Pages

Saturday, September 1, 2012

"தட்டத்தின் மரயத்து" ஒரு சுகானுபவம்

அனுபவப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் படித்துப் பழகியவனுக்கு அறிமுகப் படைப்பாளியின் படைப்பைப் பார்த்தபின் எழும் திருப்தியான சுகானுபவம் கிட்டியிருக்ககிறது இன்று பார்த்த மலையாள சினிமா "தட்டத்தின் மரயத்து" மூலம். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை எற்கனவே இணையத்தளங்கள், சஞ்சிகைகள் மற்றும் படத்தின் இயக்குநர் வினித் ஶ்ரீனிவாசனின் விகடன் பேட்டி ஆகியவை கிளப்பியிருந்தாலும், தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் வரை ஒருவித சந்தேக உணர்வே தொடர்ந்தது. காரணம் இப்போதெல்லாம் ஆகா ஓகோவென்று விமர்சனத்தில் கிளப்பப்படும் படங்களைப் பார்த்தபின் "கல்"அடிபடுவதுதான்.

வினோத் என்ற இந்துமத நாயர் பையனுக்கும் ஆயிஷா என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் வரும் காதல், தடைகளை மீறி அவர்கள் ஜெயித்தார்களா? என்ற சாதாரண ஒற்றைவரிக் கதைதான். ஆனால் படம் ஆரம்பித்த நிமிடம் முதல் இறுதிக் காட்சி வரை கட்டிப்போட வைக்கும் சுவாரஸ்யமிக்க காட்சியமைப்புக்கள், வசனம், ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே கூட்டணி அமைத்து அதகளம் பண்ணியிருக்கின்றன.

மலையாள சினிமாக்களில் நடிகர் தேர்வு என்று வரும்போது அதிகம் அவர்கள் மெனக்கெடுவதில்லை. K.P.A.C லலிதா, இன்னசெண்ட், சலீம்குமார் உள்ளிட்ட ஒரு தொகை நடிகர்களே பெரும்பாலான படங்களின் குணச்சித்திரங்களாக ஆக்கிரமிப்பர். ஆனால் இந்தப் படத்தில் நாயகன் நிவின் பெளலி (இரண்டாவது படம்), மனோஜ்.கே.ஜெயன், மற்றும் ஶ்ரீனிவாசன் தவிர்ந்த மற்ற எல்லோருமே மலையாள சினிமாக்களில் அதிகம் அறியப்படாதவர்கள். அதிலும் குறிப்பாக நாயகியாக வரும் அறிமுகம் இஷா தால்வார் என்னவொரு கச்சிதமான தேர்வு, முஸ்லீம் பெண் பாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு பிரபலங்களையே நினைத்துப்பார்க்க முடியாத அடக்கமான நடிப்பு. இப்படியான படங்களுக்குக் கூடவே ஒட்டும் நண்பன் என்ற சமாச்சாரத்துக்கு விதிவிலக்கில்லாமல் வரும் நடிகர் அஜூ வர்கீஸ் இன் நகைச்சுவையும் அளவான அழகு. மனோஜ் கே.ஜெயனுக்கு குரலை வித்தியாசப்படுத்திப் பேசுவதில் இருந்து படத்தின் ஓட்டத்துக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
நாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். நடிகர் ஶ்ரீனிவாசன் மலையாளத் திரையுலகின் எண்பதுகளில் இருந்து இன்று வரை தன்னளவிலான கெளரவமான பங்களிப்பைக் கதாசிரியராகவும், நடிகராகவும் வழங்கியிருக்கிறார். அவரின் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் பாடகராகவும், ஒரு சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டிருந்தாலும் இந்தப் படம் அவரைப் பொறுத்தவரை இவருக்கான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துக் கைகாட்டி விட்டிருக்கிறது.



மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களே துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் சூழல், மாபெரும் கதா நடிகன் மம்முட்டி "ஒய் திஸ் கொலவெறி" என்றெல்லாம் பஞ்ச் அடித்து ஓவர் ஹீரோயிசம் காட்டி எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற காலமிது. ஆனால் ரசிகர்களுக்கு, அது பழகிப்போன கதையாகக் கூட இருக்கட்டும் ஆனால் நேர்மையான விதத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. சக நடிகர் முகேஷ் உடன் நடிகர் ஶ்ரீனிவாசனும் இணைந்து 14 லட்சத்தில் எடுத்த படம் இன்று பத்துக் கோடியைத் தாண்டியிருக்கிறது இலாபம். (ஆதாரம் விக்கிப்பீடியா)

கதையோடு ஒட்டாது விலகி நிற்கும் நகைச்சுவை, வேண்டாத காட்சியமைப்பு எல்லாம் களைந்து கதையோட்டத்தோடு வரும் நகைச்சுவையிலும் நடைமுறை வாழ்வில் காணும் சினிமா, கிரிக்கெட் உதாரணங்களையெல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நாயகனுக்கும் ஓவர் ஹீரோயிசம் கொடுக்காமல் நம்மில் ஒருவராகப் பள்ளி நாட்களை அசைபோட வைக்கும் அளவுக்குக் குணாதிசியங்களைக் கொண்டு உருவாக்கிய பாத்திரம்.

இந்தப் படத்தின் பாடல்களை முன்னரேயே கேட்ட அனுபவம் இல்லாத நிலையில் ஒவ்வொரு பாடல்களும் கதையோடு பயணிக்கையில் இதில் எது நல்லது என்று மனக்கணக்கில் போடுமளவுக்கு முத்து முத்தான பாடல்கள். பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் ஷான் ரஹ்மான் நம்மை ஈர்க்கிறார். அவரைப்போலவே ஒளிப்பதிவாளர் ஜோமோன் T.ஜான்
வினீத் ஶ்ரீனிவாசனுக்கு இசை, ஒளிப்பதிவு ஆகிய இரண்டும் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. இதுவே பாதி வெற்றி அவருக்கு.

"நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்" படத்தை முடித்து வைக்க இயக்குநர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பமாக.

6 comments:

கோபிநாத் said...

ஆகா ரொம்ப நாளைக்கு பிறகு தலயோட மலையாள படத்தின் விமர்சனம்..கலக்கல் தல ;))

இங்க டிவிடிக்கு வெயிட்டிங் ;))

\\நாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். \\

நானும் விகடன் பேட்டியில் பார்த்தேன்..எங்க நடிக்க தான் வந்தேனு சொல்லிடுவானோன்னு இருந்துச்சி பயபுள்ள கலக்குது ;))

நல்ல பகிர்வு தல..நன்றி ;)

தனிமரம் said...

படத்தை பார்க்கத்தூண்டும் விமர்சனம்!

K.Arivukkarasu said...

பிரபா!உங்க கருத்துகள படிச்சாச்சு .... நன்றி! ”முகமூடி” பட விமர்சனங்கள் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் .... இப்படி ஒரு நல்ல விமர்சனம் !!

maithriim said...

//"நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்" படத்தை முடித்து வைக்க இயக்குனர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பம்//

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு வரி போதும் படத்தின் தரத்தைத் தெரிந்து கொள்ள! உங்கள் விமர்சனம் எப்பொழுதும் போல அருமை. திரைப்பட தேர்வு நல்ல தீர்மானம் :-)

amas32

G.Ragavan said...

மலையாளப்படம் மாதிரியே இல்லாத ஒரு மலையாளப்படம்னு மக்கள் பாராட்டுனாங்க. நீங்களும் நல்லாருக்குன்னு சொல்லியாச்சு. படம் பாக்க முயற்சி பண்றேன்.

சீனிவாசன் ஒரு நல்ல நடிகர். பல மலையாளப்படங்களில் அவர் அருமையாக நடித்திருக்கிறார். அவரே படங்களை இயக்கினார் என்று நினைக்கிறேன். சரியா?

அவர் மகன் பாடுகிறார் என்று சொன்னார்கள். படமெடுக்கவும் வந்து விட்டாரா.

சரி. நல்ல படம். அதுனால பாத்துறனும் :)

கானா பிரபா said...

தல கோபி

நன்றீஸ்

தனிமரம்

வருகைக்கு நன்றி

மிக்க நன்றி அறிவுக்கரசு சார்

amas32

நன்றி மேடம்

ஜி.ரா

சீனிவாசன் இயக்குனரும் கூட படத்தைப் பாருங்க பிடிக்கக்கூடும்