Pages

Monday, August 23, 2021

இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் புது வசந்தத்துக்கு முன் 🎸🥁

தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களில் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு மட்டும் விக்ரமனுக்கு முன், விக்ரமனுக்குப் பின் என்று பகுத்து அவரின் இசைப் பயணத்தை நோக்க முடியும். அதுவும்

அவரின் ஆரம்ப காலத்தில் பயணித்தது ராஜபாட்டை எனலாம். 

இசைக் கலைஞர் செல்வராஜின் மகன் எஸ்.ஏ.ராஜ்குமார் எண்பதுகளில அடையாளப்பட்ட ஒரு இசையமைப்பாளர் என்பதோடு தானே அக்காலத்தில் பெரும்பாலும் பாடலாசிரியராகவே இரட்டைச் சவாரியும் செய்த வகையில் தனித்துவமானவர். தன்னுடைய இசை வளத்துக்குத் தன் பால்யப் பருவத்தில் டுமீல் குப்பம் மீனவ சமூகத்தோடு வாழப் பழகி அவர்களோடு கடல் படுக்கையில் படகுச் சவாரியில் பாட்டுக் கச்சேரி படித்ததுவும் பயிற்சிக் களனாக அமைந்ததை ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார் தன் “ஏ புள்ள கருப்பாயி” பாடலின் பின்னணிச் செய்தியாக.

ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். 

அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.

கீபோர்ட் வாத்தியக்காரராக ஏ.ஆர்.ரஹ்மான், சக இசைக்கலைஞராக மணிசர்மா, நெப்போலியன், நவீன் இவர்களோடு இசை ஒருங்கமைப்பாளராக வித்யாசாகர் என்று எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலம் பின்னாளில் திரையிசையை ஆட்கொண்ட ஜாம்பவான்களின் கூட்டாக அமைந்திருக்கின்றது. இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர் கூடத் தன் இசையின் அபிமானி என்றும் அவர் வழியாக ராஜாவிடம் “பொன்மாங்குயில்” பாட்டு போய்ச் சேர்ந்து ராஜாவும் மெச்சியதாக ராஜ்குமார் குறிப்பிட்டிருக்கின்றார்.

தன்னுடைய முதல் படப் பாடல் ஒலிப்பதிவுக்காக வந்த ஜெயச்சந்திரன் ஒலிப்பதிவு தாமதப்படுகிறதே என்று கடிந்து கொண்டாராம், ஆனால் பின்னர் பெரும் எடுப்பிலான பிரமாண்ட வாத்தியக் கூட்டணியைக் கண்டு பிரமித்துத் தன் பாடலைப் பாடி முடித்த பின் பாராட்டி விட்டுப் போனாராம் எஸ்.ஏ.ராஜ்குமாரிடம்.

அந்தப் பாட்டு தான்

“சின்னப் பூவே மெல்லப் பேசு”

“நான் பாடின சிறப்பான பாடல்களில் ஒன்று ரொம்பக் காலத்துக்கு நிற்கும்” பாடி விட்டு இப்படிச் சொல்லிப் போனாராம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரிடம்.

இப்படியான ஆரம்ப கால எஸ்.ஏ.ராஜ்குமார் என்ற சங்கீதக்காரனின் இசைப் பாதையில் உல்லாசப் பூங்குயிலாய் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு பாடல்களும் இசை வசந்தம் புகழ் சேர்த்தவை.

“சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே 

இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே…..”

https://www.youtube.com/watch?v=iUN49mpg3Qc

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் ஜோடிக் குரல்கள் தனித்துவமான பாதையில் வெற்றிக் கொடி நாட்டியவை, 

இசையமைப்பாளர்கள் இந்த ஜோடிக்குரல்களுக்குப் பொருந்தும் விதமாய்ச் சந்தம் சேர்த்து விட்டுத்தான் அழைப்பார்களோ என்ற அளவுக்கு அந்தத் தனித்துவம் இருக்கும் இப்பேர்ப்பட்ட குரல்களைத் தன் முதல் படத்திலேயே ஜோடி சேர்த்து அழகு பார்த்தார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

“உதயமே உயிரே அழைத்தும் வாராததேன்.....”

https://www.youtube.com/watch?v=V5Bn2On5FzA

இதோ அபூர்வ ஜோடிக் குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & உமா ரமணன் சேர்கிறார்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் “ஒரு பொண்ணு நெனச்சா” படத்துக்காக. இந்தப் பாடலை எல்லாம் கேட்டால் நேர்த்தியான இசையும், நெருடல் இல்லாத மெட்டுமாக இளையராஜா கணக்கில் வானொலிகள் சேர்த்து விட்ட பாட்டுகளில் ஒன்று. அப்பேர்ப்பட்ட அங்கீகாரம் தனக்குப் பெருமையே என்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

சொல்லப் போனால் “விக்ரமனுக்கு முன்” என்ற எஸ்.ஏ.ராஜ்குமார் காலத்தில் என் முதல் தேர்வு இந்த “உதயமே உயிரே” பாட்டுத்தான். இசைக் கோப்பில் ஒரு ராஜ விருந்து இது.

சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் மொத்தம் பத்துப் பாடல்களைப் பல்வேறு பாடகர்களுக்குப் பங்கிட்டவர் எஸ்பிபிக்கு மட்டும் முத்தான மூன்றை எழுதி வைத்தார் எஸ்.ஏ.ராஜ்குமார். அதில்

“கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே”

https://www.youtube.com/watch?v=pSXmH9lA00g

பாடலை இதே பிரபு நடித்து இளையராஜா இசைத்த “ஆனந்த்” படத்தின் “பூவுக்குப் பூவாலே மஞ்சம் உண்டு” https://www.youtube.com/watch?v=MoFiFbTZwu4  பாடலோடு பொருத்திப் பார்க்கக் கூடிய மகத்துவம் நிறைந்தது.

பின்னாளில் இதே சோக ராகத்தில் “நான் கண்டது” (பறவைகள் பலவிதம்) பாடலை எஸ்பிபிக்கே கொடுத்தார் எஸ்.ஏ.ராஜ்குமார். மூன்றுமே ஒரே அணியில் பொருத்திப் பார்க்கக் கூடியவை.

அந்தக் காலத்தில் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் & இயக்குநர் ராபர்ட் – ராஜசேகரன் ஜோடி என்ற கூட்டணிக்கு விளம்பரமே தேவை இல்லாத மவுசு இருந்தது. அதனால் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த மற்றோர் படங்கள் அதிகம் எடுபடாமல் போனதும் உண்டு. அப்படி ஒன்று தங்கச்சி (ராம்கி நாயகன்) என்ற படம். அதில் அனைத்துப் பாடல்களும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே பாடினார். அது போல அர்ஜூன் நடித்த சத்யா மூவிஸ் இன் “என் தங்கை” படத்திலும் எஸ்பிபியே முக்கியத்துவப்பட்டார்.

அந்தக் காலத்தில் சுரேஷ், நதியா ஜோடியைப் பிரபலமாக்கிய இயக்குநர், தன் படங்களில் டி.ராஜேந்தர், ஆர்.டி.பர்மன் என்றெல்லாம் ஜோடி சேர்த்து ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் வி.அழகப்பனின் குங்குமக் கோடு படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் சேர்ந்த போதும் ஆறு பாடல்கள் அனைத்துமே எஸ்பிபி வசமாகின.

மக்கள் நாயகன் ராமராஜன் & எஸ்.ஏ.ராஜ்குமார் கூட்டணி சேர்ந்த போது கிட்டிய அருமையான பாடல்களில் எஸ்பிபிக்கானவை “போறவளே பொன்னுத்தாயி” (ரயிலுக்கு நேரமாச்சு), ஆஷா போன்ஸ்லேயை ராஜாவுக்கு அடுத்துப் பயன்படுத்திய தமிழ் இசையமைப்பாளர் என்ற வகையில் செவ்வந்திப் பூ மாலை கட்டு (தங்கத்தின் தங்கம்) பாடலைத் தனிப் பெண் குரலாகவும், எஸ்பிபி & சித்ரா ஜோடிக் குரல்களாகவும் https://www.youtube.com/watch?v=20G89n9tcXU

கொடுத்து அந்தக் காலப் பிரபல பாட்டுகளில் ஒன்றாக்கினார்.

அந்தப் படத்தில் ஆஷா போன்ஸ்லேவுக்குக் கிடைத்த “முத்து முத்து நான் கண்ட முத்து” பாடலும் புகழ்பூத்ததொன்று.

மனசுக்குள் மத்தாப்பு படத்தில் “பொன்மாங்குயில்” பாடலின் சுகந்தத்துக்கு எதிர்மாறு “யார் யார் இங்கே” என்ற துள்ளிசைப் பாடலிலும் எஸ்பிபி மின்னினார்.

எண்பதுகளின் அண்ணன்மாரின் சோக கீதங்களில் ஒன்றாக வலம் வந்த பாட்டு கே.ஜே.ஜேசுதாஸின் “ராஜ்ஜியம் தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்”

https://www.youtube.com/watch?v=E9_AvSSyHwA

இந்தப் பாட்டை ஏறக்குறைய மறந்தே போய் இருந்தேன். சில வருடங்களுக்கு முன் பிரான்ஸில் இருந்து ஒரு பேஸ்புக் உறவு இந்தப் பாட்டைத் தேடித் தருவீர்களா?  என்று கேட்ட போது தான் சுட்டது. அட இந்த அருமையான பாட்டை மறந்தே போயிருந்தேனே என்று. அப்போது தான் நதிமூலம் தேடிப் போனால் “மக்கள் ஆணையிட்டால்” படத்துக்காக எஸ்.ஏ.ராஜ்குமார் கொடுத்த பாட்டு அது. ஒரு காலத்தில் நம்மூர் ரெக்கார்டிங் பார் காரர்களின் கையில் செமத்தியாக வேலை வாங்கப்பட்ட இசைத்தட்டு அது.

அதே காலகட்டத்தில் ராதாரவி நாயகனாக நடிக்க, விஜயகாந்த், கார்த்திக் சிறப்புத் தோற்றத்தில் நடித்த வீரன் வேலுத்தம்பி படத்துக்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் தான் இசை.

சத்யா மூவீஸ் தயாரிப்பில் பழம் பெரும் இயக்குநர் ஜெகந்நாதன் இயக்கிய அர்ஜீன் படம் “என் தங்கை” https://www.youtube.com/watch?v=rr3QxDp8M3Y


இதற்கு முன் பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய “தங்கச்சி" , எஸ்.ஏ.சந்திரசேகரின் “பூவும் புயலும்” https://www.youtube.com/watch?v=ErjokQpePsU
 ராம்கி, நிஷாந்தி நடிப்பில் "காதல் விடுதலை"என்று பிரபலங்களின் படங்களுக்கும் இசை கொடுத்தார். இருந்த போதும் முன்பு விட அவரின் புது வசந்தம் என்ற அடுத்த சுற்றில் இன்னும் பல வெற்றிகளைக் குவித்துத் தொடர்ந்தார்.என்று பிரபலங்களின் படங்களுக்கும் இசை கொடுத்தார். இருந்த போதும் அவரின் புது வசந்தம் என்ற அடுத்த சுற்றில் இன்னும் பல வெற்றிகளைக் குவித்துத் தொடர்ந்தார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களுக்கு.

கானா பிரபா

1 comments:

Anonymous said...

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம் பெற்ற Ever green songs பாடல்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு.