Pages

Sunday, September 18, 2022

சிட்னியில் ராஜா 2022 ❤️ 🎸🥁


மேற்குத் தொடர்ச்சி மலை மகனுக்கும், சிட்னிக்கும் பாலம் அமைப்பது போல இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வு இம்முறையும் “Hillsong Convention Centre” இல் அமைந்தது ஏக பொருத்தம். இசையைத் துல்லியமாக் கடத்தி, அந்த அரங்கத்துக்குள்ளேயே அடக்கி வைக்கும் சக்தி நிறைந்தது. 3300 பேர் கொள்ளக் கூடியது. கொரோனா முடக்க காலத்தின் பின் பெரும் எடுப்பில் நடக்கும் நிகழ்வு என்பதால் ஒரு மாதத்துக்கு முன்பே அனைத்து நுழைவுச் சீட்டுகளும் ரசிகர்களின் இசைப் பசியால் அள்ளப்பட்டு விட்டன.
இளையராஜா தன் குழுவினரோடு ஆஸி வருவது இத்தோடு மூன்றாவது தடவை, சிட்னிக்கு இரண்டாவது தடவை என்ற கணக்கில் அமைந்திருக்க, இந்த இசை நிகழ்வின் முடிவில்
“நான் மீண்டும் வருவேன் சிட்னி ஒபரா ஹவுஸில் சிம்பொனி வாத்தியக் கலைஞர்களோடு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கப் போகிறேன்" என்ற ராஜாவின் கூற்றை ஆரவாரித்து எதிர்பார்ப்பைக் காட்டியது அங்கு திரண்டிருந்த கூட்டம்.
“இந்த உலகமே இருள் சூழ்ந்து இருந்தாலும் அங்கே ராஜாவின் ஆர்மோனியப் பெட்டி வழியாக இசை பிறக்கும்”
சூப்பர் ஸ்டார் ரஜினியின் குரலோடு “தாரை தப்பட்டை” படத்தின் முகப்பிசை சேர்ந்து கொள்ள பெருந்திரையில் இளையராஜாவின் சாதனை அடையாளங்கள் மின்னி மறைந்தன.
“குருர் பிரம்மா
குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஷ்வர...”
சேர்ந்திசைக் குரல்கள் இறை வணக்கம் பாட,
நிகழ்ச்சியின் நாயகன் இசைஞானி இளையராஜா அரங்கத்தை ஊடறுத்து மேடைக்கு வரும் போது ரசிகரின் ஆர்ப்பரிப்பு விண்ணைப் பிளந்தது.
“ஜனனி ஜனனி” பாடலோடு தொடங்கியவர், அதை முடிக்கும் போது ஒரு மெது வேகத்தோடு தன் சுருதியைக் குறைத்துக் கொண்டே போனவர்
அப்படியே தடாலென்று தன் கையை உதறித் துடி போலப் பாவனை காட்டினார் பாருங்கள்
அப்படியே அது துடியிசையாக விண்ணைப் பிளக்க
“ஓம் சிவோஹம்” பாடலோடு கார்த்திக் முன் வந்தார்.
“சங்கராஆஆஆ” என்ற அவரின் உச்ச ஸ்தாயி கைலாசம் வரை கேட்டிருக்கும்.
ஓம் சிவோஹம் பாடல் முடிந்ததும்
‘இந்த மாதிரி ஒரு பாட்டை நீங்கள் வாழ் நாளில் கேட்டிருக்கிறீர்களா?
இந்த மாதிரிப் பாடலை வாங்க இயக்கு நர் எந்தப் பாடலை உதாரணம் காட்டுவார்?”
என்று பதிலே இல்லாத கேள்விகளை ராஜா முன் வைத்து விட்டு,
இந்தப் பாடலுக்கான சூழலை இயக்குநர் பாலா சொன்னது ஒரு அதிரடி சண்டைக்கான களம். அது உக்கிரமா வேணும் அவ்வளவு தான் அவர் சொன்னது,
எனக்கு உடனே தோன்றியது “ஓம் சிவோஹம்” சரி சமஸ்கிருதத்திலேயே முழுப் பாடலையும் எழுதி விடுவோம் என்று கவிஞர் வாலியை அழைத்தேன்.
“சமஸ்கிருதமா ? யோவ் எனக்கு ஒரு அட்சரம் கூடத் தெரியாதே என்று அவர் மறுக்க, நானோ மீண்டும் அவரைக் கேட்க
“நான் காளை காளைங்குறேன் நீ பசு பசுங்குறே” என்று சொன்ன வாலியாரை வைத்தே மணி மணியாகக் கோர்த்த பாட்டு இது,
இதில்
“கண கண கண” “டம டம டம” என்று வரும் போதேல்லாம் இதுக்கெல்லாம் என்ன வார்த்தையைப் பாவிக்கிறதுன்னு வாலியார் கேட்க, டம டம டம போல ரிப்பீட் ஆக்கிட்டுங்க என்று சொல்லி
“ஓம் சிவோஹம்” பாடல் பிறந்த கதையை ராஜா சொல்லும் போது ஏக குஷி மூடில் இருந்தார், நிகழ்ச்சி முடியும் வரை கல கல கல (அட நானும் ரிப்பீட்டு 😂) என்றே இருந்தார்.
“சரி ! கவிஞர் வாலியை வைத்து எழுதப்பட்ட பாட்டைக் கேட்டீங்க அடுத்து கமல்ஹாசனை வைத்து எழுதி வாங்கிய பாட்டைக் கேளுங்க” ராஜாவின் அறிமுகத்தைத் தொடர்ந்து கார்த்திக்
“ஹே ராம்” படத்தில் வந்த “ராம் ராம்” பாடலைப் பாடி முடித்ததும், அரங்கம் கொடுத்த கைதட்டலைக் கேட்டு,
“இது யாருக்கு? கமலுக்கா பாடிய பையனுக்கா?” என்று மீண்டும்
சீண்டிப் பார்த்தார் ராஜா 😂. இந்தப் பாடலுக்கு Orchestration
செய்தவர் கார்த்திக் ராஜா என்று மேலதிக தகவலையும் அள்ளி விட்டார் ராஜா.
அடுத்த பாடல் சூப்பர் ஸ்டாருக்கானது என்றதை அறிந்ததும் ரஜினியே அரங்கம் வந்து விட்டது போல ஒரு பெரு மழை கொட்டியது உரக்கக் கொட்டிய குரல்களால்.
“சந்தோஷத் தொப்பத்திலே” அரங்கம் மிதந்தது “காட்டுக் குயிலு மனசுக்குள்ளே” (மனோ & மது பாலகிருஷ்ணன்) பாடல் கொடுத்த துள்ளலில்.
மீண்டும் கல கல ராஜா,
“கமல் & ரஜினி இரண்டு பேருக்குமே ஒருத்தர் தேவை
அவர் எஸ்பிபி”
என்று சொல்ல நெகிழ்வும், ஆர்ப்பரிப்புமாக அடுத்த பாடலுக்குத் தயாராக,
“டக் டக் டக்” பின்னணி ரிதத்தோடு கால்கள் தாளம் போட
“மேகம் கொட்டட்டும்” இளைய எஸ்பிபி மேடையில் உதித்தார்,
“வானம் பாடி ஓயாது........”
கொஞ்சம் பொறு தம்பி நானே பாடிக்கிறேன் என்று தன் மகனின் ஒலி வாங்கியைப் பறித்து எஸ்பிபியே பாடியது போன்றதொரு பிரமை தொனித்தது.
கனவுக்கும், நனவுக்குமான போராட்டம் என்பது, எஸ்பிபி பாடல்களாக நம் எஞ்சிய வாழ்நாள் வரை தொடரும் போல.
பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே எஸ்பிபி நினைவில் இருக்கும் போது அதைத் தட்டியெழுப்புமாற் போல,
“ராகங்களால் தீபங்களை
ஏற்றி வைத்தான் தான்சே
ராகங்களால் மேகங்களை
நான் நிறுத்தி வைப்பேன் என்பேன்”
எஸ்பிபி வந்து சொல்லுமாற்போலத் தொனித்தது.

இசைஞானி மேடைகளில் ஒரு இன்ப ஆச்சரியம் , பாடகி விபாவரி.
“மகாராஸ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு தமிழ் ஒரு அட்சரம் கூடத் தெரியாது” என்று ராஜா ஒவ்வொரு மேடைகளிலும் சொல்லுவதற்கு மறை பொருளாக இருப்பது அவரின் அட்சர சுத்தமான தமிழ்ப் பிரயோகம்.
“ஆனந்த ராகம் கேட்கும் காலம்” உமா ரமணனுக்கே நேர்ந்து விட்ட பாடலை விபாவரி பாடும் போது மனம் சமரசமாகிறதென்றால் அதற்கு முன் சொன்ன காரணம் மட்டுமே தான்.
ஆனால் சிட்னி மேடையில் விபாவரி, ஸ்வர்ணலதாவாக வந்தார்
“ஆட்டமா தேரோட்டமா” பாடலோடு.
அவரளவில் குறை வைக்கவில்லை என்றாலும், ஒரு உண்மையை மனது அறைந்து சொல்லியது, அது ;
“ஆட்டமா தேரோட்டமா” பாடலை ஸ்வர்ணலதா ஒருவர் தான் பிறந்து வந்து மீண்டும் அதே சாகித்தியத்தைக் காட்ட முடியும் என்று. இந்தப் பாடலை எல்லாம் இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும் அவ்வளவு சீக்கிரமாக இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க மாட்டார் ஸ்வர்ணலதா, அதனால் தான் அவர் ஸ்வர்ணலதா. “நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு” என்ற நெகிழ்வே போதுமே?
எஸ்பிபி & மலேசியா வாசுதேவன் என் கூட இருந்த தொடர்ச்சியாக அவர்களின் வாரிசுகள் என்னோடு இப்போது இருக்காங்க” என்ற போது மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் வந்தார்.
“பொதுவாக என் மனசு தங்கம்” தந்தையாரின் அக்மார்க் முத்திரைகளைத் தெறிக்க விட்டார். ஆனால் அந்தோ ஏமாற்றம் அந்த ஒரு பாடலோடு போய் விட்டார்.
“என்றென்றும் ஆனந்தமே” (கடல் மீன்கள்) பாடலை இம்முறை வந்த குறைந்த பட்ச வாத்திக்காரர்கள் சகிதம் பெரு முழக்கம் கொடுத்திருக்கலாம் மலேசியாவின் மகனார் என்ற ஏமாற்றம் இப்போது வரை.
கடந்த நிகழ்ச்சியை விடப் பாடல் தேர்வில் மாற்றம் இருந்தாலும், மிகக் குறைவான வாத்தியக்காரர்களோடு வரும் போது அதற்கேற்ப பாடல் தெரிவுகளிலும் மாற்றம் கண்டிருக்கலாம்.
சுஜாதா மகளார் ஸ்வேதா “ஓஹோ மேகம் வந்ததோ” (மெளன ராகம்)” பாடும் போதும் “காதல் ஓவியம் கண்டேன்” (கவிக்குயில்) அல்லது “நிறம் பிரித்துப் பார்த்தேன்” (டைம்) பாடலை எடுத்திருக்கலாமோ என்று எண்ணியது மனது.
“வா வா வசந்தமே” முகேஷ் குரலில் மிளிர்ந்தது. ஒரு ரசிகனாக இருந்து பாடகராக அமையும் போது, தான் எடுக்கும் பாடல் மீது வைத்திருக்கும் காதலை அவர் குரலாக வெளிப்படுத்துவார், இங்கேயும் அதும் பொய்க்கவில்லை.
“அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்” பாடலை மனோ, முகேஷ் குழுவினரோடு பாடும் போது
“உங்க முன்னால பாடுவதும்
இவங்க முன்னால பாடுவதும்
தக்க தரிகிட தரிகிட தோம்”
என்று கூட்டுக் குரல் கொடுத்துப் பாடும் போது, பாடலும் ஏகத்துக்குத் தக்கத் தரிகிட போடவும்,
“இப்படி ஒரு கொலை பண்ணறதுக்கு நாம சிட்னிக்கு வரணுமா என்ன?” என்று சிரிப்போடு கேட்டார் ராஜா.
“விக்ரம்”
“விக்ரம்”
“விக்ரம்”
சமீப காலத்து ராஜா மேடைகளில் அதிரும் பாடலோடு கார்த்திக் வரவும், மீண்டும் அரங்கம் விண்ணைப் பிளந்தது.
“உனக்கு இப்ப என்ன வயசு?” ராஜா கேட்கவும்,
“42” என்று கார்த்திக் சொல்லவும்,
“இந்த விக்ரம் வந்து இப்போ 40 வருஷம்” என்று குறும்புச் சிரிப்போடு சொன்னார் ராஜா.
நிகழ்ச்சியைத் தன் கேமராவால் கவர்ந்து கொள்ளும் வீடியோக்காரருக்கு வாத்தியக்காரர்கள் மேல் அப்படி என்ன கோபமோ தெரியவில்லை, பாடகர்களோடு சுற்றிச் சுற்றிக் கொண்டிருந்தார் அந்த வெள்ளைக்காரர். இம்மாதிரி இசை நிகழ்ச்சியைப் படம் பிடிப்பவருக்கும் குறித்த பாடல்கள் பற்றிய இசையறிவு எவ்வளவு தேவை என்பதை ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது போலவே நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து முடியும் வரை பாடல்களின் ஒலியமைப்பு கன்னா பின்னாவென்று எகிறி அடங்கிச் சினக்க வைத்தது. எப்பேர்ப்பட்ட அரங்கம், எப்பேர்ப்பட்ட கலைஞர்கள், இந்த இசையை அப்படியே அள்ளிக் கொடுக்க வேண்டாமா?
“வானிலே தேனிலா” பாடல் முன்னிசை இல்லாது மொட்டையாக வந்து விழுந்தது.
ப்ரியா ஹிம்மேஷ் பாடி முடித்ததும்,
“இம்மாதிரி வளரும் பாடகர்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று ராஜா வேண்டிக் கொண்டார்.
தன்னைச் சுற்றிய வாத்தியக்காரர்களை அறிமுகப்படுத்தும் போது
“இவருக்குப் பாட்டும் கொடுத்தேன், பெயரும் கொடுத்தேன்” என்று நெப்போலியன் என்ற அருண்மொழியைப் பற்றிச் சொல்லி விட்டு, இசையமைப்பாளராகவும் ஜொலிக்கும் வாத்தியக்காரர் கண்ணனிடம் “பெயர் கண்ணன் என்பதால் எதைத் தொட்ட்டாலும் ஜொலிக்குது” என்றார் ராஜா.
“இசைமைப்பாளர் , கலைமாமணி குன்னக்குடி வைத்தியநாதன் மகன்” என்று சேகர் அவர்களை ராஜா அறிமுகப்படுத்தும் போது, குன்னக்குடியாரைத் தாம் மறக்கவில்லை என்ற நன்றியுணர்வு பெரும் கைதட்டலாக வெளிப்பட்டது சபையோரிடமிருந்து.
“என்னைச் சொல்லல” என்று ராஜாவின் காதுக்குள் வந்து இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர் சிரிப்புடன் சொல்ல,
உன்னை மறக்க முடியுமா” என்ற பெருஞ் சிரிப்புடன்
“ஒரு நிகழ்ச்சி நடக்குதுன்னா அதுக்கு 2, 3 மாதங்கள் முன்பே ஒவ்வொரு பாடலுக்கான மியூசிக் நோட்ஸ் ஐ எடுப்பதாகட்டும்,60,70 வாத்தியக்கார்களை வைத்து ஒத்திகை பார்ப்பதாகட்டும் எல்லாப் பணியையும் வெகு சிறப்பாக நடத்தி முடித்து விடுவார் நண்பர்” என்று பிரபாகரின் பெருமையைப் பறை சாற்றினார்.
