Pages

Thursday, May 2, 2024

உமா ரமணன் ❤️ மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே.....💛

ஒரு காலம் இருந்தது. ஒவ்வொரு பாடகர்களின் குரலுக்கும் ஒரு தனித்துவம் இருந்தது. அவர்கள் பாடிய பாடல்கள் அவர்களுக்காகவே வார்க்கப்பட்டது போன்றதொரு அந்நியோன்யம் தொனிக்கும். 

அவர் தம் பாடல்களை மீளப் பாடி இனிமை சேர்த்தாலும் அந்தக் குரல்களை அச்சொட்டாகப் பிரிதியெடுக்கவும் யாராலும் முடியவில்லை, அதுதான் அவர்களின் தனித்துவம். அப்படியொரு குரல் தான் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வலம் வந்த உமா ரமணனுடையது.

உமா ரமணன் ஜோடி சேர்ந்து பாடினாலும்  ஒரு ஏகாந்தமும், ஏக்கமும் ஒட்டியிருப்பது போலத் தனித்த குரல்.

ஏ.வி.ரமணன் & உமா ரமணன் காதல் தம்பதியின் கூட்டு இணைந்து 50 ஆண்டுகளைக் கடந்திருக்கும் போது ஜோடிக் கிளி ஒன்று பறந்து விட்டது.

1972 ஆம் ஆண்டு ஏவி.ரமணனின் “மியூசியானோ” இசைக்குழுவில் தன் எதிர்காலத் துணை ஆகப் போகிறவரே பாட அழைத்தார்.

இசை மேடைகளில் கூடியவர்கள் திருமண பந்தத்திலும் கூடும் காலமாக 1976 அமைந்தது.

எழுபதுகளில் ஹிந்திப் பாடல்களையெல்லாம் தன் மேடைகளில் பாடிப் புகழ் பூத்த ஏ.வி.ரமணன் & உமா ரமணன் கூட்டுக்கு முதல் வாய்ப்பே ஹிந்தியில் கிடைக்கிறது.

“Play Boy” படத்துக்காக 

Hai Ek Buddhu Chhora 

https://www.youtube.com/watch?v=bn2epGkSKJk

என்ற பாடலை சோனிக் ஓமி இசையில் ஏ.வி.ரமணன் & உமா ரமணன் ஜோடி பாடித் திரையிசை உலகில் கால்பதிக்கிறார்கள்.

அப்படியே தமிழில் இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் “கிருஷ்ண லீலை” படத்துக்காக எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் “மோகனக் கண்ணன்” 

https://www.youtube.com/watch?v=9OoryLXXeCs

பாடலை அதே ஜோடி மீண்டும் பாடியது திரையிசை உலகம் காணாப் புதுமை.

ஆனாலும் உமா ரமணனும், தானும் ஒன்றாக இளையராஜா இசையில் பாடவேண்டும் என்ற ஆசை நிராசையாக இருப்பதாக ஒரு பேட்டியில் ஏ.வி.ரமணன் குறிப்பிட்டும் இருந்தார்.கானாபிரபா

ஏ.வி.ரமணன் எண்பதுகளில் இசையமைப்பாளராக இயங்கிய சூழலில் விஜயகாந்தின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான “நீரோட்டம்” படத்துக்கும் இசை வழங்கியிருக்கிறார்.

அந்தப் படத்தில் இருவரும் இணைந்து பாடிய

“ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே”

https://www.youtube.com/watch?v=zgU0zY7kiP4

இலங்கை வானொலி யுகத்தில் கோலோச்சிய பாடல்.

அதே படத்தில் “ஆவோ பையா”, “தேவனின் கண்கள்” ஆகிய பாடல்களிலும் இந்த ஜோடி இணைந்து பாடியதும் குறிப்பிட வேண்டியது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜோடிக் குரலாகவும், தனித்த பாடகியாகவும் 78 பாடல்கள் பாடியிருக்கிறார். கானாபிரபா

உமா ரமணன் என்ற பாடகிக்குக் கிடைத்த வாய்ப்புகள் அரிதாக இருந்தாலும், கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றிலும் தன் முத்திரையைப் பதித்தவர். பெண்ணுலக தீபன் சக்கரவர்த்தி போல.

“அமுதே தமிழே அழகிய மொழியே” தெள்ளு தமிழ்ப் பிள்ளையாய்,

“பூங்கதவே தாழ் திறவாய்” காதலியாய்,

“பூங்காற்றே இங்கே வந்து பாடு” சகோதரியாய்

“மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே” தாய்மையின் பிரதிபலிப்பாய்,

“ஊரடங்கும் சாமத்திலே” தோழியாய், 

“ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி” கேட்டால் கையெடுத்துக் கும்பிட வைப்பார், 

என்று கடக்க முடியாத பாடல்கள்.

“ஆனந்த ராகம் கேட்கும் காலம்” தமிழ்த் திரையிசை உள்ளவரை நிலையாய் அவர் பேர் சொல்லும் பாட்டு.

“நீ பாதி நான் பாதி கண்ணே”, “ நில் நில் பதில் சொல் சொல்”

“வெக்காத செந்தூரம் தான்” என்று அப்பழுக்கற்ற கிராமியத்தனத்திலும் (பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு) தன் முத்திரை காட்டியவர்.

கடல் அலைகளின் தாளம் 

பல ஜதிகளும் தோன்றும்

நினைவினில் ஒரு ராகம் 

நிதம் பலவித பாவம்

ஆடும் கடல் காற்றும் 

அங்கு வரும் பாட்டும்

ஓராயிரம் பாவம் ஏற்றுதே 

நிதமும் தேடுதே ராகம் பாடுதே

மனதினிலே கனவுகளே வருகிறதே 

தினம் தினம்

யார் தூரிகை தந்த ஓவியம் 

யார் சிந்தனை தந்த காவியம்

உமா ரமணனை நினைத்தால் அதுவே ஆகிறார்.

இனிமேல் பாடல்களில் மட்டும் வாழப் போகும் 

உமா ரமணனுக்குப் பிரியா விடை.

கானா பிரபா

02.05.2024

0 comments: