Pages

Friday, September 19, 2014

மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில்

போன ஜூன் மாசம் தான் சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்து போனவர் இப்படித் தன் 45 வது வயதில் திடீரென்று நம்மைவிட்டு மறைவார் என்று யார்தான் நினைத்திருப்பார்கள். சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்த கலைஞர்களை வானொலிப் பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்த்த போது மாண்டலின் ஶ்ரீநிவாஸ் ஐ வானொலிப் பேட்டியெடுக்கவே பெரிதும் முனைந்தேன். ஆனால் அவரின் வருகை விழாவுக்கு முந்திய நாள் என்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் பேட்டி தவிர்க்கப்படவே, அடுத்தமுறை வருவார் தானே என்று காத்திருந்தேன்.

மிக இளவயதிலேயே சாதித்துக் காட்டியதாலோ என்னமோ சீக்கிரமே நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டார் என்ற பேரதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.

மாண்டலின் ஶ்ரீநிவாஸ் என்ற ஆளுமை 90 களின் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போது அப்போது சினிமா இசையைத் தவிர வேறெதையும் தொடாத என்னைக் கேட்க வைத்தது அவரின் வாத்திய இசைத் தொகுப்பு ஒன்று. கொழும்பின் பம்பலப்பிட்டி கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் தூசு படிந்த ஒலி நாடாவை வாங்கி வந்து போட்டுக் கேட்ட நினைவுகள் இன்னும் என் மனக்கிணற்றில் தேங்கியிருக்கின்றன.
இளையராஜாவோடு சேர்ந்து  இவர் பணியாற்றிய அந்தச் சிறப்பு அனுபவங்களையும் பேட்டி வழியாகத் தேக்கி வைக்க நினைத்திருந்தேன்.

மாண்டலின் இசையை நம் வானொலி நிகழ்ச்சிகளில் மன அமைதியைத் தரும் பகிர்வுகளுக்குப் பின்னணி இசையாய் ஒலிக்கவிட்டுக் கொடுப்போம். இனிமேல் அது ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகமே வெளிக்கிளம்பிச் சஞ்சலப்படுத்தும். 

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மைக்கல் ஜக்சன் இப்போ என் மனதைச் சஞ்சலப்படுத்திய மரணம்.
1985 ல் இந்திய விழாவுக்கு வருகை தரவுள்ளார் என விளம்பரத்தில் பார்த்தேன். ஜேசுதாஸ், பட்டம்மாள், வலயப்பட்டி, வீணை காயத்திரி எல்லோருக்கும் பதிவு செய்து விட்டேன். இவருக்கு
5 நாள் நிகழ்ச்சி , எனக்கு இவரை யாரெனத் தெரியாது.
5 நாளில் கடைசிக்கு முதல் நாள் இரவு , குமுதம் அரசு கேள்வி பதிலில் ஒரு கேள்வி!, மென்டலின் சீநிவாஸ் பற்றி உங்கள் கருத்து. அரசு பதிலிட்டுள்ளார்: அவர் கையில் உள்ளது மென்டலீனோ, மந்திரக்கோலோ அறியேன்.
கடைசி நாளிரவு கச்சேரிக்குச் சென்றேன். கடைசியில் திருப்புகழ் வாசிக்கும்படி கேட்டேன். வாசித்தார். மேடையில் அவர் என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்து வாசித்தார்.
நிகழ்ச்சி முடிவில் எத்தனை வயது எனக் கேட்டபோது, "போட்டீன் " என ஆங்கிலத்தில் கூறினார்.
அன்று முதல் அவர் ரசிகன் , அதன் பின் இருதடவை பாரிசில் நிகழ்ச்சி பார்த்தேன்.
அவரை நான் தியாகராஜ சுவாமிகளின் மறுபிறப்போ என பிரமிப்பேன். தியாகராஜ கீர்த்தனைகளுக்கு அவர் கொடுக்கும் ஜாலங்கள் என்னை அப்படி நினைக்கவைத்தது.
அவர் மேடையில் எப்போது புன்னகை ததும்ப வீற்றிருப்பார். பக்கவாத்தியக்கலைஞர்களை கண்ணாலெ
அரவணைத்து, அப்பப்போ சபாஸ் சொல்லி ஊக்கப்படுத்துவார்.
ஒரு நிறைவான கலைஞன் .
பாரிசின் மாநகர சபை மண்டபத்தில் 90 களில் நடந்த கச்சேரியில் ரசிகர்கள் எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி ஆர்பரித்து தம் மகிழ்வை வெளிக்காட்டியதை பார்த்து என்னுடன் வந்த என் நண்பன் ஆனந்தக் கண்ணீர் விட்டான்.
"நம் இசைக்கு இவ்வளவு வரவேற்பா" அவனால் நம்பமுடியவில்லை.
ஆம்...மேலைத்தேசங்களில் நம் இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. இவர் மென்டலின் நாதம் எனில் மிகையில்லை.
இவ்வளவு சொற்ப வயதில் இவர் மறைவை என்னால் ஒப்பமுடியவில்லை.
அவர் விட்டுச் சென்ற நாத வெள்ளம் என்றும் இருக்கும்.
அன்னார் இறைவனுடன் "இசை" ந்திருக்கட்டும்.
இசையருமை தெரியாத செவிடனையா -இயமன்.

Kasthuri Rengan said...

மாபெரும் கலைஞன்...
துயிலட்டும் நிம்மதியாய்