பொதுவாகவே தமிழ், மலையாளம் தவிர்த்து எனக்கு மற்றைய இந்திய மொழிப்படங்களைப் பார்க்கத் தூண்டுவதற்கு முதற்காரணம் இளையராஜாவின் இசை. ராஜா எப்படி இசையமைத்திருக்கின்றார் (பின்னணி இசை உட்பட) பாடல்கள் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கின்றன போன்ற அம்சங்களைத் தீரா ஆவலோடு பார்க்கத்தூண்டும். அப்படித்தான் இன்று நான் பார்க்க வேண்டும் என்று நினைத்துத் தியேட்டர் போய் முதல் ஷோவே பார்த்துவிட்டு வந்திருக்கும் படம் Cheeni Kum. இந்தத் தலைப்புக்கு சீனி கம்மி என்று அர்த்தமாம். இளையராஜாவின் இசை, பி.சி.சிறீராம் முதற்தடவையாக ஒளிப்பதிவு செய்த படம், கூடவே தமிழரான பால்கி என்ற பாலகிருஷ்ணன் இயக்கிய படம் போன்றவையும் இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டிய ஒட்டுமொத்த அம்சங்கள்.
சிட்னியில் ஒரு வருஷத்துக்கு முன்பு வரை இந்தியர்களால் ஒன்றிரண்டு தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே ஒட்டிய ஹிந்திப்படங்கள் இப்போது ஆங்கிலப்படம் ஓடும் பெரும்பாலான தியேட்டர்களில் தினசரிக்காட்சியாக ஒரு மாதமளவிற்கு ஓடும் நிலை வந்திருப்பது பாலிவூட்காரர்களின் சந்தைப்படுத்தல் எவ்வளவு விசாலமாகியிருக்கின்றது என்பதற்கு உதாரணம். இணையத்திலும் தியேட்டர்காரர்கள் ஹாலிவூட், பாலிவூட் என்று பிரித்துக் காட்சி விபரங்கள் போடுமளவுக்கு முன்னேற்றம். நான் போன தியேட்டரில் ஒரு நூறு இருக்கைகள் இருக்கும் முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பியிருந்தன. அதில் பாதிக்கு மேல் Student Visa க்கள் தான். அதில் பாதிப்பேர் படம் தொடங்குவதற்கு முன்பே "துள்ளுவதோ இளமை" ஸ்பெஷல் காட்சி ஆரம்பித்திருந்தார்கள். கொட்டாவி விட்டுக்கொண்டே படம் தொடங்கும் வரை காத்திருந்தேன்.
Cheeni Kum தொடங்கியது. ஒரு சில நிமிடங்கள் இசையற்ற காட்சியமைப்பில் லண்டனில் உள்ள உயர்தர இந்திய உணவகமான Spice 6 இன் சமையலறைக்காட்சி, கண்டிப்பான Chef மற்றும் உரிமையாளரான அமிதாப் பச்சனின் குணாதியசம் காட்டப்படுகின்றது. வேலையாட்களிடம் சுரீரென்று எரிந்து விழும் பாத்திரமாக அவரை அறிமுகப்படுத்திய கணத்தில் ராஜாவின் பின்னணி இசைக் கைவரிசை ஆரம்பிக்கின்றது.
64 வயதான லண்டன் வாழ் இந்திய உணவக Chef மற்றும் உரிமையாளரான அமிதாப் பச்சனின், லண்டனுக்கு சுற்றுலா வந்திருக்கும் 34 வயதான தபு மேல் காதல் கொள்கிறார். தபுவும் தொபுகடீர் என்று காதல் கிணற்றில் விழுகின்றார். இருவரும் கல்யாணம் செய்யமுடிவெடுத்து இந்தியாவில் இருக்கும் தபுவின் தந்தை பரேஷ் ராவலிடம் சம்மதம் வேண்ட நினைக்கும் போது எதிர்நோக்கும் சிக்கல் தான் படத்தின் கதை. தபுவின் தந்தைக்கோ வயது 58, மாப்பிளையாக வர நினைப்பவருக்கு வயது 64, ஏற்கவே கஷ்டமாக இருக்கிறதல்லவா?
முதிர் வயசுக்காதலை ஒன்றில் முதல் மரியாதை பாணியில் சீரியசாகக் கொடுக்கலாம், அல்லது அடிதடி (சத்தியராஜின்) பாணியில் நகைச்சுவை கிண்டிக்கொடுக்கலாம். Cheeni Kum இரண்டாவது வகையறாவான நகைச்சுவை கலந்த படையல். கண்டிப்பான ஒரு மனிதன் காதலில் விழுந்ததும் என்னமாய்க் கரைகிறார் என்பதை அழகான காட்சியமைப்புக்களோடு அமிதாப்பின் நடிப்பும் சேர நிறைவாக இருக்கின்றது. ஹைதரபாத் பிரியாணி சர்ச்சையில் ஆரம்பித்து மெல்ல நட்பாகிக் காதலாகிக் கனியும் அமிதாப், தபுவின் காதலும் பார்க்க நன்றாக இருக்கின்றது. ஆனால் மேலோட்டமாகத் தூவியது போல ஆழமில்லை. ராஜாவின் பாட்டுக்கள் தான் காதலைக் காட்டக் கைகொடுத்து உதவுகின்றன. "விழியிலே மணி விழியிலே" என்ற தமிழ்ப்பாடல் ஹிந்தி மொழி பேசி "ஜானே டோனா" என்ற பாடலாக்கப்பட்டு ஷ்ரேயா கொசலின் குரலில் இனிக்கின்றது. இந்தப்பாடலின் இசையை கனத்த காட்சிகளில் அழுத்தமான சோக இசையில் சிம்பனியாகக் காதில் பின்னணி இசை ஜாலத்தை தேனாக ஓடவிட்டிருக்கின்றார் ராஜா.
அதே போல் "மன்றம் வந்த தென்றலுக்கு" என்ற மெளன ராகம் படப்பாடல் "சீனி கம்" என்றும், மெல்லத்திறந்தது கதவு திரைப்பாடலான "குழலூதும் கண்ணனுக்கு" பாடல் சோனி சோனி என்ற ஆண், பெண் குரல் பாடல்களாக மீளவும் பழைய மெட்டில் புதிய இசைக்கலவையோடு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப்படத்திற்காக "வைஷ்ணவ ஜனதே" என்ற துண்டுப்பாடல் தவிர புதிதாக எதையும் ராஜா கொடுக்கவில்லை, ஆனாலும் பயன்படுத்தப்பட்ட இந்தப் பழைய பாடல்கள் வரும் காட்சியமைப்பும் மீள் இசைக்கலவையும் அருமை. ஆனால் இடைவேளைக்கு முன்பே நான்கு பாடல்களை வெட்டிக் கொத்திப் பாதியாகத்தான் படத்தில் தந்திருக்கின்றார்கள் என்ன கொடுமை இது சார்). இடைவேளைக்குப் பின் "வைஷ்ணவ ஜனதே" யும் "ஜானே ஜானே" என்ற துண்டுப்பாடலும் மட்டும் தான்.
இடைவேளை வரை, தவிர இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் ராஜாவின் பின்னணி இசை அருமை, ஏன் சார் மலையாளத்திலும் ஹிந்தியிலும் கலக்கும் நீங்கள் தமிழையும் கடைக்கண் பார்க்கக்கூடாதோ?
இந்தப்படத்தில் சதா ஜிம்முக்குப் போகச்சொல்லும் அமிதாப்பின் தாய், பக்கத்து வீட்டு Blood Cancer நோயாளியான குறும்புக்க்காரச் சிறுமி, அமிதாப்பின் உணவகத்தில் வேலைசெய்பவர்களின் நகைச்சுவை போன்றவை படத்தின் இடைவேளை வரை தூக்கி நிறுத்துகின்றன. இடைவேளைக்குப் பின் ஏனோ தானோவென்ற காட்சிகள், இருக்காதா பின்னே, இடைவேளைக்குப் பின்னான காட்சிகள் வெறும் அமிதாப்பின் இந்தியப்பயணத்தில் எதிர்கால மாமனாரை எப்படி வழிக்குக்கொண்டுவரலாம் என்பதாக மட்டுமே இருக்கின்றன.
மாமனார் உண்ணாவிரதம் இருப்பதும்,அந்த ஏரியாவே அல்லோலகல்லோலப்படுவதும், அமிதாப் உண்ணாவிரதத்தைத் தடுக்கமுயல்வதுமான காட்சிகள் வெறும் கேலிக்கூத்து.
பால்கி! தமிழனோட பெருமையைக் காப்பாத்துங்கப்பா.
ஆனாலும் இடைக்கிடை, தன் மாமனாரிடம் பெண் கேட்க முயற்சிப்பதும், அவரோ வயசு போனவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று எதேச்சையாகப் பேசித்தொலைப்பதுமான காட்சிகள் ஓரளவு இதம்.
வெள்ளைக்குறுந்தாடி ஒன்றை வைத்துக்கொண்டு அமிதாப் என்னமாய் ஒவ்வொரு படத்திலும் புதுமையான பாத்திரங்களைத் தருகின்றார். தன்னை இளமையாகக் காட்ட இவர் எத்தனிக்கும் ஓவ்வொரு செயலும் யதார்த்தம். இவருக்கு இந்தப்படம் ஒரு முதல் மரியாதை போல என்று ஓரளவுக்குச் சொல்லலாம்.
34 வயசுப் பெண் பாத்திரத்துக்கு தபு தேறுகிறார், கடைசியாய்க் "காதல் தேசம்" படத்தில் பார்த்தது, இன்னும் இளமை மிச்சம் இருக்கிறது இவரிடம். கண்களே அதிகம் பேசுகின்றன.
படம் நகைச்சுவையிலேயே முழுதுமாகப் பயணிப்பதால் குறும்புக்காரச் சிறுமி கான்சரால் இறப்பதும் அமிதாப் குமுறுவதும் பாதிப்பை ஏற்படுத்தத காட்சியமைப்புக்கள். ராஜாவும் இடைவேளைக்குப் பின் மாயக்கண்ணாடி வேலைகளுக்குப் போய்விட்டார் போல, பின்னணி இசைமுற்பாதியில் செய்த ஜாலம் பிற்பாதியில் இல்லை. பி.சி.சிறீராமின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் ஹாலிவூட் தரத்தில் இருக்கின்றன. இடைவேளைக்குப் பின் அவரும் அவுட்.
முதல் மரியாதை படத்தில் இளவட்டக்கல்லைத் தூக்குவதை நினைவுபடுத்துவது போல குதுப்மினாரில் உள்ள தூணைப் பின்பக்கமாகக் கட்டிக் கைகோர்த்தால் நினைத்தகாரியம் நடக்கும் என்ற காட்சி வருகின்றது.
மொத்ததில் இந்தப் படம் முதற்பாதியில் சீனி அளவு, மறு பாதியில் சீனி கம்(மி)
இப்படத்தின் பாடல்களைக் கேட்க
Powered by eSnips.com |
பாடல் ஒன்றைப் பார்க்க
இப்படத்தின முன்னோட்டத்துண்டு
20 comments:
//ஏன் சார் மலையாளத்திலும் ஹிந்தியிலும் கலக்கும் நீங்கள் தமிழையும் கடைக்கண் பார்க்கக்கூடாதோ?//
nalla kaetteenga!
one question..? is the film worth watching or not? expected to be screened in Doha shortly..
நான் தபுவுக்காகப் பாக்கலாமோ எண்டு யோசிக்கிறன்! :)
-மதி
ப்ரபா, பாடல்களைக் கேட்டேன். நல்லாவே ரீமிக்ஸீருக்காரு. ஆனா பாருங்க...குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். அதை இவர் பயன்படுத்தியிருப்பது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது. மற்ற பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக ஷ்ரேயா கோஷலின் குரல் மிக அருமை. நல்ல பாவத்தோடு பாடுகிறார்.
//Bharathiya Modern Prince said...
one question..? is the film worth watching or not? expected to be screened in Doha shortly..//
வணக்கம் வெங்கடேஷ்
இடைவேளை வரை ராஜாவும் பி.சி.சிறீராமும் சுவாரஸ்யமான தமிழ்ப்படத்தைப் பார்க்கும் உணர்வைத்தந்தார்கள், இடைவேளைக்குப் பின் ஒரு தொய்வு இருந்தாலும் பெரிய திரையில் ஒருமுறை பார்த்துவைக்கலாம்.
ராஜாவுக்காக ஒலிநாடா வாங்கினேன். படமும் ஓரளவுக்கு பார்க்கலாம் போல இருக்கே:-).
// ராஜா எப்படி இசையமைத்திருக்கின்றார் (பின்னணி இசை உட்பட)//
ராஜாவின் பிண்ணனி இசைக்காகவே பல படங்கள் பார்த்தது உண்டு.
//மதி கந்தசாமி (Mathy) said...
நான் தபுவுக்காகப் பாக்கலாமோ எண்டு யோசிக்கிறன்! :)//
நானும் தான், ஆனா எழுதேல்லை ;-)
// G.Ragavan said...
ப்ரபா, பாடல்களைக் கேட்டேன். நல்லாவே ரீமிக்ஸீருக்காரு. ஆனா பாருங்க...குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். அதை இவர் பயன்படுத்தியிருப்பது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது.//
வணக்கம் ராகவன்
மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் பாடல்களுக்கு மெட்டை எம்.எஸ்.வியும், இசைக்கோர்ப்பை ராஜாவும் செய்ததாக 2 மாதங்களுக்கு முன் சிட்னி வந்திருந்த எஸ்.ஜானகியும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இருவருக்கும் ஏதாவது பரஸ்பர ஒப்பந்தம் இருக்குமோ என்னபோ.
வட நாட்டுப் பாடகிகளில் எனக்கு மிகவும் பிடித்த குரல் ஸ்ரேயா கொசலினுடையது, வட நாட்டுப் பாடகி என்ற உணர்வில்லாது பாடுவது அவர் தனிச்சிறப்பு. இந்தப் படப்பாடலிலும் குரலால் சொக்கவைத்திருக்கின்றார்.
//முத்துகுமரன் said...
ராஜாவுக்காக ஒலிநாடா வாங்கினேன். படமும் ஓரளவுக்கு பார்க்கலாம் போல இருக்கே:-).//
வணக்கம் முத்துக்குமரன்
பாடல்களைக் கேட்டதும் அவை எப்படிப் படமாக்கப்பட்டன, ஒளிப்பதிவு எப்படி போன்ற சமாச்சாரங்களுக்காக கட்டாயம் பார்க்கலாம். பாடல்களின் பாதி தான் படத்தில் இருக்கின்றன.
படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகின்றது.பார்த்துவிடுகின்றேன் அண்ணா :-)
வாங்க தங்காய்
சிங்கப்பூரில் ரிலீஸ் ஆகியிருக்குமே. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்
பிரபா!
இப்படம் எனக்குப் பார்க்கக் கிடைக்குமென நினைக்கவில்லை.
ராஜா...புதிய மெட்டுகளுக்கு முயன்றிருக்கலாம். என்பது என் கருத்து...இவை என்னதான் இனிமையான
மெட்டாக இருந்த போதும்.
இந்த "சீனி" ...என்ற சொல்..தமிழ்;சிங்களம்;இந்தி எனப் பரவ எதாவது சிறப்புக் காரணம் உண்டா?
அறிந்தவர் கூறுவார்களா?
வணக்கம் யோகன் அண்ணா
தமிழக மொழி வழக்கில் சீனி என்பதற்குப் பதில் சக்கரை என்ற சொல் உபயோகத்தில் இருக்கின்றது என்பது நீங்கள் அறிந்ததே. ஹிந்தியில் புழங்கும் சொல் எப்படி நம்மூருக்கு வந்தது என்பது வியப்பில்லையா?
மலையாளத்திலும் இச்சொல் இருக்கின்றது.
நான் நினைக்கிறேன் இது வட சொல் என்பதற்குப் பதில் திசைச்சொல்லாக இருக்கவேண்டும் அதாவது கடல் வாணிபத்தின் மூலம் வந்து சேர்ந்த சொல்லாக இருக்கலாம். எனக்கும் மேலதிகமாக அறிய ஆவல்.
//குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். அதை இவர் பயன்படுத்தியிருப்பது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது.//
ராகவன் சார். மெல்லத் திறந்தது கதவு படத்தில் "குழலூதும்" பாட்டைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் நீங்கள் கூறியவாறு MSV மெட்டமைத்து ராஜா இசை அமைத்தார். இதன் மூலம் ராஜா தனது கொள்கையை காப்பற்றி வருகிறார்.
//"விழியிலே மணி விழியிலே" என்ற தமிழ்ப்பாடல் ஹிந்தி மொழி பேசி "ஜானே டோனா" என்ற பாடலாக்கப்பட்டு ஷ்ரேயா கொசலின் குரலில் இனிக்கின்றது.///
இந்த விழியிலே மணி விழியிலே என்னப் பாட்டுங்க. எந்தப் படத்தில வந்திருக்கு. ஹிந்திப் பாட்டை வெச்சு என்னால கண்டு பிடிக்க முடியலை. வார வர மூளை சுத்தமா வேலை செய்ய மாட்டேங்குது.
வணக்கம் நந்தா
அந்தப் பாடல் நூறாவது நாள் படத்தில் வந்தது. பாடலை ஜீவாவின் பதிவில் போட்டிருக்கிறார் இதோ
http://kaladi.blogspot.com/2007/04/07.html
சீனி பற்றி...
உந்தச் சீனி என்ற சொல் சீனாவோடு சம்பந்தப்பட்டதாம்.
சீனாவின் மூத்த குடிகள்தான் சீனியை அறிமுகப்படுத்தினாலை சீனி என்ற பேர்வந்ததாக பழைய ஆட்கள் சொல்லுவினம்.
ஒரு பழைய கதைப்பாட்டுப் புத்தகத்திலை இதைப் படிச்சனான்.
-சின்னாச்சியின்ரமோன்
நானும் தலைப்புகாக தான் பார்த்தேன்....உண்மையான விமர்சனம் தலைவா.
அந்த குழந்தையின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது
சீனி பற்றிய வரலாற்றுத் தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சின்னாச்சியின்ர மேன்.
வணக்கம் கோபி
ராஜாவின் இசை தான் பல படங்களைப் பார்க்கத் தூண்டுது இல்லையா?
பாட்டு ஏற்கனவே கேட்டுட்டேன். படம் இன்னும் பார்க்கல.
வாங்க குட்டிப்பிசாசு
படம் பாருங்க, இசையோடு ரசிக்கமுடியும்.
Post a Comment