Pages

Sunday, September 18, 2011

இசைஞானி - சத்யன் அந்திக்காடு கட்டிய "ஸ்நேக வீடு"


நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதாவது மாயக்கண்ணாடி பாடல் தொகுப்புக்குப் பிறகு சுடச்சுட வெளியாகியிருக்கும் ஒரு படத்தின் பாடல்கள் குறித்த என் பார்வையைப் பதிவாக்க ஆவல் கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் இன்றைக்கு திரை இசை உலகம் இருக்கும் நிலையில் அதீத எதிர்பார்ப்பை வைத்து, ஒரு படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்று தேடவைத்த படங்களில் இதுதான் இப்போதைக்குத் தேறியிருக்கின்றது என்ற நிலை. அதற்குப் பல காரணங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கிறேன்.

சத்யன் அந்திக்காடு, மலையாள சினிமா உலகில் 31 ஆண்டுகளைக் கடந்து இன்னும் வெற்றிகரமான இயக்குனர். ஜனரஞ்சகம் மிகுந்த சினிமா என்றால் என்ன என்பதை இன்றளவும் மிகச்சரியாகப் புரிந்து கொண்டு இன்றுவரை அதை வெற்றிகரமாகப் பதிவாக்கி வருபவர். சத்யன் அந்திக்காடு இன் காலத்தில் வந்தவர்களும் சரி, அவருக்குப் பின்னால் வந்தவர்களும் சரி, ஆரம்பத்தில் நல்ல பல படைப்புக்களைத் தந்து ஒரு எல்லையில் தாமும் தடுமாறி மக்களையும் குழப்பி ஜனரஞ்சகக் கிரீடத்தைத் தொலைத்த இயக்குனர்கள் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் காணலாம். ஜி.வி.பிரகாஷ்குமார் வரை வித்தை பண்ணி வெற்றி தேடிப்பார்க்கும் இயக்குனர் இமயம் வரை இது தொடர்கிறது.
சாதாரண மனிதர்களின் உணர்வுகளின் பகிர்வாக, எளிமையான எல்லோருக்கும் புரியத்தக்க படைப்பாகக் கொடுத்து அழுத்தமான தீர்வையும் முன்வைக்கும் பாணி தான் சத்யன் அந்திகாடு அன்றிலிருந்து இன்றுவரை பிடிவாதமாகக் கைக்கொள்வது. அந்தப் பிடிவாதம் தான் அவருக்கான அங்கீகாரத்தை எப்போதும் கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் "ஸ்நேக வீடு" என்றதொரு மலையாளச் சித்திரம் திரைக்கு வரவிருக்கின்றது. இது சத்யன் அந்திக்காடு இன் 51 ஆவது படம்
"அம்முக்குட்டி அம்மாயுடே அஜயன்" என்ற பெயர் சூட்டப்பட்டுப் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் தான் "ஸ்நேக வீடு" ஆக மாறியிருக்கின்றது. மோகன்லால், ஷீலா, பத்மப்பிரியா உள்ளிட்ட கலைஞர்களோடு சத்யனின் படங்களில் பெரும்பாலும் விடாமல் வந்து போகும் இன்னசெண்ட், கே.பி.ஏ.சி.லலிதா, மம்முக்கோயாவும் இருக்கின்றார்கள்.

சத்யன் அந்திக்காட் உடன் இசைஞானி இளையராஜா இணைந்து இதுவரை கொடுத்த எட்டுப்படங்களையும் பார்த்திருக்கின்றேன். அதைப் பதிவாகவும் கொடுத்திருக்கின்றேன் இங்கே. மலையாள சினிமாவில் பாடல்கள் என்பது தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்லது அதற்கும் கீழே தான். இசையைச் சார்ந்து வெளிவரும் படங்கள் தவிர மற்றெல்லாப் படங்களில் ஒன்றோ இரண்டோ அதிக பட்சம் மூன்றோ தான் இருக்கும். படத்தின் முக்கிய திருப்பத்தில் ஒரு சோகச் சம்பவத்துக்கான குரலாக ஜேசுதாஸ் வந்து போவார். பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசைக்கு ராஜாமணி போன்ற மாமூல்களையும் வைத்து ஒப்பேற்றிவிடுவார்கள். இப்போது தமிழ் சினிமாவைக் காப்பியடித்துக் குட்டிச் சுவராகிக்கொண்டிருக்கும் மலையாள மசாலாக்கள் இங்கே விதிவிலக்கு.

