Pages

Friday, December 15, 2017

இசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻

தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு.

இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அன்னக்கிளி, தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஒரு மனசுக்கேத்த மகராசா, தேவேந்திரனுக்கு ஒரு மண்ணுக்குள் வைரம் போன்று எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமிய மணம் கமிழும் படத்துக்கு இசையமைப்பாளர் சிற்பியின் வருகை அமைந்திருக்கிறது. இயக்குநர் மனோபாலாவின் “செண்பகத் தோட்டம்” திரைப்படம் சிற்பி அவர்களின் திரையுலக அரிச்சுவடியில் முதல் படம்.

“முத்து முத்துப் பூமாலை” https://youtu.be/AnPPw0wSbv8 மனோ & ஸ்வர்ணலதா கூட்டாகச் சந்தோஷ மெட்டிலும் அதே பாடலை எஸ்.ஜானகி மனோவோடு இணைந்து https://youtu.be/pCoCraCnrU8 சோக ராகத்திலும் பாடிய பாடல்களும், கே.ஜே.ஜேசுதாஸ் இன் “ஓ வெண்ணிலா” http://youtu.be/gbQBHcQeimY பாடலும் அன்றைய கால கட்டத்தில் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்கள். இன்னும் ஸ்வர்ணலதா பாடிய “ஒத்த நெலா விளக்கு முத்தம்மா பூ விளக்கு” https://youtu.be/HrdXUrcVxeE பாடலும் தாமதமாக ரசிப்புப் பட்டியலில் சேர்ந்த பாடல். செண்பகத் தோட்டம் படத்தில் மேற்கூறிய பாடல்கள் ஜனரஞ்சக அந்தஸ்த்தை அடைந்திருந்தாலும் சிற்பி அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தத் தவறி விட்ட படமாக அமைந்து விட்டது.

“கோகுலம்” திரைப்படம் இயக்குநர் விக்ரமனை “புது வசந்தம்” படத்துக்குப் பின் நிமிர வைத்த படம். கதைச் சூழல் பாடகியை வைத்துப் பின்னப்பட்டதால் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சிற்பி பின்னி எடுத்து விட்டார். “புது ரோஜா பூத்திருக்கு” காதல் துள்ளிசை இன்றும் கூட கொண்டாடி மகிழக் கூடிய ஜோடிப் பாடப் என்றால் மீதி எல்லாம் மெல்லிசை கலந்த இன்னிசைப் பரவசம் கொட்டிய பாடல்கள். புல்லாங்குழலோடு போட்டி போடும் “தெற்கே அடிக்குது காற்று” ,  
“அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்” ஆகிய பாடல்கள் சித்ராவுக்கானதாக அமைய “நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று” “சிட்டாக ரெக்க கட்டு” என்று  இன்னும் இரண்டு பாடல்கள் ஸ்வர்ணலதாவுக்கான அணி கலன்கள். இந்த “சிட்டாக ரெக்க கட்டு” எவ்வளவு அழகானதொரு புத்தாண்டுப் பாடல். ஆனால் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஏனோ அதிகம் சீண்டுவதில்லை.
உமா ரமணனுக்கென வாய்த்தது “பொன் மாலையில்”.
தொண்ணூறுகளின் முத்திரைப் பாடகர் உன்னிமேனன் & P.சுசீலா பாடிய “செவ்வந்திப் பூ எடுத்தேன்” இன்னொரு காதல் ஜோடிப் பாடலாக இனிமை கொட்டியது. “சின்னச் சின்ன ஆசை” பாடலை நகலெடுத்துப் பின் வரிகளை மாற்றி சுஜாதா பாடிய பாடலும் உண்டு.  ஒரே படத்திலேயே ஐந்து முன்னணிப் பாடகிகளை நாயகிக்காகக் கொடுத்த விதத்திலும் புதுமை படைத்தது “கோகுலம்”.
உள்ளத்தை அள்ளித்தாவுக்கு முன்பே பாடலாசிரியர் பழநிபாரதி - சிற்பி சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.
ஆர்ப்பாட்டமான உலகில் இருந்து விலகி அமைதி தவழும் சூழலுக்கு மாற்ற வல்லது இந்த கோகுலம் படப் பாடல்கள். அதனால் தான் இன்றும் பெரு விருப்புக்குரிய ஒரே படத்தில் அமைந்த முழுப்பாடல்கள் பட்டியலில் “கோகுலம்” தவிர்க்க முடியாத சிம்மாசனம் இட்டிருக்கிறது.
கோகுலம் முழுப் பாடல்களையும் கேட்க https://youtu.be/EROpxDMLYCY

இயக்குநர் விக்ரமனின் படத்துக்கான நிறம் இன்னது என்பதை உணர்ந்து எப்படி ஆரம்பத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இணைந்து வெற்றிகரமாக அதைக் காட்டினாரோ அதே போல் சிற்பியும் விக்ரமன் படத்தின் தன்மை உணர்ந்து அதைத் தன் இசையில் நிரூபித்துக் காட்டினார். லாலாலா மாமூலாக என்ற விமர்சனம் இருந்தாலும் ஒரு பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் இது விக்ரமன் படம் தான் என்று கணிக்கக் கூடிய  பாடல்களில் விக்ரம ஆதிக்கம் மிகுந்திருக்கும்.
மறைமுகமாக அப்படியொரு நிறத்தை இசையிலும் பூசிக்காட்டிய விதத்தில் விக்ரமனுக்கு அது வெற்றியே.
படத்தின் சந்தைப்படுத்தலுக்கும் கை கொடுத்தது.
1993 ஆம் ஆண்டைப் பொறுத்த வரை விக்ரமன் - சிற்பி கூட்டணியில் இரட்டை விருந்தாக “கோகுலம்” படத்தைத் தொடர்ந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” அடுத்ததாக வந்தது.
“ஏலேலங்கிளியே எனைத் தாலாட்டும் இசையே” கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் சந்தோஷ ராகம் புதுவசந்த காலத்தில் அவரே பாடிய “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” வை ஞாபகப்படுத்திப் பரவசம் கொள்ள வைத்தது. அதே பாடல் ஜோடிப் பாடலாக இருந்தது போல “பூங்குயில் ராகமே” பாடலும் தொண்ணூறுகளின் சூப்பர் ஹிட் பாடல்களில் இடம் பிடித்தது.

“நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல்களைக் கேட்க
https://youtu.be/bdXQD6OerZM

"அன்னை வயல்" இப்படியொரு கவிதைத் தனமான தலைப்பைத் தன் படத்துக்கு வைத்தவர் எவ்வளவு நிரம்பிய கனவுகளோடு தன் கன்னி முயற்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்திருப்பார். அவர் தான் இயக்குநர் பொன்வண்ணன். 
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்வண்ணன் அடிப்படையில் ஓவியர். அதனாலோ என்னவோ தன் "அன்னை வயல்" படம் குறித்து அப்போது பேசும் படம் போன்ற திரை இதழ்களில் பேசும் போதெல்லாம் அவரது பேட்டியே ஒரு கலாபூர்வமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டம் அவருக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வடிவிலேயே வந்து சேர்ந்தது. 

தன்னுடைய முதல் முயற்சியைத் தான் நினைத்தவாறு  திரைப் படைப்பாக்கிக் கொடுக்க வேண்டும் வேண்டும் என்று எத்தனை வருடங்களாகக் கருக்கட்டிச் சுமந்திருப்பான் ஒரு படைப்பாளி. ஆனால் அவனின் அந்த இலட்சியத்துக்குச் சரியான பாதை போடாது முட்டுக்கட்டை போட்டு அந்தப் படைப்பையே சிதைத்து விட்ட கதையாக "அன்னை வயல்" படத்துக்கும் நேர்ந்தது. 

எனது ஞாபகக் குறிப்பின் படி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் மகனையும் நடிக்க வைத்து அந்தப் பாத்திரத்தை இயக்குநர் பொன்வண்ணனின் சிந்தனையை மீறி அதீத நாயக அந்தஸ்தைக் காட்ட மூக்கை நுழைத்தது தான் காரணமென்று நினைவு. பின்னர் அதே தயாரிப்பாளர் தான்  "சந்தைக்கு வந்த கிளி" படத்தையும் எடுத்ததாக நினைப்பு.

"அன்னை வயல்" படத்தில் வந்த "மல்லிகைப் பூவழகில் பாடும் இளம் பறவைகளே" பாடல் தொண்ணூறுகளின் பாடல்களோடு வாழ்ந்தவர்களின் சுவாசம்.
இந்தப் பாட்டைக் கேளாதவருக்கு எப்படியாவது கொண்டு சேர்த்த பெருமை உள்ளூர் தனியார் பேரூந்துகளுக்கு உண்டு.

இந்தப் பாடலைப் பற்றிச் சொல்ல வேண்டிய, சொல்ல மறந்தது ஒன்று => பாடலின் ஆரம்பத்தில் அழகாக அமைந்திருக்கும் கோரஸ் குரல்களோடு ஒட்டிய ரயிலோசை

இசையமைப்பாளர் சிற்பிக்கு அழகானதொரு இன்னொரு முகவரியைக் காட்டிய பாட்டு இது.
பாடலாசிரியர் பழநி பாரதியின் வரிகளோடு அப்படியே எங்கள் ஊரின் வயல் வெளிகளில் ஆனந்தமாக ஓடி நெற்கதிர்களைத் தலையாட்டும் காற்றுக்கு நிகராக இசையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி கூட்டுப் படையலுமாக இனியதொரு அனுபவம்.

அன்னை வயல் படத்தின் அனைத்துப் பாடல்களும் சிற்பிக்கு இன்னொரு செண்பகத் தோட்டமாய் அமைந்த கிராமியத் தெம்மாங்குகள். 
அன்னை வயல் முழுப்பாடல்களையும் கேட்க
https://youtu.be/LJmKgcwERW8

தொண்ணூறுகளில் வெளியான மணி-ரத்னம் படத்தின் பெயரைப் பலர் மறந்தோ அல்லது தெரியாது விட்டாலும் "காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா" என்ற பாடலைத் தெரியாதவர்கள் குறைவு எனலாம்.

குறிப்பாகக் கிராமங்களில் வாழ்ந்து கழித்தவர்களுக்கும் இப்பொழுதும் கிராமியக் கொண்டாட்ட வீடுகளில் லவுட்ஸ்பீக்கர் கட்டிக் குழாய் வழியே பாடல் கொடுக்கும் ஒலி-ஒளி அமைப்பாளரும் இந்தப் பாட்டை மறக்க மாட்டார்கள்.

மணி-ரத்னம் என்று சட்டச் சிக்கல் இல்லாமல் பெயரை வைத்து விட்டார்கள். இந்தப் படத்தின் தலைப்புக்கு அந்தக் காலத்தில் இயக்குநர் மணிரத்னம் மேல் இருந்த உச்ச நட்சத்திர அந்தஸ்தும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

"காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா" பாடல் இடம் பெற்ற மணி-ரத்னம் திரைப்படம் ஆனந்த்பாபு, (வீட்ல விசேஷங்க) மோகனா போன்றோர் நடித்தது.
படத்துக்கு இசை சிற்பி, இன்னொரு வேடிக்கை இந்தப் பாடலையும் YouTube மற்றும் இணைய அன்பர்கள் இளையராஜா தலையில் கட்டி விட்டார்கள். அவ்வளவுக்கு நேர்த்தியான இனிய இசையைச் சிற்பி அளித்திருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல் தேர்வும் அட்டகாஷ்.  அந்தப் பாடலைக் கேட்க https://youtu.be/OmRKEEcEcJ8

இசைமைப்பாளர் சிற்பிக்கு முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்த “நாட்டாமை” இல் “மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு”, சூப்பர் குட் பிலிம்ஸ் முதன் முதலில் பெரும் எடுப்ப்பில் தமிழ், தெலுங்கில் தயாரித்த “கேப்டன்” இல் “கன்னத்துல வை” https://youtu.be/hJgIDN8t0iQ
சிற்பிக்கு இன்னொரு சூப்பர் ஹிட் முகம் கொடுத்த உள்ளத்தை அள்ளித்தா, இவற்றோடு “அன்புள்ள மன்னவனே” பாடிய மேட்டுக்குடி, “நீயில்லை நிலவில்லை” சோக ராகம் இசைத்த “பூச்சூடவா” என்று எனக்குப் பிடித்த பாடல்களோடு நீட்டி முழக்கினால் தொடர் கட்டுரைகள் தேறும். எனவே இத்தோடு நிறுத் 😀
இசையமைப்பாளர் சிற்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐

கானா பிரபா
15.12.17

2 comments:

Karthi said...

அன்னை வயல் படத்தில் எனக்கு பிடித்த பாடல் “வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே”. அதில் வரும் பெண் குரல் ஹம்மிங் எனக்கு ரொம்ப பிடித்தது. பொண்வண்ணனே ஓவியராக நடித்திருப்பார்.

marimuthu.v.s Mari said...

உள்ளத்தை அள்ளித்தா மேட்டுக்குடி 💕💕💕💕💕கண்ணன் வருவான் நாட்டாமை 💕💕💕💕💕மூவி songs