Pages

Saturday, August 24, 2019

❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸









இன்றைய நாள் ஆகஸ்ட் 12 ஆம் திகதி கலைஞானி கமல்ஹாசன் தனது திரையுலகப் பயணத்தில் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறார். நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவில் பாதி நூற்றாண்டுக்கு மேல் நிலைத்திருக்கும் கமல்ஹாசனை வெறுமனே நடிகராக அன்றி, தமிழ் சினிமா அதன் அடுத்த பரிமாணத்துக்கு இட்டுச் செல்ல பல்வேறு தொழில் நுட்ப மாறுதல்கள், தமிழ் சினிமாவின் வியாபார உத்திகள் என்று அதன் மாற்றத்துக்கு வழிகோலியவர்களில் தனித்துவமானவர் எனலாம். எப்படி இசைஞானி இளையராஜாவால் திரையிசைப் போக்கில் ஒரு மாற்றம் வந்ததோ அது போலவே கமலின் பங்களிப்பும் இன்னொருவரோடு ஓப்பு நோக்கவோ வாரிசைத் தேடவோ முடியாத தனித்துவம் கொண்டது. கமல்ஹாசன் குறித்து நீள அகலமான தொடரே எழுதலாம் எனினும் இந்தப் பதிவு ஏற்கனவே தீர்மானித்துக் கொடுக்க எண்ணிய “இந்திரன் சந்திரன்” படத்தின் 30 ஆண்டுக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.
1989 ஆம் ஆண்டில் மட்டும் தமிழில் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மலையாளத்தில் சாணக்யன், தெலுங்கில் இந்துருடு சந்துருடு மூன்று மொழிகளில் நான்கு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கிறார் கமல், இதை நண்பர் முரளி கண்ணன் கூட ட்விட்டரில் சிலாகித்திருந்தார். இப்படியொரு பன்முக வெற்றியை அப்போதும் இப்போதும் நினைத்துப் பார்க்க முடியுமா? வட இந்தியா உட்பட, தென்னிந்திய மொழிகளில் இன்னும் தூக்கலாகக் கொண்டாடப்பட்ட ஒரே நடிகர் கமல்ஹாசன் என்பதற்கு இந்த 1989 நல்ல சான்று
“இந்துருடு சந்துருடு” திரைப்படம் தெலுங்கு சினிமாவின் முக்கியமானதொரு மசாலாச் சித்திரம். இன்று வரை இதன் இசைக்காகவும், கமலின் நடிப்புக்காகவும் உச் கொட்டும் ஆந்திரா வாலாக்களோடு பழகியிருக்கிறேன். தெலுங்கு தேசத்தில் ஒரு வருடம் ஓடிச் சாதனை கண்ட படம் என்று அண்மையில் இதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொல்லியிருந்தார். “சத்யா” திரைப்படம் வழியாக கமல்ஹாசனை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா காட்டில் தொடர்ந்து அடுத்த ஏழு ஆண்டுகள் தொடர் வெற்றிகள். அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் இப்பேர்ப்பட்ட பேரதிஷ்டத்தை.
அதிலும் குறிப்பாக இப்போது பொன் விழாக் கண்டிருக்கும் சுரேஷ் புரடெக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷின் தந்தை தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு
சுரேஷ் கிருஷ்ணாவுக்கு இரட்டைப் பரிசை வழங்குகிறார். 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் “பிரேமா” படம் வெளியாகிறது. தெலுங்கில் உச்சம் கண்ட காதச் சித்திரமாக வெங்கடேஷ், ரேவதி நடிப்பில் இது ஓடிக் கொண்டிருக்க அடுத்ததாக கமல்ஹாசன் மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி நடிக்க “இந்திருடு சந்துருடு” படத்துக்கும் சுரேஷ் கிருஷ்ணாவையே ஒப்பந்தம் செய்கிறார் டி.ராமாநாயுடு. 1989 ஆம் ஆண்டு
நவம்பரில் “இந்துருடு சந்துருடு” வெளியாகி வசூல் சாதனை படைக்கிறது தெலுங்கு தேசத்தில்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சின்னத்திரை உலகம் வராத காலத்தில் வீடியோ சஞ்சிகைகள் வெகு பிரபலம். பூமாலை என்றோர் சஞ்சிகையை சன் டிவி கலாநிதி மாறன் வெளியிட, இன்னொரு பக்கம் அப்போது வீடியோ வெளியீடுகளை நடத்தி வந்த ஏக்நாத் கூட இதே பாங்கில் வீடியோ சஞ்சிகை ஆரம்பித்திருந்தார். பின்னாளில் இளையராஜாவின் ராஜா ஆடியோவும் ஏக்நாத்தும் இணைந்த கூட்டு முயற்சியும் சிங்கார வேலன் காலத்தில் இருந்தது.
