பதினாறு வருஷங்களுக்கு முந்திய என் தீபாவளி சொந்த பந்தங்கள், நட்புக்களைப் பிரிந்து சந்தித்த முதல் தீபாவளியாக மெல்பனில் அப்போது பல்கலைக்கழக மாணவனாகப் புலம்பெயர்ந்தபோது அமைந்தது. தீபாவளிக்கு ஒரு சில தினங்கள் முன்னர், தங்கியிருந்த வீட்டுத் தபால்பெட்டியைத் திறக்கிறேன். ஊரில் இருந்து ஒரு தீபாவளி வாழ்த்து மடல். மடலைப் பிரித்துப் பார்த்தால் "அன்புள்ள பிரபு அண்ணாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்", சித்தியின் மகள் தன் கைப்பட எழுதிய அந்த வாழ்த்துமடலில் பிரசாந்த் இன் படம் போட்டிருந்தது. குறும்பாக என்னைப் பிரசாந்த் அண்ணா என்று அப்போது என் தங்கை அழைப்பது வழக்கம். அதன் வெளிப்பாடே வாழ்த்துமடலிலும் பிரதிபலித்திருந்தது. அந்த நேரம் வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, வண்ண வண்ணப்பூக்கள், உனக்காகப் பிறந்தேன் என்று பிரசாந்த் இன் படங்களும் தொடர்ச்சியாக வந்து கொட்டமடித்துக் கொண்டிருந்த நேரமது. அந்த வாழ்த்துமடலைப் பத்திரப்படுத்தி இன்னமும் வைத்திருக்கின்றேன். நாகரீகமும், தொழில்நுட்பமும் மறக்கடிக்க வைக்கின்ற நல்ல விஷயங்களில் ஒன்று நமது பண்டிகைகளுக்கு வரும் வாழ்த்துமடல்கள்.
இன்று யதேச்சையாக ராஜ் டிவியைப் போட்டபோது, "நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி" என்ற பாடல் போய்க்கொண்டிருந்து. சிலைபோல இருந்து பாடலை ரசித்து விட்டு, மீண்டும் மீண்டும் ஐபொட் இல் கேட்டும் தீரா ஆசையோடு கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். அப்போதெல்லாம் டியூசன் சென்ரர் காலத்துக் காதலில், தேர்ந்தெடுத்த சந்தோஷம் கொட்டும் பாடல்களையும், அவள் வராதவிடத்து வந்து போகும் "குடகுமலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி" போன்ற காதல் அலைவரிசையில் வரும் சோக மெட்டுக்களையுமே கேட்டுக் கேட்டுத் தீர்ப்பது வழக்கம். தத்துவம் கொட்டும் பாடல்களைச் சீண்டாது ஒதுக்கி வைப்பேன். அப்படியான பாடல்களைக் கேட்டால் "நீ அது ஆகிறாய்" என்ற தத்துவமசி விளக்கத்துக்கு இலக்கணமாகி விடுவோமோ என்ற பயமும் ஒருபுறம். அப்படி இருக்கையில் விதிவிலக்காக மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது தான் இந்த "நடந்தால் இரண்டடி" பாட்டு. செம்பருத்தி படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். எல்லாப் பாடல்களுமே கேட்டுச் சலிக்காத மெட்டுக்கள். அத்தோடு அந்த நேரம் மேம்படுத்தப்பட்ட ஒலித்தரத்தில் ராஜாவின் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வந்த பாடல்களில் இதுவுமொன்று. பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க எடுத்த நேரமோ மொத்தம் முக்கால் மணி நேரம் என்று செல்வமணி முன்னர் தன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அப்படி வந்த மெட்டுக்களில் ஒன்றுதான் நடந்தால் இரண்டடி. இப்போதெல்லாம் முக்கால் மணி நேரம் முப்பது பாட்டுக்கள் போடுமளவுக்கு நம்ம இசையமைப்பாளர்கள் அங்க இங்க கைவச்சு ஒப்பேத்திவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பாட்டிலும் துளிகூட இன்னொருவர் சாயல் கலக்காது எட்டுப்பாட்டுக் கொடுப்பது அசாத்தியம். அது ராஜாவால் மட்டுமே முடியும்.
மெளத் ஆர்கனை வைத்துக் கொண்டு பாடலின் ஆரம்பத்தைத் தொடுத்து அப்படியே பாட்டு முழுக்க வரும் பின்னணித் தபேலாவும், இன்னபிற வாத்தியங்களும் வார்த்தைகளைச் சேதாரமின்றிக் கரை சேர்க்கின்றன. பாட்டியம்மாவின் வீடு தேடி வரும் பேரன், அவள் அரவணைப்புக் கிட்டாத விரக்தியில் பாடும் இந்தப் பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் பிறைசூடன். பாடலை மீண்டும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள், விரக்தியில் இருந்தாலும் நேர்மறைக் கருத்தற்ற நம்பிக்கையோடு அவன் பாடும் வரிகள் உங்களையும் கட்டிப்போடும்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
Arumaiyaana paadal Anna. Unga pathivai padichadhum thirumbavum indha paattai kekkanum polirukku. Nalla pathivu.
நல்ல பாடல்கள்ள் கேட்டே ரொம்ப நாலாச்சு.
மிக அருமையான பாடல்...நீங்கள் சொல்லியிருப்பது போல பாடல் வரிகளும் இசையும் எப்படி அழகாக வந்திருக்கு ! ;-)
\\ நாகரீகமும், தொழில்நுட்பமும் மறக்கடிக்க வைக்கின்ற நல்ல விஷயங்களில் ஒன்று நமது பண்டிகைகளுக்கு வரும் வாழ்த்துமடல்கள். \\\
நானும் அதே தான் தல...இன்னும் அந்த சினிமா நடிகர்கள் இயற்கை காட்சிகள் கொண்ட அனைத்து வாழ்துத அட்டைகளும் அப்படியே உண்டு ;-)
அதை எல்லாம் எடுத்து பார்த்து நினைவுகளை பயணிப்பதே ஒரு சுகம் !
\\ஆனால் ஒவ்வொரு பாட்டிலும் துளிகூட இன்னொருவர் சாயல் கலக்காது எட்டுப்பாட்டுக் கொடுப்பது அசாத்தியம். அது ராஜாவால் மட்டுமே முடியும்.\\
உண்மை ;-)
நீங்கள் ஒருபக்கம் பார்த்தால் வண்ணவண்ணப்பூக்கள் பிரசாந்த் போல சாயல்,
எனக்கும் செம்பருத்தி சகல பாடல்களும் பிடிக்கும் மனதுக்கு ஏனோ சலக்கு சலக்கு சேலை மட்டும் நெருக்கமாக இருக்கின்றது.
மீண்டும், மீண்டும் கேட்ககூடிய இதமான இசையை இளையராஜவின் பாடல்களில் தான் உணர முடியும்.
துஷி
நல்ல பாட்டு. ராஜா பாட்டுகளை எடுத்துச் சொன்னா ஒன்னா ரெண்டா...
எனக்குச் செம்பருத்தி படத்தில் செம்பருத்திப் பூவு சித்திரத்தைப் போலே பெண்ணொருத்தி ஆடட்டுமே பாட்டு பிடிக்கும்.
ரசித்தேன் பாஸ். அருமையான பகிர்வுக்கு நன்றி பாஸ்
Post a Comment