Pages

Sunday, September 12, 2010

மனதோடு பேசிய "ஸ்வர்ணலதா"

ஒரே வாரத்துக்குள் இன்னொரு துயரப்பகிர்வைப் பதிவாகத் தரும் துரதிஷ்டத்தை நினைத்து மனம் வருந்திக் கொண்டே தொடர்கின்றேன். நம் பால்யகாலத்தின் ஞாபகங்களின் எச்சங்களாக, அந்தக் காலகட்டத்தை மீண்டும் எம் மனத்திரையில் ஓட்டிப்பார்க்கப் பண்ணும் சங்கதிகளில் அந்த நாட்களில் வந்த பாட்டுக்கள் பெரும் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணி விடும். அந்த வகையில் என் வாழ்க்கையின் பதின்ம வயதுகளின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன் குரலினிமையால் வசீகரித்த ஸ்வர்ணலதா என்ற பாட்டுக் குயில் இன்று ஓய்ந்த செய்தியைக் கேட்டபோது ஒரு எல்.பி ரெக்கோர்ட் ஐ பாளம் பாளமாக உடைத்து நொருக்கும் நிலையில் என் மனம். அந்த இளமை துளிர் காலத்து நினைவுகளை வேரோடு பிடுங்கிச் சாய்த்தது போல.

சில வாரங்களுக்கு முன்னர் சிட்னியில், தமிழகத்துக் கலைஞர்களை வரவழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் நண்பர் ஒருவரிடம் பேசும் போது "யார் யாரையெல்லாம் அழைத்து வருகின்றீர்களே, பாடகி ஸ்வர்ணலதாவையும் ஒரு முறை சிட்னிக்கு அழைத்து வரலாமே" என்று கேட்டேன். "அவரை ஏற்கனவே அணுகியிருக்கின்றேன், ஆனால் அவருக்கு விமானத்தில் ஏறிப் பயணிக்க இயலாமையை ஏற்படுத்தும் ஒருவித பயவியாதி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார். "சரி அப்படியென்றால் ஸ்வர்ணலதாவின் தொலைபேசி எண்ணையாவது தாருங்கள், நான் ஒரு வானொலிப் பேட்டி எடுக்கின்றேன்" என்றேன். வானொலிப் பேட்டிக்கான தருணம் பார்த்திருக்கையில் அதை முற்றுப்புள்ளியாக்கியிருக்கின்றது ஸ்வர்ணலதாவின் அத்தியாயம்.

தமிழ்த்திரையிசையின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் ஆசியைப் பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய பாடகர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தின் மூலம் மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் தான் ஸ்வர்ணலதாவின் திரையிசை வாழ்வின் முதற் பாட்டு. பாரதியாரைப் போலவே தன் வாழ்க்கைக் கணக்கை முழுமையாக முடிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

இசைஞானி இளையராஜாவுக்கு எண்பதுகளின் முதல் வரிசைப்பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றீடாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா. "குரு சிஷ்யன்" படத்தில் வரும் "உத்தமபுத்திரி நானு" என்ற பாடல் தான் ராஜாவின் பட்டறையில் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. சுனந்தா, மின்மினி ஆகியோர் அளவுக்கு ஒரு தேக்கம் இல்லாது கடகடவென்று உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார் ராஜாவின் மந்திர மெட்டுக்களோடு.
நடிகை குஷ்பு பரபரப்பான ஒரு பிரபலமாக மாறிய போது கச்சிதமாகப் பொருந்திப் போனது சுவர்ணலதாவின் குரல். குறிப்பாக சின்னத்தம்பி, இது நம்ம பூமி, பாண்டித்துரை ஆகியவை சாட்சியம் பறையும். என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட்டில் தன்னுடைய அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக் குவித்துப் படத்தின் பெருவெற்றியிலும் பங்காளி ஆனார். அந்தக் காலகட்டத்தின் நான் சென்னை வானொலியை நேசித்த போது லல்லு, சத்யா , ரேவதி என்ற முகம் தெரியாத சென்னைவாசிகள் ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பில் தொடர்ந்து கேட்ட அந்தப் பாட்டு என் விருப்பமாகவும் பெயர் சொல்லாது இடம்பிடித்தது. "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடலில் இவர் கொடுத்த உருக்கத்தை யாரை வைத்துப் பொருத்திப் பார்க்க முடியும்? அந்தக் காதல் அரும்பிய காலகட்டத்தில் நேசித்தவளின் குரலாகப் பிரதியெடுத்தது இந்தச் ஸ்வர்ணலதாவின் ஸ்வரம்.