இந்த ஏக்நாத் அவர்களே தமிழில் “இந்திரன் சந்திரன்” ஆக மொழி மாற்றி வெளியிட்டார். படத்தின் இறுதிக் காட்சியிலும் நடித்திருப்பார்.
இந்திரன் சந்திரனின் மூலத் திரைப்படத்தின்
திரைக்கதையை கமல்ஹாசன் கவனிக்க, தமிழில் வந்த போது வசனம் எழுதியவர் கிரேசி மோகன்.
தெலுங்கின் புகழ் பூத்த கதாசிரியர் பருச்சூரி பிரதர்ஸ் கதையமைப்பில் இந்த இந்திரன் சந்திரன் என்ற இந்துருடு சந்துருடு வெளியாகியது. ஆந்திர அரசின் சிறந்த நடிகருக்கான நந்தி விருதை கமல்ஹாசன் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர்.ராதாவின் பாதிப்பில் ஒரு வில்லத்தனமான நடிப்பு, வழக்கமான வெகுளிப் பையன் என்று இரட்டை வேடம் கமலுக்கு. அந்தத் தொப்பையும் நடையுமாக மேயராக அவர் நடிக்கும் பாங்கை ரசித்து அது போலவே தொப்பை மாதிரி உடம்பை வளைத்தெல்லாம் நடந்து பார்த்திருக்கிறேன் அப்போது 😀
அபூர்வ சகோதரர்கள் போலல்லாது நகைச்சுவைக்குத் தனியான பாகம் இல்லை, கமல்ஹாசன், நாகேஷ் போன்றோரே கிடைத்த இடைவெளிகளில் அடித்தாடி விடுகிறார்கள். விஜயசாந்தி தவிர ஶ்ரீவித்யா, சரண்ராஜ் என்று தமிழுக்கு அறிமுகமான முகங்கள், கதைக்களம் என்பதால் ஒரு முழு நீளத் தமிழ்ப் படத்தின் வாசனையே அடிக்கும்.
மேயர் திகைத்துப் போய்ப் பார்க்க அவர் கண்கள் வழியாக காரின் முன் விளக்குகளின் ஒளி பாய்ச்சப்படும் காட்சியாக மாறுமளவுக்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு கமல்த்தனமாக இருக்கும்.
இந்திரன் சந்திரன் படத்தைப் பற்றிப் பேசும் போது இசையை விலக்கிப் பார்க்க முடியுமா என்ன?
எடுத்த எடுப்பிலேயே இந்தப் படத்துக்காக ஒரு பாட்டு பாடப் போய் தன் குரல்வளைத் திசு உடைந்து எஸ்.பி.பி ஆறு மாத ஓய்வில் இருந்தது தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். குரல் மாறிப் பாடிய “Nachina Fuddu Vechani Beddu" பாட்டால் தான் வந்தது வினை.
“சந்த்யா ராகபு” தெலுங்கு தேசத்தவர் ராஜாவைக் கொண்டாடும் தலை சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்றாக இருக்கும்.
“காதல் ராகமும் கன்னித்தமிழும்” பாடலைப் பற்றி உருகி உருகி ஒரு முழுப் பதிவே எழுதுவேன். அவ்வளவு பிடிக்கும் எனக்கு. “நூறு நூறு முத்தம் தந்தானே” அந்தக் காலத்து சென்னை வானொலியின் நேயர் விருப்பத்தில் ஏராளம் முத்தங்கள் பதித்த பாட்டு. அந்த சீனக் குரலோடு வரும் “அடிக்கிற கொட்டம்” ஒரு கில்மா ஜாலித் துள்ளல்.
தமிழில் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுத, மனோ & சித்ரா பாடினார்கள். தொடர்ந்து அன்பு சின்னம், இதயத்தைத் திருடாதே போன்ற பட வாய்ப்புகள் போனதுக்கு எஸ்பிபியின் குரல்வளை சத்திர சிகிச்சை காரணமாயிற்று.
கமல் நான்கு படங்களில் பட்டையைக் கிளப்ப இளையராஜா மட்டும் இளைத்தவரா என்ன? அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, இந்திரன் சந்திரன் இம்மூன்றின் பாடல்களும், பின்னணி இசையும் ஒவ்வொரு பரிமாணமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்துருடு சந்துருடு பாடல்களைக் கேட்க
https://youtu.be/F_DJTEg8o_k
இந்திரன் சந்திரன் பாடல்களைக் கேட்க
https://youtu.be/pNETsQHDBWQ
தொடர்ந்து இந்திரன் சந்திரன் பின்னணி இசையை அனுபவிப்போம்.
இந்திரன் சந்திரன் முகப்பு இசை
http://www.radio.kanapraba.com/indranchandran/ic1.mp3
மேயர் ஜி.கே.ராயுடுவுக்கான அடி நாத (theme) இசை
http://www.radio.kanapraba.com/indranchandran/ic2.mp3
மேயரின் சில்மிஷங்களோடு அவர் குரலில் “அழகிய தமிழ் மகள் இவள்”
http://www.radio.kanapraba.com/indranchandran/ic3.mp3
மேயருக்கு எதிராக எழுதும் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்படும் போது
http://www.radio.kanapraba.com/indranchandran/ic4.mp3
பத்திரிகையாளர் சந்தியா (விஜயசாந்தி) மேயரின் ஆசை நாயகி அவரின் உதவியாளர் கிருபாகரின் மனைவி என்ற உண்மையைச் சொல்லும் நேரம் மேயரின் ருத்ர தாண்டவம் இசையில் மிரட்டலாக வெளிப்படும்
http://www.radio.kanapraba.com/indranchandran/ic5.mp3
அதுவரை கொடுமைக்காரத் தந்தையாக இருந்த மேயர் தன் வீடு சென்று குழந்தையிடம் பாசமழை பொழியும் நேரம் நெகிழும் புல்லாங்குழல்
http://www.radio.kanapraba.com/indranchandran/ic6.mp3
மேயர் கிருபாகரனை வேட்டையாட வந்த போது கிருபாகரால் கொல்லப்படும் நேரம்
http://www.radio.kanapraba.com/indranchandran/ic7.mp3
மேயர் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட சந்திரனை ஆள் மாற்றுச் செய்யும் போது
http://www.radio.kanapraba.com/indranchandran/ic8.mp3
சந்திரன் மேயர் போல நடை பழகும் போது
http://www.radio.kanapraba.com/indranchandran/ic9.mp3
சந்தியா & சந்திரன் காதல் வேளை
http://www.radio.kanapraba.com/indranchandran/ic10.mp3
கொல்லப்பட்ட மேயரின் உடலை சந்திரன் காணும் போது
சந்திரன் மேயர் வடிவில் இருந்து கொண்டே நல்ல மனிதராக, நல்ல கணவராக, நல்ல தந்தையாகத் தன்னை அடையாளப்படுத்தும் போது
http://www.radio.kanapraba.com/indranchandran/ic12.mp3
தன்னுடைய தாயைக் காப்பாற்றப் போராடும் சந்திரன்
http://www.radio.kanapraba.com/indranchandran/ic13.mp3
இந்திரன் சந்திரன் இறுதிக் காட்சி
http://www.radio.kanapraba.com/indranchandran/ic14.mp3
கானா பிரபா
12.08.2019

0 comments: