Pages

Tuesday, August 4, 2015

பாடல் தந்த சுகம் : வானமென்ன கீழிருக்கு


சில பாடல்களைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்தப் பாடல் எப்படி இசை வடிவம் கண்டிருக்கும் என்ற கற்பனையை வளர்த்திருப்போம். அதுவே பின்னர் உறுதிப்படுத்தப்படும் போது உள்ளூரப் பெருமையாக இருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் "வெற்றி விழா" படத்தில் வந்த "வானமென்ன கீழிருக்கு" பாடல் வழி கிட்டியது.
இந்தப் பாடலில் மூல வரிகளைத் தாண்டிய சோடிப்பு அடியாக "ததாகுதூது ததாகுது தூதூ" என்ற சேர்க்கை இடம்பெற்றிருக்கும். அதைக் கேட்கும் போதெல்லாம் இசைஞானி இளையராஜா வழக்கமாகத் தன் மெட்டுக்குப் பாட்டைத் தருவிக்கப் போடும் டம்மி வரிகளோடு இசைந்ததாக அவரே அமைத்துக் கொடுத்த வரியாகத் தான் இருக்கும் எனவே அந்தத் தத்தகரத்தோடு சேர்த்தே அமைத்த அந்த அடிகளைப் பின்னர் பாடலாசிரியர் தான் போடும் வரிகளோடு பிணைத்து அதாவது "ததாகு தூதூ ததாகு தூதூ" வை அந்தமாக்கி அமைத்திருப்பார் என்று நினைத்து வைத்திருந்தேன்.
அதை உறுதிப்படுத்தியிருந்தார் பாடலாசிரியர் கங்கை அமரன் கடந்த சன் சிங்கர் நிகழ்ச்சியில். இந்தப் பாடலை இளையராஜா மெட்டமைக்கும் போதே "தார தார தார தார தார ராரா ததாகுதூதூ ததாகுதூதூ" என்றே அமைத்ததாகச் சொல்லிருந்தார். கூடவே இந்தப் பாடலில் இடைச் சேர்க்கையாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பெருத்தமான சேஷ்டைக் குரல்களும் சேர்ந்து அமர்க்களப்படுத்தியிருந்ததாகக் கிண்டலோடு சொல்லிச் சிலாகித்தார். அவர் சொல்ல மறந்தது எஸ்.பி.பியோடு இணைந்து பாடி வெகுவாகச் சிறப்புச் சேர்த்த மலேசியா வாசுதேவன் குரலை.

"வானமென்ன கீழிருக்கு பூமியென்ன மேலியிருக்கு" பாடல் கவிஞர் வாலி அவர்கள் எழுதியது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் "வெற்றி விழா" திரைப்படம் வருவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் இதே கமல்ஹாசனுக்காக "வானம் கீழே வந்தாலென்ன அட பூமி மேலே போனால் என்ன" என்று வாலி அவர்களே பாடி வைத்தது. ஐந்து வருடங்களுக்குப் பின் மறக்காமல் வானத்தைக் கீழே வைத்துப் பூமியை மேலே வைத்திருக்கிறார் குறும்புக்கார வாலி.
இந்த மாதிரி இசைக்கட்டுப் பொருந்திய பாடல்கள் வழக்கமாகக் கங்கை அமரனுக்கே போய்ச் சேரும். உதாரணம் தம்தன நம்தன தாளம் வரும். ஆனால் வெற்றி விழா படத்தில் "சீவி சிணுக்கெடுத்து" பாடல் மட்டுமே கங்கை அமரன். மீதி எல்லாமே வாலி எழுதியது.
"மாருகோ மாருகோ மாருகோயி" துள்ளிசைக் கலவையை மறக்க முடியுமா? அந்த நாளில் கல்யாண வீட்டுக் கொண்டாட்டங்களிலும், ஏன் கோயில் திருவிழா நாதஸ்வரக்காரரிடமும் கூட இந்தப் பாடல் தப்பாமல் முழங்கிக் கொட்டிய அந்த நினைவுகள் இன்னமும் தேங்கியிருக்கிறது. பின்னாளில் வாலியே இந்த ந்மாருகோ மாருகோ பாடலை சதி லீலாவதிக்காக இன்னொரு சாஸ்திரீயத் தளத்தில் அரங்கேற்றினார்.
"பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே அன்று" சைக்கிள் வாகனமேதிஅய் காதல் முளை விட்ட காலங்களிலா இது இனித்தது, இன்று கூட நாலு சில்லு Subaru யாத்திரையிலும் காருக்குள் சத்தமாக ஒலிக்க விட்டு, அதிவேகத் தடத்தில் பயணிக்கும் போது இருக்கும் சுகம் இருக்கிறதே சொர்க்கம்.

பள்ளிக்கூடத்துச் சகபாடி விஜயரூபன் கொழும்புக்குப் போய் வந்த பவிசில் எங்களுக்குப் பசம் காட்டியது "வெற்றி விழா" படத்தின் ஓலி நாடாப் பேழையைத் தான். வழக்கமாகக் கலர்ஃபுல்லாக இருக்கும் ஒலி நாடா அட்டைகளில் இருந்து வித்தியாசப்பட்டுப் பள்ளிக்கூட மாணவன் போன்ற வெள்ளைச் சீருடை மேலட்டையில் எக்கோ ஆடியோவின் அந்த வெற்றி விழா ஒலிநாடாப் பேழையை திருப்பித் திருப்பி ரசித்துப் பார்த்தோம் அப்போது.
"குரு சிஷ்யன்" படத்தில் ரஜினிகாந்த் & பிரபு இணைந்து நடித்த போது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்குமிடையில் தள்ளு முள்ளு அப்போது 
சிவாஜி புரெடக்ஷனில் "வெற்றி விழா" முதன் முதலாக கமல்ஹாசன் இந்த நிறுவனத்துக்காகப் பிரபுவோடு இணைந்து நடித்தது. இரு தரப்பு ரசிகர்களால் அப்போது  சேதாரம் வரவில்லை என்பது என் நினைவு. இளமைக் காலங்கள் நாயகி சசிகலா மீண்டும் இன்னும் நிறைய மேக் அப் ஐ அள்ளிப் போட்டுக் கொண்டு நடிக்க வந்தார் இந்தப் படத்தில்.
தர்மத்தின் தலைவன் வழியாகத் தமிழில் வந்த குஷ்புவை இந்தப் படத்திலும் ஜோடியாக்கிக் கொண்டார் பிரபு. சி.மு (சின்னத்தம்பிக்கு முன்)
அந்தக் காலகட்டத்தில் அமலாவைப் பாதிப் படத்திலேயே சாவடிக்கும் வழக்கம் இருந்தது (படுபாவிப் பசங்க, இதை வாசிக்கும் போது காந்திமதி மண்ணை அள்ளி வீசுறாப்ல கற்பனை செய்யவும்) . உதாரணம் உன்னை ஒன்று கேட்பேன், மெல்லத் திறந்தது வரிசையில் வெற்றி விழாவும் அமலாவைப் பாதியிலேயே அவ்வ்.

"வானமென்ன கீழிருக்கு" பாடலின் ஆரம்பத்தில் வரும் முதல் முப்பது விநாடிகளைக் கேட்கும் போது  "இரவு நிலவு உலகை ரசிக்க" (அஞ்சலி) பாட்டுக்குள்ளும் போய் விடுவேன். 

எண்பதுகளின் சூப்பர் ஸ்டார் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் கூட்டணி அமைத்த பாடல்களில் "என்னம்மா கண்ணு செளக்யமா"  எள்ளும், கொள்ளும், லொள்ளும் கொட்டிய பாடல் என்றால், இந்த "வானமென்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு" அதற்கு நேர்மாறான ரகம்.
எஸ்.பி.பி க்கு இந்த மாதிரி ஜாலிக் குத்துகளில் அவரின் குஷிக்குக் கேட்கவே வேண்டாம். பின்னிப் பெடலெடுத்து விடுவார் தகுதகுதுதகுது 
ஆனால் மலேசியா வாசுதேவனின் பாணி பாசில் படங்களில் வரும் வில்லன் மாதிரி நோகாமல் குத்தும் பாணி. பாடும் தொனியிலே ஒரு அப்பாவித்தனம் ஒட்டியிருக்கும். அதை அப்படியே வைத்துக் கொண்டிரு திடீர் சங்கதிகளைப் போட்டுச் சிக்சர் அடித்து விடுவார். எவ்வளவு உன்னதம் நிரம்பிய பாடகர்கள் இந்த இருவரும் அப்பப்பா.

 http://www.youtube.com/watch?v=Nssfv7-kowQ&sns=tw 

1 comments:

தனிமரம் said...

வெற்றிவிழாபடப்பாடல்கள் இன்னும் நினைவில் நீங்காத ராகங்கள் .அமலாவை பாவிப்பயலுங்க கொண்டே போடு வாங்க அந்த நேரச்சினிமாவில்))))