதுக்கு இவரின் ஆரம்பகாலப் பாடலான "என்னை மறந்தாலும்" பாடலை கேட்கும் போது புதுமையாக இருக்கும்.

"மனசே என் மனசே" உன்னிகிருஷ்ணன், பவதாரணி பாடிய ஜோடிப் பாடல் அப்போது பிரபலம்.

பாடகர் கார்த்திக் சன் டிவியில் அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கி வந்த "பாட்டுக்குப் பாட்டு" மூலம் மேடை வாய்ப்பைப் பரவலாக்கிக் கொண்டவர். ஒருமுறை தன் பேட்டியில் "காதல் சாதி" படப்பாடல் தான் தனக்குக் கிட்டிய முதல் வாய்ப்பு என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் "ஸ்டார்" படத்தில் வந்த "நேந்துகிட்டேன்" பாடல் சமகாலத்தில் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பாகக் கார்த்திக்குக்கு அமையவே அதுவே அவரின் அறிமுகப்பாடலாக அமைந்துவிட்டது. இருப்பினும் இளையராஜா, ரஹ்மான் என்ற இரு பெரும் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தனது அறிமுகத்தைக் காட்டும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிட்டும்.

"காதல் சாதி" படத்தில் பாடகர் கார்த்திக் 
மூன்று பாடல்களைப் பாடியொருக்கிறார்.
அதில் தனித்துத் தெரிவது "காத்தே காத்தே என் காதோடு சொல்லு".
நேற்று ஆதித்யா டிவியின் பழையதொரு வீடியோவை நோண்டி எடுத்தபோது அதில் நகைச்சுவை நடிகர் "காதல்" சுகுமார் பேசிக் கொண்டிருந்தார். காதல் சாதி தான் தன்னுடைய முதல்படம் என்றும் அதில் பாடியிருப்பதாகவும் அவர் குறிப்பிடவே, அந்த வீடியோவை ஓரமாகக் கிடப்பில் போட்டுவிட்டு "காதல் சாதி" பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். "காதல்" சுகுமார் தானும் பாடியதாகக் குறிப்பிட்ட பாடல் இந்தக் "காத்தே காத்தே", அதில் கோஷ்டிப் பாடகராகப் பாடியிருக்கிறார்.

2000 களில் என் வானொலி நிகழ்ச்சிகளில் அளவுகணக்கில்லாமல் நான் ஒலிபரப்பிய பாட்டு. புல்லாங்குழல் இசையோடு தொடரும் போது அப்படியே ஏகாந்தத்தை மாற்றாமல் இறுக்கிப் பிணைத்திருக்கும் இசையும், எளிமையான வரிகளும்

"தன்னந்தனியா நானு அது போல் இந்தக் காடு" என்ற வரி வரும் போது எனது வானொலி நிகழ்ச்சி நள்ளிரவைத் தாண்டியிருக்கும். ஒலிபரப்புக் கூடத்துள் நானும் தனிமையில் தான் அப்போது, வேணுமென்றால் "தன்னந்தனியா நானு அது போல் இந்தப் பாட்டு" என்று வைத்துக் கொள்ளலாம் என்னும் அளவுக்கு நெருக்கமான பாட்டு இது.

 http://www.youtube.com/watch?v=c9N5MdLZNhQ&sns=tw 

0 comments: