Pages

Friday, April 8, 2011

சிட்னியில் ஶ்ரீகுமாரும் பின்னே ஞானும்


சிட்னிக்கு மலையாளப்பாடகர் எம்.ஜி.ஶ்ரீகுமார் வருகிறார் என்பதை இங்குள்ள மலையாளிகளின் கூட்டு மின்னஞ்சல் எனக்கு உறுதிப்படுத்தியது. சிட்னிக்கு வருகின்ற மலையாளப்படங்களை ஆதரிக்கும் என்னை சக மலையாளியாகவே கருதி என்னையும் தமது மின்னஞ்சல் பட்டியலில் சேர்த்த அவர்தம் பெருந்தன்மை தான் என்னே. இருந்தாலும் எம்.ஜி.ஶ்ரீகுமாரின் இசை நிகழ்ச்சியை என்ன விலை கொடுத்தாலும் பார்த்தே தீரவேண்டும் என்ற என் தீரா ஆசைக்கு விதையாக இருந்தது,வழக்கம் போல இசைஞானி இளையராஜா தான். ஏனென்றால் தான் இசையமைத்த பெரும்பாலான மலையாளப்படங்களில் எம்.ஜி.ஶ்ரீகுமாருக்கு வாரி வழங்கியிருக்கிறார் ராஜா. அதில் ஒன்றிரண்டையாவது மனுஷர் மேடையில் பாடுவாரே என்ற நப்பாசை தான் காரணம். ஆனால் என் ஆசையை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பார்வையாளர்களைக் குறிவைத்து அடித்த ஶ்ரீசாந்த் இன் பந்து போல நிராசை ஆக்கி விட்டது. மேற்கொண்டு இசை நிகழ்ச்சிக்குச் செல்வோம் ;0

அலுவலகத்தில் இருந்து அரை மணி நேரம் சீக்கிரமாகவே மொட்டை அடித்து விட்டு, இரவு வானொலி நிகழ்ச்சிக்கும் கட் அடித்து விட்டு நிகழ்ச்சி பார்க்கவேண்டும் என்ற என் பேராசைக்கு செமத்தியான முதல் அடி கிடைத்தது. ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போதோ, இறங்கும் போதோ என் பாண்ட் இல் இருந்த சாவிக்கொத்து, கார்ச்சாவி, வீட்டுச்சாவி உள்ளடங்கலாகத் தொலைந்து விட்டது. அதைத் தேடி அரைமணி நேர அலைச்சல், சலிப்போடு சரி மனசை ரிலாக்ஸ் ஆக்க எப்படியாவது இசை நிகழ்ச்சிக்குப் போ என்று மன வேதாளம் கட்டளை இட ரயில் நிலையத்தில் இருந்தே அடுத்த ரயிலைப் பிடித்து இசை நிகழ்ச்சிக்குப் போனேன்.

நிகழ்ச்சி தொடங்கியது. எம்.ஜி.ஶ்ரீகுமார் இதோ வருகிறார் என்று மஞ்சள் நிற சேச்சிகள் மேடையில் பகிர, வெள்ளை வெளேர் சேர்ட் உடன் கேரளத் தேங்காய் எண்ணை மகிமையில் வழுக்கை விழாத் தலையர் எம்.ஜி.ஶ்ரீகுமார் வந்தார். ஆங்கிலக் கலப்பில்லாத அட்சர சுத்தமான மலையாளம், வழக்கம் போல சிட்னி ரசிகர்கள் உலகத்திலேயே தலை சிறந்தவர்கள் என்ற ஓவர் பனிக்கட்டி சமாச்சாரம் இல்லாத இயல்பான பேச்சு என்று 80களின் மலையாள சினிமா போன்று எளிமையாக இருந்தார். தனக்குப் பின் வந்த பாடகர்கள் எல்லாம் சிட்னி போய் வந்துட்டோம் என்று சொல்லும் போதெல்லாம் நானும் எப்போ போவேன் என்ற நினைப்பை இன்று நிரூபித்தாகிவிட்டது என்றார். அம்மா பாடலோடு ஆரம்பித்தது அவர் கச்சேரி. கூடவே அப்துல் ரஹ்மான் என்ற ஒரு இளம் பாடகரும் ஒரு ரஞ்சினி ஜோஷ் இளம்பாடகி plus ஏஷியா நெட் புகழ் பிரபல அறிவிப்பாளினியும்ளினியும் வந்திருந்தார்கள்.

கேரளத்தின் சப்தம் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையில் குரலாகப் பிரதிபலிக்கின்றது என்று சிலாகித்தவர் ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் யோசப் உம் தன்னுடைய தந்தையும் நாடகத்தில் ஒன்றகா நடித்தவர்கள் அந்தக் காலத்தில் இருந்தே நாம் குடும்ப நண்பர்கள். நான் இசையமைக்கும் சகுடும்பம் ஷியாமளா படத்தில் ஒரு பாடலைப் பாடுகிறீர்களா என்று ஜேசுதாசைக் கேட்க "பாடலாமே , அதானே என் தொழில்" என்றவர் விளிச்சோ நீ என்னை விளிச்சோ என்ற பாடலைப் பாடியதோடு, அடுத்தமுறை நீ இசையமைக்கும் போதும் நீ என்னை விளிக்கும் என்று சொன்னதாகக் சொல்லிச் சிரித்தவர் அந்தப் பாடலையும் மேடையில் பாடினார்.

எம்.ஜி.ஶ்ரீகுமாரின் சகோதரர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள உலகில் இசையமைப்பாளர். காலமான அவரை நினைவு கூர்ந்தவர் தன் சகோதரர் மூலம் எத்தனையோ நல்ல சாகித்யங்கள் நிரம்பிய பாடல்கள் கிட்டியதாகச் சொல்லி ஒரு சில வரிகளையும் அந்தப் பாடல்களை நினைவுபடுத்திப் பாடினார். எம்.ஜி.ராதாகிருஷ்ணனோடு கடந்த வருஷம் தனது 48 வயதிலேயே காலமான பிரபல திரையிசைக் கவிஞர் கிரிஷ் புத்தன்சேரியின் இழப்பும் பெருங்கவலை தரும் விஷயம். இருவரும் இணைந்து பணியாற்றிய தேவாசுரம் என்ற ஐ.வி.சசியின் திரைப்படம். அந்தப் படம் மோகன்லாலின் படங்களில் அவருக்கு முத்திரைப் படமாக அமைந்த படங்களில் ஒன்று அந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த பாடல் சூர்ய கிரீடம் என்ற பாடலை இருவருக்கும் சமர்ப்பிக்கின்றேன் என்றவாறே உணர்ச்சிப்பெருக்கோடு அந்தப் பாடலைப் பாடி வசீகரித்தார்.




கிலுக்கம், பிரியதர்ஷன் - மோகன்லால் வெற்றிக்கூட்டணியில் வெளிவந்த படம். அந்தப் படத்தில் வரும் பாடலான ஊட்டிப்பட்டணம் பாடலைப்பாடினார். பாடலில் தமிழ் வரிகள் நிரம்பியது இன்னும் ரசிக்க முடிந்தது.



ம்ம்ஹிஹிம்ஹிம் என்று ஶ்ரீகுமார் ஆலாபனை செய்ய ஆரம்பிக்கவே குறிப்பால் உணர்ந்து ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்த அந்தப் பாடல் தாளவட்டம் என்ற படத்தில் இடம்பெற்ற "பொன் வீணை என்னுள்ளில் மெளனம் வானோ" என்ற பாடலைப் பாடும் போது மெய்சிலிர்க்க அனுபவித்துக் கேட்டேன். எனக்கு நிரம்பப்பிடித்த ஆர்ப்பாட்டமில்லாத பாடல். இந்தப் படம் தமிழில் மனசுக்குள் மத்தாப்பு என்று பிரபு நடிக்க மீள எடுத்த படம்.




கேரள சினிமாக்காரருக்கு தமிழ் என்றால் எனிமா என்பது உலகறிந்த ரகசியம். பாண்டி பாண்டி என்று மூச்சுக்கு மூச்சு கிண்டலடித்து ரசித்த அவர்களையே தமிழின் அதிரடி இசையமைப்பாளர்கள் கவிழ்த்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்பதை நிகழ்ச்சியில் காணக்கூடியதாக இருந்தது. "குண்டு மாங்காத் தோப்புக்குள்ள" என்ற பாடலுக்கு குலுக்கல் ஆட்டமும், இமானின் இசையில் சமீபத்தில் வந்த அட வாடா வாடா பையா என்ற கச்சேரி ஆரம்பம் படப்பாடலும், கந்தசாமியில் வந்த அலேக்ரா, காதலன் படத்தின் முக்காலா முக்காபுலா, வில்லுவில் இருந்து வாடா மாப்பிளை போன்ற பாடல்களை இளம்பாடகர்கள் ரஹ்மானும், ஜோடிப்பெண் ரஞ்சினி ஜோஷ் உம் பாடி சூழலை மாசுபடுத்தினார்கள். இருந்தாலும் பாடிய தமிழில் குறை ஒன்றும் இல்லைக் கண்ணா.

ஐடியா சிங்கர் புகழ் கீபோர்ட் ப்ளேயர் அனூப் குமாரின் இசை கலக்கலாக இருந்தது. ஶ்ரீகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாடலைப் பாடுமாறு கேட்க , "இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை" என்ற பாடலை அவர் பாடிய போது இலைமறை காயாக இன்னொரு நல்ல பாடகர் இருப்பது தெரியவந்தது.

ஶ்ரீகுமாரும் தன் பங்கிற்கு "ஒரு Black & White குடும்பம்" திரைப்படத்தில் இருந்து "ஆள மயக்கண குப்பி பாடலைப் பாடி, பிரியாணிப் பார்சலோடு பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களையும் ஆட வைத்தார்.


கூடவே ஹரிஹரன் நகரில் படத்தில் வந்த "உண்ணம் மறந்து" என்ற பாடல் அந்தப் படம் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட போதும் வந்ததாகச் சொல்லி அதையும் பாடிவைத்தார்.

நரன் படத்தில் மோகன்லால் வேலோடு ஆடிய வேல்முருகா அரோஹரா பாடலுக்கு ரசிகர்கள் காவடி தூக்காதது தான் குறை



அடுத்தது ராஜாவின் பாடல் தான் என்று மனதைச் சமாதானப்படுத்தி மூன்று மணி நேரக் கச்சேரிக்கும் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. கேரள சினிமாவின் எண்பதுகளின் ராஜா, ரவீந்திரனை மட்டுமல்ல இசைஞானி இளையராஜா மலையாளத்தில் இசையமைத்த எத்தனையோ நல்ல பாடல்களைப் பாடி இருந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட ஶ்ரீகுமாரை என்ன செய்யலாம்? விஜய் ஆண்டனி இசையில் இவர் குரலை ரீமிக்ஸ் செய்து தண்டனை கொடுக்கக் கடவது.

11 comments:

வந்தியத்தேவன் said...

போனமா நாலு பிகரைப் பார்த்தமா என இல்லாமல் கேரளாவில் இசைஞானியை எதிர்பார்ப்பது மடத்தனம். நம்மவர்களே இப்போ அவரைக் கண்டுகொள்வதில்லை மல்லுகளா கண்டுகொள்ளும்.

சூட்டோடூ சூடான பதிவுக்கு நான் தான் சுடு பிட்ஷா

சித்தன்555 said...

எம் ஜி ராதாகிருஷ்ணனின் பின்னணி இசையின் வலிமையை உணர மணிச்சித்திரத்தாழ் ஒன்றே போதும்.

கோபிநாத் said...

\\என் பேராசைக்கு செமத்தியான முதல் அடி கிடைத்தது\\

ம்ம்...முன்னாடியே தெரிஞ்சி என்ன லாபம் ! சாவி எல்லாம் கிடைச்சிடுச்சா தல !?

தனிமரம் said...

நாங்களும் இசைக்கச்சேரியைப் பார்த்தது போல் இருந்தது ராஜாவை இவர்கள் தான்  பிரபல்யப்படுத்தனுமா? சாவிக்கொத்து கிடைத்ததா!என் கேள்வி மறந்துவிட்டதா நண்பரே.