ஆனால் சத்யன் அந்திக்காடு இதுவரை இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றிய அனைத்துப் படங்களிலும் பாடல்களுக்குக் கொடுத்திருக்கும் கெளரவம் என்பது இசைஞானி இளையராஜா மீதான காதலின் வெளிப்பாடாகவே பார்க்கமுடியும். இளையராஜா கொடுத்த மூன்று பாடல்களை வைத்துக்கொண்டாவது சத்யன் அவற்றைப் பொருத்தமான தருணங்களில் நுழைத்துக் காட்சியின் மீதான கெளரவத்தை அதிகப்படுத்திக் கொள்ளவைப்பார். எண்பதுகளில் பாரதிராஜா, மணிரத்னம் போன்றோர் செய்து காட்டிய வித்தை தான் இது. "ஸ்நேக வீடு" பாடல்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் வந்திருக்கின்றது, படம் இன்னும் வரவில்லை என்ற நிலையில் அந்தப் பாடல்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைச் சொல்கிறேன்.


எடுத்த எடுப்பிலேயே நான் கேட்ட முதற்பாட்டு கிட்டார் இசையை மீட்டிக் கொண்டே ஆரம்பிக்கும் "அம்ருதமாய் அபயமாய்" ஹரிஹரன் குரலில் வரும் இந்தப் பாட்டுத் தான் படத்திற்காகப் போட்டிருக்கும் மற்ற நான்கு மெட்டுக்களில் இருந்து முதல் இடத்தை மனசுக்குள் பிடிக்கின்றது. அருமையான மெலடி, கண்டிப்பாக சத்யன் இந்தப் பாடலைத் தன் வழக்கமான ஸ்நேகபூர்வமான காட்சி ஒன்றுக்குப் பயன்படுத்தவெண்ணி ராஜாவிடம் கேட்டு வாங்கியிருக்கவேண்டும். ஹரிஹரன் குரலைப் பழுது சொல்லும் யோக்கியதை எனக்கில்லை. ஆனால் சிலசமயம் தேர்ந்த ஆட்டக்காரர் கொடுக்கும் வழக்கமான சிக்ஸர்களை விட அதே ஆட்டத்தில் ஆடும் இன்னொரு இளம் வீரர் அடித்து ஆடும் ஆட்டம் வெகுவாகக் கவர்ந்து விடும். அப்படித்தான் இதே பாடலைப் பாடும் ராகுல் நம்பியாரின் குரலின் மீதான நேசம். இந்தப் பாடலை ஹரிஹரன் பாடும் போது ஊதித் தள்ளிவிடும் அனுபவம், ராகுல் நம்பியார் பாடும் போது இசைஞானி என்ற ஜாம்பவானிடம் பெற்ற மெட்டைத் தன்னளவில் உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற துடிப்பே அவரின் பாடலை மனதுக்கு நெருக்கமாக வைக்கின்றது. ராகுல் நம்பியார் ஏற்கனவே "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய மல்ச கன்னிகே" என்ற பாக்ய தேவதா பாடலில் ராஜாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய பாடகர். அந்த நம்பிக்கையை நன்னம்பிக்கை ஆக்கிக் காட்டியிருக்கின்றார். இந்தப் பாடலில்.

அடுத்ததாக ஸ்நேக வீட்டில் என்னைக் கவர்வது வட இந்தியா மட்டுமல்ல தென்னிந்தியாவையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஸ்ரேயா கொசல் பாடும் "ஆவணித்தும்பி" என்ற பாடல். கதாநாயகிக்காக ஒதுக்கி வைத்திருக்கும் பாடல் என்று எண்ணத் தோன்றும் இந்தப் பாடல் எடுப்பான, எளிமையான இசையோடு ஸ்ரேயா கொசலுக்காகவும் கேட்கக் கேட்கத் தோன்றும் மீண்டும் மீண்டும்.

"செங்கதிர்க்கையும் வீசிப் பொன்புலர்ப்பூங்காற்றே" என்ற பாடலையும் இரண்டாவதாகப் பிடித்துப் போன "ஆவணித் தும்பி" பாட்டுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் சித்ராவின் குரலைக் கேட்கும் போது இருக்கும் நேசமும் சேர்ந்துகொள்ளப் பாடல் மீதான காதலைப் பின்னாளில் இன்னும் அதிகப்படுத்தலாம்.

மீண்டும் ராகுல் நம்பியார் இம்முறை ஸ்வேதாவோடு கூட்டணி கட்டிப் பாடும் "சந்த்ர விம்பத்தின்" பாடல் மலையாளத்துக்கே உரித்தான எளிமையும் தமிழ்த் திரையிசைக்கு அந்நியமான மெட்டாகவும் பதிகின்றது. காட்சியோடு பார்க்கும் போது பிடிக்கலாம் போலப்படுகின்றது. ஏனென்றால் இதே மாதிரி பாக்ய தேவதா படத்தில் வந்த, கார்த்திக் பாடும் பாடலான "ஆழித் திரதன்னில் வீழ்ன்னாலும் " என்ற பாடலும் எனக்குக் கேட்டமாத்திரத்தில் அதிகம் ஒட்டிக்கொள்ளவில்லை. படத்தின் காட்சியோடு சேர்த்துப் பார்த்தபின் தவிர்க்க முடியாத பாட்டாகி விட்டது. பாடகி மஞ்சரிக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய ஆறுதல்.

மலையாளம் புரியாத மொழி என்பதை விடத் தேடிப்புரிந்து போற்றும் மொழியாக அமைய சத்யனின் படங்களும் ஒரு காரணம் என்னளவில். சத்யன் - இளையராஜா படங்களில் அமைந்த பாடலாசிரியர்களில் ஆரம்பத்தில் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியை வைத்தும் பின்னிரண்டு படங்களில் வயலார் சரத் சந்திர வர்மாவையும் பாடலாசிரியர்களாக வரித்துக் கொண்டலும், எனக்கென்னமோ, வைரமுத்து - ராஜா கூட்டணி போல எண்ணிப்பார்க்க வைக்கும் கிரிஷ் புத்தன்சேரி - ராஜா என்ற கெமிஸ்ட்ரி இன்னும் வெகுவாகப் பிடிக்கும். அச்சுவிண்டே அம்மா படத்தில் வரும் ஒரு முக்கிய திருப்புமுனையில் ஒரு பாடல் அதில் எந்த வித வார்த்தை ஜாலங்களும் இன்றி "எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே" என்ற சாதாரண வரிகளுக்குக் கிடைக்கும் அழுத்தம் போல இன்னும் பல உதாரணங்கள் கிரிஷ் புத்தன்சேரியும் ராஜாவும் கூட்டணி கட்டி மெட்டுக்கட்டிப் போட்ட பாட்டுக்களில் கிட்டும்.இன்னொன்று, மனசினக்கரே படத்தில் வரும்"மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா". ஆனால் கிரிஷ் புத்தன்சேரி இரண்டு வருஷங்களுக்கு முன்னால் காலமாகிவிட்டார் என்ற துயரமும் இங்கே பதிவாக்க வேண்டும். பின்னொரு நாளில் இவ்விருவர் கூட்டணி குறித்து விலாவாரியாக அலசலாம்.

சத்யன் அந்திக்காடு - இசைஞானி இளையராஜாவின் கத தொடருன்னு , ஸ்நேக வீட்டிலும் கூட.

"அச்சுவிண்டே அம்மா" படத்துக்காக "எந்து பறஞ்சாலும்" பாட்டைப் பெற்ற அனுபவத்தைச் சொல்கிறார் சத்யன் அந்திக்காடு, கூடவே ராஜா மெட்டுப் போட, சித்ரா பாடுகிறார்.


இசைஞானி குறித்து சத்யன் அந்திக்காடு சொல்கிறார் இப்படி

8 comments:

கோபிநாத் said...

தல எம்புட்டு நாள் ஆச்சு இப்படி ஒரு பதிவு போட்டு ;-)) மிக்க மகிழ்ச்சி ;-)

பாடல்கள் பத்தி இனி என்ன சொல்றது...கேட்டுக்கிட்டே இருக்கேன் ;-)

\\\ஜனரஞ்சகம் மிகுந்த சினிமா என்றால் என்ன என்பதை இன்றளவும் மிகச்சரியாகப் புரிந்து கொண்டு இன்றுவரை அதை வெற்றிகரமாகப் பதிவாக்கி வருபவர். \\\

அதே..அதே ;-)

கானா பிரபா said...

வாங்க தல,மனசில் இருந்ததைக் கொட்டிட்டேன் ;)

கைப்புள்ள said...

தல,

பாடல்களைக் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டியது உங்கள் பதிவு.

ஆமா...பாடகி மஞ்சரி மேல உங்களுக்கு என்ன கோபம்?
:)

மாதேவி said...

நல்ல விமர்சனம் கானா பிரபா.

மலையாளம் சற்றுபுரியாதமொழிதான்.
இசைக்கு மொழிதடையில்லையே கேட்டு ரசித்திடுகின்றேன்.:)

கானா பிரபா said...

கைப்ஸ்

என்னமோ தெரியல மஞ்சரிக்குப் பதில் இன்னும் பல சிறப்பான பாடகிகள் இருக்கு என்பது என் அபிப்பிராயம் ;)

கானா பிரபா said...

மாதேவி

பாடல்களைத் தேடிப்பிடியுங்கள், கண்டிப்பாக ரசிப்பீர்கள்

ஜே.வெஸ்லி said...

அன்புள்ள கா.பிரபா

அருமையான எண்ணப்பதிவு.

இளையராஜாவின் பூமுகப்படியில் நின்னையும் காத்து என்ற படதில் இடம்பெற்ற பூங்காற்றினொடு கதகள் சொல்லி என்ற பாடலும், மூணாம் பக்கம் என்ற படதில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் மிகவும் நன்றாக இருக்கும். கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கானா பிரபா said...

அன்பின் வெஸ்லி

மூணாம் பக்கம் படப்பாடல்கள் மட்டும் கேட்கவில்லை, பெரும்பாலான பாடல்களைத் தேடிப்பிடித்துக் கேட்டுவிடுவேன் மிக்க நன்றி