சங்கீதம் எனும் கடலில் அங்கே பழக்கப்பட்டு அங்கேயே வாழ்க்கைப்பட்ட ஒருவர் எவ்வளவு தூரம் அங்கே ஆகச்சிறந்ததொரு வித்தகனாக இருப்பார் என்பதற்கு கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு வாழும் உதாரணம். இன்று காலை வானொலி ஒலிபரப்பின் போது “கங்கைக்கரை மன்னனடி” என்ற வருஷம் 16 பாடலை ஒலிபரப்பிக் கொண்டே அதில் மூழ்கியிருந்த அந்தக் கணங்களில் இந்த இசை மேதையிலிருந்து புறப்பட்ட சாதகப் பரிமாறல்களில் வியப்பு, நெகிழ்வு, மெய்சிலிர்ப்பு என்று கலவையான உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.
தமிழ்த் திரையிசையில் முழுமையான சாஸ்திரிய இசை நெறிகளோடு அமைந்த ஏராளம் பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றின் பொதுத்தன்மை, காட்சிச் சூழல் மட்டுமன்றி படத்தின் முழுமையான ஓட்டமே அந்த இசை மரபு சார்ந்ததாகவே இருக்கும். அதிலும் இசைஞானி இளையராஜாவுக்கு முந்திய திரையுலகம் இந்தப் பாணியில் இன்னும் வெகு இறுக்கமாகவே இருந்து வந்தது.
ஆனால் ஒரு பொழுதுபோக்கு சார்ந்த திரைப்படத்திலும் சாஸ்திரிய இசையை முழுமையாக மையப்படுத்திய பாடலைக் கொடுத்து என் போன்ற கடைக்கோடி ரசிகனையும் கவர முடியும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களோடு ஒரு முழு நீளக் கட்டுரையே எழுத முடியும். முந்திரிக் கொட்டையாக “தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி” என்ற எனக்குள் ஒருவன் பாடல் இந்த நேரத்தில் நினைவில் வந்து நிற்கிறது. அந்த வகையில் “கங்கைக்கரை மன்னடி” பாடலையும் எடுத்து நோக்க முடியும். ஒப்பீட்டு நோக்கில் இவ்விரு பாடல்களுமே தலைவன் துதியாக அதைத் தலைவியின் பார்வையிலும், தலைவன் பார்வையிலுமாக அமையும் பொதுத்தன்மையும் கொண்டு விளங்கி நிற்கின்றன.
“கங்கைக் கரை மன்னனடி கண்ணன் மலர்க்கண்ணனடி” இந்தப் பாடலை எடுத்து நோக்கினால்
“கண்மணியே ராதை என்னும் - காதலியே
நான் விரும்பும் பெண்மணியே....
ஆடை கட்டும் பைங்கிளியே!
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க -
கவலைகளை விட்டு விடு
காற் சலங்கை சத்தமிட - மேடையிலே வட்டமிடு”
என்றொரு தொகையறாவை நிதானமாகக் கொடுத்து விட்டு கடல் நீரைச் சுழித்து ஓடும் படகை நேர்த்தியாகவும், நிதானமாகவும் அதே நேரம் வேகம் தப்பாமலும் எடுத்துச் சென்று பயணிக்கும் ஒரு கடலோடியாக மாறுகிறார் ஜேசுதாஸ்.
முதல் சரணமும் இரண்டாவது சரணமும் இன்னும் இவ்விரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை வெளிப்படுத்தும் போது
“உள்ளத்தை எடுத்தேன்” தொடங்கி “மீனைப் போல் துடித்தேன்” வரை நெகிழ்வான ஓட்டமும் பின்னர்
“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள்” தொடங்கி “இமை தான் விரிய” என்று முடியும் போது ஜதிகளில் காட்டும் துள்ளிசையும், பின்னர் மீண்டும் பழைய பல்லவிக்கு மாறும் நெகிழ்வான ஓட்டமுமாக இருக்கும்.
மீனொன்று உள்ளிருந்து எட்டி வெளியே கடற்பரப்புத் தாண்டி வந்து மீண்டும் உள்ளே போகுமாற் போலொரு பிரவாகம் அது.
இந்தப் பாட்டைக் கூர்ந்து நோக்கினால் அல்லது இந்தப் பாட்டுக்குள்ளேயே போய்க் குடியிருந்து பார்த்தால் தெரியும் இங்கே கே.ஜே.ஜேசுதாசின் நாவில் அற்புதமான பரத நாட்டியம் ஒன்று அரங்கேறியிருப்பதை.
“முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழின் சந்தம் நிறைந்த இந்தப் பாட்டு ஒன்றும் வெகு சாதாரணமாகக் கடந்து விடக்கூடியதொன்றல்ல. அசுர சாதகம் என்பார்களே அது மாதிரி. ஒரு அற்புதமான சிலையை உருவாக்கி விட்டு அதே மாதிரி இன்னொன்றை எப்படி உருவாக்க முடியாதோ அது போலவே இந்தப் பாடல் எப்படி உருவானதோ அதை எப்பேர்ப்பட்டும் எந்தவொரு உச்ச பாடகராலும் இதே உணர்வோடு கொடுக்கவே முடியாது என்பேன்.
“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் - நடை தான் பழக
கத்தும் கடல் நீரலை போல் - இங்கு குழல் தான் நெளிய” என்று தொடங்கும் பகுதியில் துள்ளும் ஒலி எப்படி இசையாக மொழி பெயர்க்கப்படுமோ அதுவே தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலின் வெளிப்பாடு.
தன் காதலியின் அரங்கேற்றம், வேட்டையாட வரும் விரோதியிடமிருந்து காத்து நிற்க வேண்டிய பொறுப்பில் அந்தக் காதலன். இந்தத் திருவிழா மட்டும் குறையின்றி நடந்தால் அதுவே போதும் தெய்வக் குற்றத்தில் இருந்து தப்பி வாழலாம் என்றொரு சூழல் இதெல்லாம் அமைந்த அந்தப் படத்தின் முடிவிடத்தில் இந்த மாதிரிப் பாடலைக் கொடுக்கும் போது அந்த “அவதி” ஐப் பிரதிபலிக்கப் பிரயத்தனப்படும் இசையில் தான் எவ்வளவு போராட்டம்.... அதையே வயலின் குழாமும் தபேலா கூட்டணி சேரக் கண் முன்னே காட்டுகின்றது. பாடலின் வரிகளில் கூட வாலியார் அந்த நெருக்கடி மிகு அழகியலைக் காட்டுகிறார். வருஷம் 16 படம் வந்த போது அதைப் பார்த்து எவ்வளவு தூரம் இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருந்தேனோ அதை இன்றும் அந்தப் படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் எழுப்பி விடும். “கரையாத மனமும் உண்டோ” https://youtu.be/37eraRW1xGU என்று இந்தப்
படத்துக்காகப் பதிவாகி வெளிவராத பாடலைக் கேட்கும் போதும் அதே தான்.
சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்
காத்திருப்பான் கை அணைக்க
காதலியாள் மெய் அணைக்க
https://youtu.be/VPT2LxSHf8s
1 comments:
அருமை
Post a Comment