கானா பிரபா said...

சித்தன்555 said...

எம் ஜி ராதாகிருஷ்ணனின் பின்னணி இசையின் வலிமையை உணர மணிச்சித்திரத்தாழ் ஒன்றே போதும்.//

உண்மைதான், அந்தப் படத்தின் ஜீவநாடி அவரது எளிமையான இசை தான்

G.Ragavan said...

ஸ்ரீகுமார் நல்ல திறமையுள்ள பாடகர். ஆனால் அவருடைய மூக்கால் பாடும் குரல் கேட்பவர்களுக்குச் சற்று சலிப்பை உண்டாக்கும் என்பது என் கருத்து.

மலையாளிகளுக்கு தமிழ் இசையமைப்பாளர்கள் என்றாலே ஒரு இளப்பம். இளையராஜா என்னதான் இசையமைத்துக் கொட்டினாலும் அவரை நினைவு கூற மாட்டார்கள். இதை விடுங்கள். பிறப்பால் மலையாளியாகப் பிறந்து வளர்ப்பால் தமிழராகிப் போன மெல்லிசை மன்னருக்கும் இதே கதிதான். எனக்குத் தெரிந்த வரை பாடகர் ஜெயச்சந்திரனைத் தவிர இளையராஜாவையும் விஸ்வநாதனையும் கேரளத்தில் சிலாகிக்கும் மலையாளப் பாடகர் யாரும் இல்லை என்பதே உண்மை. அது இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட குயில்பாடகியாக இருந்தாலும் கூட. எல்லையைத் தாண்டியதும் ஜான்சன், ரவீந்திரன், ராதாகிருஷ்ணன் என்றுதான் கதைப்பார்கள்.

வந்தியத்தேவன் said...

ராகவன் அவர்களின் கருத்துடன் கொஞ்சம் ஒத்துப்போகின்றேன் தமிழ் நிகழ்ச்சிகளில் சித்ரா ராஜாவை ஆகா ஓகோ எனப் புகழ்வார் ஆனால் மலையாள நிகழ்வுகளில் ஒன்றுமே சொல்லமாட்டார், இந்தவகையில் ஜேசுதாஸ் என்ன நிகழ்வு என்றாலும் ராஜாவை சிலாகிக்காமல் விடமாட்டார்.

நன்றி மறப்பதும் முதுகில் குத்துவதும் மல்லுகளுக்கு கை வந்த கலை.

கானா பிரபா said...

வாங்கோ வந்தி

சுடச்சுட பீட்சாவோடு வந்ததற்கு நன்றி ;)
என்னதான் அவர்கள் மறைத்தாலும் ராஜா ஒரு நிலா அதைக் கைகளால் மறைக்க முடியுமோ?

கானா பிரபா said...

தல கோபி

சாவிக்கொத்து இன்று மீண்டது ;-)

வாங்கோ நேசன்

உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்

கானா பிரபா said...

வாங்க ராகவன்

கசப்பான அந்த உண்மையை ஏற்கவேண்டித்தான் இருக்கு

காத்தவராயன் said...

குமார் என்ற‌தும் ஓர் நினைவு வ‌ந்துபோகிற‌து.

மோக‌முள்ளில் குமார் பாடிய‌,

"சொல்லாயோ வார்த்தை ஒன்று"
ம‌ற்றும்
"நெஞ்சே குருநாத‌ரின்"

ஆகிய‌ இர‌ண்டு பாட‌ல்க‌ளையும் நீக்கிவிட்டு அத‌ற்கு ட்ராக் பாடிய‌ அருண்மொழியின் பாட‌லையே ப‌ட‌த்தில் வைத்திருப்பார் சாமியார்.
அருண்மொழியுட‌ன் ஒப்பிடும்போது, குமார் ஏக‌ப்ப‌ட்ட‌ த‌ப்பும் த‌வ‌றுமாக‌த்தான் பாடியிருப்பார்.

இப்போது கூட‌ கேட்டுப்பாருங்க‌ள், "ஞான் அழைக்க‌ நில்லாயோ நேரில் வ‌ந்து" என்று பாடியிருப்பார்.