Pages

Thursday, October 8, 2015

வேதாளம் வந்திருக்குது

அப்போதெல்லாம் படம் பார்ப்பதே அபூர்வம். யாராவது ஒரு நண்பர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோவும் இருக்கும். வீட்டுப் பெரியவர்கள் கையில காலில விழுந்து அனுமதி கேட்டுத்தான் படம் பார்க்க முடியும். 

அப்படித்தான் ஒருமுறை கந்தசஷ்டி விரதம் முடிந்து எங்களூர் கந்தசுவாமி கோயிலில் சூரனை முருகன் வேட்டையாடிய சூரசம்ஹாரம் முடிந்த கையோடு எங்கள் திருவிளையாடலைக் காட்டினோம். இணுவில் சந்தியில் இருந்த வீடியோக்கடையில் வாடகைக்குப் படக் கொப்பியும் எடுத்தாச்சு. 
நண்பரின் பெரியப்பா முறையானவர் பக்திப் பழம். விரதக் களைப்போடு ஆர்வமாக "என்ன படம் தம்பி போடுறியள்" என்று கேட்க
"சூரசம்ஹாரம்" என்று நாங்கள் சொல்லவும் அவருக்குப் புழுகம் தாங்க முடியவில்லை அவரும் வந்து படக் கோஷ்டியோடு குந்திக் கொண்டார். எமக்கோ அந்த நாளில் வந்த பொம்மை, பேசும்படம் சஞ்சிகைகளில் சூரசம்ஹாரம் படக் காட்சிகளைக் கண்ட அனுபவத்தில் திண்டாட்டம். படம் அரைவாசிக் கட்டத்துக்குப் போக முன்பே பெரியப்பா வீரவாகு தேவர் ஆனார் என்பதையும் எழுத வேண்டுமா?

போதைவஸ்தின் கேட்டை மையைப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களில் ரஜினி "ராஜா சின்ன ரோஜா" கமல் "சூரசம்ஹாரம்" என்று பங்கு போட்டுக் கொண்டார்கள்.
இந்தப் படத்தின் இயக்குநர் சித்ரா லட்சுமணன் அந்தக் காலத்தில் மண்வாசனை உள்ளிட்ட படங்களின் பிரப தயாரிப்பாளர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக  இருந்த அவர் "சூரசம்ஹாரம்" மூலம் இயக்குநர் அந்தஸ்த்துப் பெற்றார். சித்ரா லட்சுமணனை முன்னர் வானொலிப் பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது சூரசம்ஹாரம் படம் இயக்கிய அனுபவத்தையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
அக்னி நட்சத்திரம் வந்த சூட்டோடு சூடு கிளப்பிய நடிகை நிரோஷா, உச்ச நட்சத்திரம் கமலுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது அப்போது எங்களுக்கு ஆச்சரியமாகப்பட்டது. அப்போது நிரோஷா மைதிலி என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருந்தார். இந்தப் படத்தில் மைதிலி என்றே குறிப்பிடப்படுகின்றார்.

"வேதாளம் வந்திருக்குது" பாடலை இளையராஜா எழுத மற்றையவை கங்கை அமரனின் கை வண்ணம். 

பாடகர் அருண்மொழி அவர்கள் எடுத்த எடுப்பிலேயே "நான் என்பது நீ அல்லவோ", "நீலக்குயிலே" பாடல்கள் இரண்டைத் தன் அறிமுகப் படத்தில் பாடியது புதுமை. முதலில் கங்கை அமரன் தான் பாடுவதாக் இருந்ததாம்.
சுசீலா அவர்கள் தன் குரலை அப்படியே மாற்றம் செய்யாது கொடுத்திருந்தாலும் "ஆடும் நேரம் இதுதான்" பாடலைக் கேட்கும் போதெல்லாம் போதையோடு பாடும் பாங்கைக் கொடுக்கும் உணர்வு. இசையும் அந்தப் பாடலை முறுக்கேற்றியிருக்கிறது. இந்தப் பாடலைச் சில வருடம் முன் முதன்முதலில் யூடியூபில் அரங்கேற்றிய பெருமை எனக்கே :-))

இசைஞானி இளையராஜா தன் முன்னணிப் பாடகர்களின் இயல்பான குரலை மாற்றிப் பாட வைக்கும் வகையில் ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். அது குறித்த ஒரு தனிப்பதிவும் எழுத உள்ளேன். 
பாடகர் மனோ "முக்காலா" "அழகிய லைலா", "ஏ ஷெப்பா" போன்ற பாடல்களில் இம்மாதிரித் தன் குரலின் இயல்பை மாற்றிப் பாடி அந்தப் பாடல்களும் வெகுஜன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக அமைவது "வேதாளம் வந்திருக்குது". கூடப் பாடிய சைலஜாவுக்குக் குரலை மாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை.

"பாடிப் பார்க்கலாம் ஒரு தேவாரம்" (நீலக் குயிலே), "வந்து தேவாரம் பாடி நிக்குது (வேதாளம் வந்திருக்குது) என்று ஒரே படத்தின் இரு பாடல்களில் தேவாரம் வருகிறது. (என்னே ஆராய்ச்சி என்னே ஆரய்ச்சி :p

வேதாளம் பாட்டுக்கு மூத்த அக்காள் முறை எஞ்சோடி மஞ்சக்குருவி.

இந்தப் பாடலை இன்று ஒரு அதி நவீன ஒலித்தரம் பொருந்திய ஸ்பீக்கரின் வழியாகவோ, ஹெட்போன் வழியாகவோ கேட்டுப் பாருங்கள். இன்றைய நவீன இசையையும் கடந்த அந்தத் துள்ளிசையிம் ஆரம்பம் தொட்டு முற்றுப் புள்ளி இசை வரை அதகளம் தான், பாடலில் பயன்படுத்தப்பட்ட எல்லா இசைக் கருவிகளின் உச்ச தாண்டவம் இந்தப் பாட்டு.

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=OcnWFDXNEd8

1 comments:

Unknown said...

வணக்கம் அண்ணா
உங்களின் சுந்தர குரல் சுனந்தா படித்தேன்.... அவர் இப்போது எங்கிருக்கிறார் விவரம் தெரிந்தால் கூறவும் பார்க்க வேண்டுமே!