இந்த சிட்னி மேடையின் நட்சத்திரப் பாடகி சுர்முகி என்றால் மிகையில்லை, தான் எடுத்துக் கொண்ட “நாதம் என் ஜீவனே”, ஒலியமைப்பை ஒத்துழைக்காவிட்டாலும் சாமர்த்தியமாகக் கரை சேர்த்த “தும்பி வா” ஆகட்டும் சுர்முகி, நான் முன்னர் சொன்ன முகேஷ் போலத்தான், தான் காதலித்த பாடல்களை அந்தக் காதலோடு கொடுப்பார்.
“தானம் தம்த தானம் தம்த
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம்”
சுர்முகி தொடங்கும் போதே மெய் சிலிர்த்தது.
“அடுத்து சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போமா?” என்ற ராஜாவின் பதிலாக வந்தது “சம்மதம் தந்துட்டேன்” தெலுங்கு வடிவம்.
நிலாக்காயும் நேரம் பாடலைச் சும்மா கேட்டாலேயே ஒலிப்பதிவுக் கூடத்தின் தரம் தெறிக்கும், ஆனால் இங்கே ஒலி அமைப்பு ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் டீக்கடை ட்ரான்ஸிஸ்டர் போலக் கும்மியது.
“பாலசந்தரோடு முதன் முதலாகச் சேர்கிறேன் “சிந்து பைரவி” படத்துக்காக. பாலசந்தர் ஒரு சூழ்நிலையைக் கொடுத்துப் பாடல் கேட்கிறார். “நானொரு சிந்து காவடிச் சிந்து” என்று பாடிக் காட்டுக்கிறேன். ஆச்சரியத்தோடு அவர் அனந்துவை அழைத்துச் சொல்கிறார், நாம இந்தப் பாட்டு நானொரு சிந்துன்னு வரணும்னு எழுதி வைத்திருக்கிறோம் இல்லையா?” என்று அந்த ஆச்சரிய முடிச்சு அவிழ்ந்த கதையை ராஜா சொன்னார். இதெல்லாம் திரையிசை கடந்த எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பல்லவா?
சரண் “கேளடி கண்மணி” பாடலைத் தவிர்த்திருக்கலாம்.
“காதலின் தீபம் ஒன்று” பாடல் பிறந்த கதையை பஞ்சு அருணாசலம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆப்பரேஷன் செஞ்சு மருத்துவமனையில் இருந்து விசில் அடிச்சு மெட்டுக் கட்டிய அந்தக் கதையை ராஜா சொல்ல,
“ஆஹாஹாஹா” அப்படியே மிதந்து வந்து
பாடலை அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தவர்,
எண்ணம் யாவும் சொல்ல வா ❤️
தொடர்ந்து பாட முடியாமல் அழுது விட்டார் சரண்.
முதுகில் தட்டி அவரை ஆரத் தழுவி விட்டுச் சொன்னார் ராஜா
“நீ SPB யோட மகன்” 💔
“தத்தோம் தளாங்கு தத்தோம்” இன்னொரு தெறி மாஸ்.
“ஓ ப்ரியா ப்ரியா” தெலுங்குப் பாடலை மனோ அனுபவித்துப் பாடினார். இதற்கு முன்னர் பாடிய செண்பகமே பாடலை விட ரசிகர்கள் கொண்டாடினார்கள். பாடல் முடிந்ததும் இந்தப் பாட்டின் இசைக் கோப்பை விளக்கி அங்கேயேயே வாத்தியக்காரர், கூட்டுப் பாடகர் சகிதம் ஒரு மாஸ்டர் க்ளாஸ் நடத்தினார்.
“இது மாதிரி நிறையக் கொடுக்கலாம் ஆனா அது ஒரு தனி நிகழ்ச்சியா இருக்கணும்” என்றார்.
“என் இனிய பொன் நிலாவே” அடுத்த நாள் சூரியன் வரப் போகிறதோ என்ற பரபரப்பில் பாடியது போல மூலப் பாடலுக்கு முரணாக வேகம் எடுத்தது. பாடி முடித்து அவர் போனது கூடத் தெரியாமல்,
“என்ன மதுபாலகிருஷ்ணா ஓடியே போய் விட்டாயா?” என்று மீண்டும் தன் கிண்டலை எடுத்து விட்டார் ராஜா.
“ஆலோலங்கிளித் தோப்பிலே” ஸ்வேதா & மது பாலகிருஷ்ணன் குரல்களில் மதுக்கிண்ணமாக மலையாளம் ஸ்நேகித்தது.
சரண் மீண்டும் பாட வந்த போது
“ நீ ஓகேயா?” என்று கரிசனையோடு கேட்டார் ராஜா.
தான் மீண்டு வந்ததைத் தலையாட்டி விட்டு
“அண்ணாத்தே ஆடுறார்” பாடலில், மனோவோடு சேர
“இந்தப் பாடலோடு சிங்காரி சரக்கு” பாடலையும் சேருங்கள் என்று ராஜா காதுக்குள் சொல்ல
அதையும் சேர்த்துப் பாடினார்கள். அண்ணன், தம்பி போல ஒற்றுமை தொனித்தது அவற்றில்.
“சாராயம் குடிச்சாக்கா
அட சங்கீதம் தேனா வரும்”
பாடுமிடத்தில் மனோவைப் பார்த்துக் குறும்(பு)பா எழுதினார் தன் கண்களால் ராஜா.
“ஏஞ்சோடி மஞ்சக்குருவி”, “வனிதாமணி”, “ஏ ஆத்தா ஆத்தோரமா” போன்ற ஆதியில் இருந்து ராஜாவின் மேடைகளில் கூட வரும் பாடல்களும் வந்தன.
“கண் மலர்களின் அழைப்பிதழ்” பாடலுக்குப் பின் இடைவேளை எடுத்து மீண்டும் “ தென்பாண்டிச் சீமையிலே” பாடலைப் புலம் பெயர் தமிழர்களுக்காக மாற்றிப் பாடி நெகிழ வைத்தார் ராஜா.
இந்த நிகழ்வில் கூட்டுப் பாடகர்களுக்குக் கடந்த நிகழ்வு போலத் தனிப் பாடல்களும் அதிகம் கொடுத்து மகத்துவம் செய்திருக்கலாம்.நிகழ்வுக்கு முந்திய நாள் ரசிகர் சந்திப்பும் முறையாக நடத்தப்பட்டிருக்கலாம். ராஜா குறைவான நேரத்தை ஒதுக்கியிருந்தாலும், வந்திருந்த கலைஞர்கள் ரசிகர்களோடு மனம் விட்டுப் பேசும் ஒரு ஒழுங்கமைப்பு இருந்திருக்கலாம். புகைப்படக் கண்காட்சியாகவே அது அமைந்து விட்டது.
எழுபதுக்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்களோடு வரும் இசைஞானி இம்முறை குறைச்சலான படையணியோடு வந்தது பெரும் ஏமாற்றம்.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ஒரு ரசிகன் நாடி வரும் போது அவன் காதுகளில் பின்னணி இசை தான் ஓடிக் கொண்டிருக்கும். ஆகவே பாடகர்கள் அதிகப்படியாக இருக்க வேண்டும் என்ற முக்கியமில்லை, ஆனால் நிறைவான இன்னிசை வாத்தியங்கள் தான் இசைஞானியின் மேடை நிகழ்வின் இலக்கணம்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிந்திய நிகழ்வு என்பதால் இந்த நிகழ்ச்சி அவலாக இனித்ததில் மறுப்பில்லை. ஆனால் அடுத்த நிகழ்வுகள் இதே தரத்தில் இருப்பதில் நியாயமில்லை.
“நீங்க என்னோட அலுவலகத்துக்கு ஈமெயில் போடுங்க உங்களுக்கு நான் என் அன்புப் பரிசைக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டு,
இதுவரை நான் உங்களுக்காகக் கொடுத்த பாடல்கள் எல்லாம் கூட என் அன்புப் பரிசுகள் தான் என்றார் ராஜா.
சிட்னி ஒபரா ஹவுஸில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வுக்காக இப்போதே காத்திருக்கும் கடைக்கோடி ரசிகன்.
கானா பிரபா

18.09.2022