சமீபத்தில் பாடகர் மது பாலகிருஷ்ணன் சிட்னிக்கு வந்திருந்தபோது இடைவேளை
நேரத்தில் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிட்டியது. அப்போது என் விருப்பமாக
"எதிலும் இங்கு இருப்பான்" பாடலைப் பாடுகிறீர்களா என நான் வேண்டுகோளை வைக்க
அவர் "பாட்டு முழுசா ஞாபகம் இல்லை, கைவசம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் பாட்டு இருக்கு அதைக் கொடுக்கட்டுமா" என்றார். ஏமாற்றத்துடன்
தலையாட்டினேன். இப்படியான அரிய பாடல்களை பாடியவர்களும் சரி, மேடையில் மீளப்
பாடுபவர்களும் சரி ஏனோ கணக்கெடுப்பதில்லை. பாரதி படத்தின் பாடல்களிலே
எனக்கு "கேளடா மானிடா" , " நிற்பதுவே நடப்பதுவே" பாடல்களையும் தாண்டி
பெருவிருப்பில் முதலிடத்தில் இருப்பது இந்தப் பாடல்.
ஞான
ராஜசேகரன் படம் இயக்க வந்து ஜானகிராமனின் மோகமுள்ளை ஒரு வழி
பண்ணியிருந்தார். அதிலும் இசை ராஜா அதனைத் தொடர்ந்து பாரதி படத்தை இயக்க
ஆரம்பித்தபோதே சினிமா சமூகம் அவ்வளவு விருப்போடு இதை எதிர் நோக்கவில்லை.
ஆனால் இளையராஜாவைப் பொறுத்தவரையில் மோகமுள் படத்தைப் போலவே இந்தப்
படத்திலும் நேர்மையாக உழைத்தார். படத்தில் வரும் "மயில் போல பொண்ணு" பாடலை
மு.மேத்தா எழுதி பவதாரணி பாடி சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றுக்
கொண்டார். அதே போல் இன்னொரு பாடலான "எதிலும் இங்கு இருப்பான்" பாடலை
பாடலாசிரியர் புலமைப் பித்தன் எழுதியிருக்கிறார்.
பாரதியின் கதை சொல்லும் படத்தில் இப்படி இருவேறு பாடலாசியர்களைப் பாட்டெழுத வைத்ததும் புதுமை
அதிலும் இன்னொரு புதுமை, ஒரு தீவிர நாத்திகரை கடவுள் வாழ்த்துப் பாட
அழைத்தது. இது குறித்து பாடலாசிரியர் புலமைப்பித்தனும் ஒருமுறை விகடன்
பேட்டியில் சொல்லியிருக்கிறார். தன்னுடைய கொள்கையை விலத்தி இந்தல் பாடலை
எழுத்த வைத்தது தன் குருநாதர் பாரதி மீது கொண்ட குருபக்தியின் வெளிப்பாடென.
தன் வாழ்ந்த சமூகத்தில் கடவுளின் பெயரால் நிகழ்த்தும் செயல்களைக் கண்டு
அதை வெறுத்தார். ஆனாலும் கடவுளின் மீதான அன்பு எள்ளளவும் குறையவில்லை.
அந்தச் சூழலுக்கு வருமாற்போல ஒரு பாட்டு. சிவனின் பெருமையை அவரின் அங்க
இலட்சணத்தோடு இணைந்து வர்ணிக்கிறது. பாரதி ஒரு சமூகப்போராளிக்கான குரலை மது
பாலகிருஷ்ணன் என்ற மென்மையான குரல் வளம் மிக்க பாடகரைப் பாட வைத்து,
இசையையும் இன்னும் அடக்கமாகவே இருத்தி, வார்த்தைகளுக்குச் சிம்மாசனம்
இட்டிருக்கிறது ராஜாவின் இசை.
இங்கே தான் ஒரு தேர்ந்த
இசையமைப்பாளரின் தொழில் நுணுக்கம் துலங்குகின்றது. ஒரு பழுத்த
பக்திப்பழத்தால் கூட இவ்வளவு கட்டுக்கோப்பாக கடவுள் வாழ்த்துப் பாட
முடியுமா என எண்ணத் தோன்றும் கவிச்சுவை.
பாடல் ஆரம்பிக்கும் போது
கண்களை மூடிக்கொண்டால் தியான நிலைக்கு அமைதியாக இட்டுச்செல்லும் அப்படியே
2.48 நிமிடத்தில் உயரே வயலின் எழும்ப கூடவே ஆலாபனை செய்யும் வாத்தியங்கள்
திரை விலக்கி சாமி தரிசனம் தெரிய பஞ்சாராத்தி காட்ட எழுந்து கரங்கூப்பி
உளமுருகிப் பிரார்த்திக்கும் பக்தர் குழாம் போல.
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
வரிப்புலியதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கருநீலம் எனத் தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
சென்ற
நூற்றாண்டில் தமிழ்ச்சமூகம் பேர் சொல்ல எழுந்த பாட்டுப் போராளி பாரதியின்
நினைவு நாளில் அவரைக் குருவாக வரித்துக் கொண்ட புலவர் புலமைப்பித்தன்
கொடுத்த கட்டை விரலை ஆராதிப்பதும் பாரதிக்கு நாம் செய்யும் பெருமை தானே.
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியைத் தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
வரிப்புலியதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கருநீலம் எனத் தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதைக் கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
6 comments:
என்ன ஒரு அருமையான பாடல்! ஞாபகப் படுத்தியதற்கு நன்றி. இளையராஜாவின் இசை நுணுக்கங்களை எண்ணி எண்ணி வியக்கிறேன்!
பாரதி நினைவு நாளில் சுகமான பாடல் பகிர்வு அருமை.
பாரதி அவர் எழுதிய பாடல்களில் இருப்பார்.
எனக்கும், நிற்பதுவேக்கும் மேல் இந்த பாடல் பிடிக்கும் . தவம் போல் இசை, வரிகள் ஒன்றி இருக்கும். புலவர் புலமைப்பித்தன் மேல் மதிப்பு கூட்டிய பாடல்கள் இதுவும் , அமுதே தமிழே பாடலும்
மிக அரிதான பாடல் .மிக்க நன்றி .இதே போல் வாழ்த்துங்கள் என்ற திரைப் படத்தில் இடம் பெற்ற 'அருள் வடிவே ' என்கிற பாடலை அளிப்பீர்களா ?'நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய் ' என்ற வேண்டுதலும் 'கருணையில்லாதார் தோழமை வேண்டேன்'என்ற எண்ணமும் மிக மிக உயரியவை .பாடலைக் கேட்டு சுமார் 35ஆண்டுகள் ஆனாலும்கூட ஒருசில வரிகளும் ஜேசுதாஸ் அவர்களின் தேமதுர குரலும் இதயத்தின் அடிஆழத்திலும் ஒலிக்கின்றன .இலங்கை வானொலியின் இழப்பை உணர முடிகிறது .
* வருடத்திர்க்கு இப்படி ஒரு பாடல் வேண்டும் அந்த வருடமுழுவதும் பாடி களிக்க.*
என்றும்... எங்கும்.. எவ்விடமும்.. எக்காலமும்.. மறக்கமுடியா.. பாடல்.. வரி.. இசை.. குரல்... சிறப்பு
Post a Comment