"மாசிமாசம் ஆளான பொண்ணு" தர்மதுரை படப்பாட்டில் அடக்கி வாசித்த இவர் "ஆட்டமா தேரோட்டமா" என்று கேப்டன் பிரபாகரனில் ஆர்ப்பரித்த போதும் தயங்காமல் ஏற்றுக் கொண்டது மனசு. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" பாட்டின் ஆரம்ப அடிகளில் இவர் செய்யும் ஆலாபனை இருதயத்தை ஊடுருவி காதல் மின்சாரம் பாய்ச்சும்.
"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" என்ற அந்த மந்திரப்பாட்டுக் காதுகளை ஊடுருவும் போது மயிர்க்கூச்செறியும் நிகழ்வு ஒவ்வொரு முறையும்.


1990 ஆம் ஆண்டில் இருந்து 1995 வரையான காலகட்டத்தில் இசைஞானி இளையராஜா இவரை மனதில் வைத்தோ என்னவோ அள்ளி அள்ளிக் கொடுத்த அத்தனை மெட்டுக்களும் அந்தந்தப் படங்களின் நாயகிகளுக்குப் பொருந்தியதோடு நம் மனசிலும் அழியாத கோலங்கள் ஆகி இது நாள் வரை தொடர்கின்றன.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் புதுக்குரல் தேடிடும் பயணத்தில் விட்டுவிலக்காத குயில்கள் வரிசையில் ஸ்வர்ணலதாவுக்கு மிகச்சிறந்த பாடல்களைக் கொடுத்ததோடு தேசிய விரு(ந்)தாக "கருத்தம்மா" படப்பாடலான "போறாளே பொன்னுத்தாயி" பாடலைக் கொடுத்த பெருமை இவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் மகுடம். அந்தப் பாடலில் ஆர்ப்பரிப்பில்லாத மெலிதான இசையைக் கடந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஸ்வர்ணலதாவின் அந்த சோக நாதம். "அலைபாயுதே" படத்து "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாட்டு அதே அலைவரிசையில் பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு வைரம். "காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாட்டில் ஸ்வர்ணலதாவுக்கு ஜோடி கட்டி அவரை இன்னொரு வடிவிலும் தன் இசையால் நிரப்பியவர் ரஹ்மான்.


ஸ்வர்ணலதாவின் முதற்பாட்டு "சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா" - நீதிக்குத் தண்டனை



"மாலையில் யாரோ" - சத்ரியன்



"குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" - என் ராசாவின் மனசிலே



"என்னுள்ளே என்னுள்ளே பலமின்னல் எழும் நேரம்" - வள்ளி




"என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி" - உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்"



"போவோமா ஊர்கோலம்" - சின்ன தம்பி




"காதலெனும் தேர்வெழுதி" - காதலர் தினம்



"எவனோ ஒருவன் வாசிக்கிறான்" - அலைபாயுதே




"போறாளே பொன்னுத்தாயி" - கருத்தம்மா




சமீபகாலமாக நான் அடிக்கடி ஐபொட் இல் கேட்டுக் கிறங்கும் பாடல் "நன்றி சொல்லவே உனக்கு என் மனவா வார்த்தையில்லையே" பாடல். சொந்தம் எதுவும் இல்லாத தனியன் ஒருவன், சமுதாயத்தில் ராசியில்லாது கல்யாணச் சந்தையில் விலைபோகாதவளைக் கரம்பிடிக்கின்றான். இந்த இரு உள்ளங்களும் இது நாள் வரை தம் வாழ்வின் சோகப் பக்கங்களைப் பகிர்ந்து மாறி மாறித் தம்மிடையே இருவரும் நன்றி பகிர்கின்றார்கள் இந்த புது வசந்தத்திற்காக. பாடலின் அடி நாதத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் , ஸ்வர்ணலதாவும் அள்ளிக் கொட்டிய அந்தப் பாடல் மீண்டும் நினைவில் எட்டிப் பார்த்துச் சோக ராகம் பிரிக்கின்து.

"திசையறியாது நானே இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே"

33 comments:

Thamiz Priyan said...

ஸ்வர்னலதாவுக்கு எங்களது அஞ்சலிகள்! அவரது என்னுள்ளே என்னுள்ளே எப்போதும் என் காதுகளில் ரீங்கராமிடும் பாடும்.. :(

பைரவன் said...

பாடிய அனைத்துப் பாடல்களும் அருமை எனச் சொல்லவைக்கும் பாடகர்களில் இவரும் ஒருவர்.


இழப்பு ஈடு செய்ய முடியாதது.

Unknown said...

நண்பரே..! குயில் வாழும்போதே நாம் ஆளாளுக்குப் பதிவு போட்டுச் சிறப்பித்தோம்.குயில் வானில் மறைந்தாலும் அதன் கானங்கள் மறையாது.

நன்றி.

நானும் பதிவுப் போட்டுஇருக்கிறேன்.

//"என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி"//

ஆகா... இப்போது கேட்டுக்கொண்டு இருக்கிறேன் நண்பா.

ILA (a) இளா said...

நெஞ்சமே பாட்டெழுது :(

கோபிநாத் said...

ஒவ்வொரு பாடலும் முத்துக்கள்...ம்ம்ம்...;(

a said...

மயக்க வைக்கும் வசிகர குரல் கொண்ட பாடகி.............

ராமலக்ஷ்மி said...

காலத்தால் அழியாமல் வாழும் அவரது இனிய பாடல்கள். அவரது மறைவினைப் பற்றி அறிந்ததும் நேராக இங்கு வந்தேன் என் அஞ்சலிகளைப் பதிய.

thamizhparavai said...

Manasu kanakkiRAthu prabha

Unknown said...

This post makes my eyes tears. :-(

velji said...

அவரை நினைவுறுத்தும் அருமையான பாடல்கள்!

அவரது மறைவு துரதிருஷ்டம்தான்...

நிலாமதி said...

குயில் பறந்தாலும் விட்டுச்செல்லும் நினைவுகள் காலம் காலமாய் நிலைத்திருக்கும். எனக்கு விருப்பமான் பாடல் மாலயில் யாரோ மனதோடு பேச...

ஹேமா said...

கணீரென்ற குரலோடு நிறைவான பாடல்கள் தந்தவர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

சஞ்சயன் said...

எதுவும் எம் கையில் இல்லை.. பிறப்பில் இருந்து இறப்பு வரை.
அமைதி கொள்வோமாக!

Anonymous said...

Very sad

கிருஷ்ணா said...

என்னால் இதுவரையில் ஜீரணிக்கமுடியவில்லை அந்த செய்தி பொய்யாகிவிடதா என்று வெகு நேரம் ஸ்தம்பித்திருந்தேன்

Rajah said...

நேற்று தான் ஸ்வர்ணலதாவின் மாலையில் யாரோ என்ற பாடலை( எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ) எனது facebook பதிவிறக்கம் செய்தனான் இன்று துயர செய்தியை தருகிறீர்கள். இந்த மாதம் எந்த ஒரு ஊடகத்தயும் பார்க்காமல் கேட்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். எனது அஞ்சலிகள்

ய‌சோத‌ர‌ன் said...

என‌க்கு எப்பொழுதுமே பெண் குர‌ல் பாட‌ல்க‌ளில், யாருடைய‌ பாட‌ல் என‌ இன‌ம் காண்ப‌து க‌டின‌மான‌ விட‌யமாக‌வே இருக்கிர‌து (ஜான‌கியின் குர‌லை த‌விர‌) என்னை க‌வ‌ர்ந்த‌ பாட‌ல்க‌ளில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட‌லை எப்பொழுதும் விரும்பி கேட்பேன், யார் பாடிய‌து என்று தெரியாம‌லே, அப்பாட‌லை பாடிய‌ குர‌ல் இன்று இல்லை, ந‌ல்ல‌ பாட‌கி ஒருவ‌ரை இழ‌ந்துவிட்டோம்.

MyFriend said...

போறாளே பொன்னுத்தாயி பொலப்பொலவென்னு கண்ணீர் விட்டு....

RIP!!

பாலராஜன்கீதா said...

செய்தியைக் கேட்டதும் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. உடனே உங்கள் வலைத்தளம்தான் காண வந்தேன். அவருக்கு எங்கள் அஞ்சலிகள். அவர் இல்லத்தினரின் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம்.

Unknown said...

பாடகி சுவர்ணலதாவின் மாலையில் யாரோ மனதோடு பேச... இனும் பாடல் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது, அன்னாருக்கு அஞ்சலி.

யோ வொய்ஸ் (யோகா) said...

பாடல்களால் எமது கவலை தீர்த்த ஒரு கானக்குயில் எம்மை விட்டு பறந்து விட்டது.

அவருக்கு எனது அஞ்சலிகள்

Anonymous said...

தன் பாடல்களால் நம்முள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த இசை தேவதைக்கு என் கண்ணீர் அஞ்சலி.

Anonymous said...

நன்றி...என்னைக் கவர்ந்த மற்ற பாடல்கள்...நாங்கள் திரைக்கொண்டு வரும் - பாரடி குயிலே...பிறகு நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்

Unknown said...

மாலையில் யாரோ... என்று மயக்கிய குரல் இனி நம்மிடம் இல்லை :(
RIP

G.Ragavan said...

போன வாரம் முரளியின் மறைவு மிகுந்த மனவருத்தத்தை அளித்ததென்றால் இந்த வாரம் சுவர்ணலதா. மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவர். நிச்சயமாக பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா வரிசையில் சேரப் பொருத்தமானவர். இறைவனின் எண்ணம் வேறுவிதமாக இருந்திருப்பது நமக்கு இழப்புதான்.

அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.

சின்னஞ்சிறு குயில்தான் பாடுமா? சின்னஞ்சிறு கிளியே என்று பாடத்தொடங்கிய இந்தக் கிளி பாடியதெல்லாம் இனிய பாடல்கள். மும்மூர்த்திகளின் ஆசி பெற்ற ஒரே பாடகி என்று சொல்லலாம்.

நல்ல பாடல்களை வரிசைப்படுத்தித் தந்துள்ளீர்கள். கடல்பூக்கள் படத்தில் தேவா இசையில் இவர் பாடிய பாடல் மிக அருமையாக இருக்கும். சட்டென்று பாடல் நினைவுக்கு வரவில்லை.

kanapathy said...

நாங்கள்தான் கொடுத்துவைக்காதவர்கள். சொர்ணலதாவின் இசையைக்கேட்டாலே மனதை அப்படியே பிசைந்து சாறாக ஓடும். எனக்கு அமைதிவேண்டும் போதெல்லாம் நான் கேட்கும் பாடல்கள் "இசைப்பேரசி" யின் பாடல்கள்தான்.
நான் அமைதிவேண்டி கடற்கரையோரம் கால்நனைக்கும்போது திரும்பத்திரும்பக் கேட்பது "மாலையில் யாரோ மனதோடு பேச" பாட்டுத்தான்.நான் கனடாவில் இருந்தாலும் இப்பாட்டைகேட்டவுடன் என் தாயகபூமியின் கடற்கரையோரந்தான் நினைவில் வரும். என்னுள்ளே என்னுள்ளே, மாசிமாதம் ஆளான பொண்ணு, சின்னஞ் சிறு கிளியே, முதலாம் சந்திப்பில், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எப்படி அவரின் பாட்டுக்கள் மனதைப் பிழிந்ததோ அதைவிட ஆயிரம் மடங்கு அவரின் மரணம் எனதுமனதை உடைத்துச் சுக்குநூறக்கி விட்டது. எங்களுக்கு மரணம் என்பது மரத்துப் போய்விட்டது.

yarl said...

அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். இசை உலகிற்கு ஓர் பேரிழப்பு.

tharshayene said...

ஸ்வர்ணலதா அவர்கள் அருமையான ஒரு பாடகி, நான் எப்போதும் வியப்பதும், குரலின் நாதத்தில் ஆகர்ஷிப்பதும் அவர் மீது தான்.
ரங்கீலா படத்தில், ஹே ராமா, கண்ணிலே காதல் கனாக்கள், என்னுள்ளே என்னுள்ளே, கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன போன்றன மிகவும் மனதை வருடும் பாடல்கள்.
அவரின் நினைவுகள் என்றும் இசையுடன்....

salem gowri said...

sir
oorellam un paatu padathil varum

oorellam un paatuthan -- paatu
kettu paarungal

swarnalathavin aalapanai arumaiyai
kannil neer varavazaikkumm

சுடரகன்: சிவா முருகையா said...

"அவரின் விடைகொடு விடைகொடு விழியே கண்ணீரீன் பயணமிது" பாடலும் மறக்க முடியாத பாடலே. உயிர்சுனை ஊற்றினேன் நெருபினை ஊற்றினாய், பெளர்னமி கோப்பையில் உயிர்கொடுத்தாய். என்ற வரிக்கு அவர் கொடுத்த உணர்வு வெளிப்பாடு மறக்க முடியாதது. அவரின் மரண ஊர்வலத்தையும் அவரரின் போறாளே பொண்ணுத்தாயீ சோகப்பாடலையும் நான் அடிக்கடி சேர்த்து யோசிப்பதுண்டு.

Anonymous said...

Why did not you mention, she also sang some iyakka songs.

கானா பிரபா said...

எழுச்சிப் பாடல்களைப் பாடிய ஸ்வர்ணலதா இன்னும் இருக்கிறார் தேனிசை செல்லப்பாவோடு மேடைக் கச்சேரி செய்தவர்

Vasanth's Dream said...

என் தாயார் ( ஸ்வர்ணலதா ) பாடிய பாடல்கள் அனைத்தும் மிக இஷ்டம். இன்றளவும் அவர்கள் பாடிய " சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா " பாடல் வரிகள் என் மனதில் பதிந்துள்ளது. மேலும், " மாலையில் யாரோ ", " ராக்கோழி ரெண்டு ", " ராக்கம்மா கையத்தட்டு ", " மெல் இசையே ", " போவோமா ஊர்கோலம் ", " போறாளே பொன்னுத்தாயி ", " ஆட்டமா தேரோட்டமா ", " திருமண மலர்கள் ", " எவனோ ஒருவன் ", " காதெலெனும் தேர்வெழுதி ", " சித்திரையில் என்ன வரும் ", " அக்கடான்னு நாங்க ", " மாயா மச்சிந்திரா ", " அன்புள்ள மன்னவனே ", " என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட " என அள்ளிக் கொண்டே இந்த பொண்ணுத்தாயப் பற்றி போகலாம் / பேசலாம்.