Pages

Thursday, May 20, 2010

அனுராதா ரமணனின் "சிறை" - ஒலிப்பகிர்வு

பிரபல தமிழ் இலக்கியப்படைப்பாளர் அனுராதா ரமணன் அவர்கள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி மாரடைப்பால் அகால மரணமானது அவரது எழுத்துக்களை நேசித்தவர்களுக்கும் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்து விட்டது. சிறுகதை, நாவல் என்ற எல்லைகளைக்கடந்து தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும், வாசகர் கேள்வி பதிலுக்கு அவர் தந்த ஆறுதல் பகிர்வுகளுமாக இவரது எழுத்துப்பணி விசாலமடைந்திருந்தது எல்லோரும் அறிந்த ஒன்று.

இவரது நாவல்களில் ஒரு மலரின் பயணம், அம்மா, சிறை, கூட்டுப்புழுக்கள் போன்றவை திரைப்படங்களாகவும் பிறப்பெடுத்தன. சிறை திரைப்படத்தினை நாவலின் சாரம் கெடாமல் இயக்கியிருந்தார் ஆர்.சி. சக்தி. லட்சுமி, பிரசன்னா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்க இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துச் சிறப்பித்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஒலிபரப்புத்துறையில் 15 வருஷங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எமது சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சிவாஜினி சச்சிதானந்தா அவர்கள் அனுராதா ரமணன் அவர்களது எழுத்துக்களை நேசிப்பவர். கடந்த மே 13 ஆம் திகதி தனது வானொலிப் படைப்பில் "திரையில் புகுந்த கதைகள்" என்ற பகுதியில் தான் நேசிக்கும் அனுராதா ரமணன் குறித்தும், அவரைச் சந்தித்த அந்தக் கணங்களை சுவாரஸ்யமான நனவிடை தோய்தலைத் தந்தவாறே, திரையில் காவியமான "சிறை" திரைப்படத்தின் பகிர்வையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற முத்தான இரண்டு பாடல்களோடு பகிர்ந்து கொண்டார். மூன்று நாட்களின் பின் தன்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர் இவ்வுலகை விட்டு நீங்குவார் என்று அப்போது நினைத்திருப்பாரா என்ன.
அந்த ஒலிப்பகிர்வை இங்கே உங்கள் செவிகளுக்கு விருந்தாகத் தருகின்றேன்.
ஒலிப்பகிர்வைத் தயாரித்துப் பகிர்ந்து கொண்ட திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவுக்கு எமது நன்றிகள்.

10 comments:

S Maharajan said...

தல
நான் இந்த படம் பார்த்தில்லை ஆனால் "நான் பாடி கொண்டே இருப்பேன்"பாடல் நெறய முறை கேட்டு இருக்கிறேன்.இது அனுராதா கதை என்று இன்று தான் எனக்கு தெரியும்.
திருமதி சிவாஜினி சச்சிதானந்தா
அவர்கள் வழங்கிய தொகுப்பு படம் பார்க்கும் ஆவலை தூண்டியது,அவர்களுக்கும் நன்றி
பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி நண்பா

கலை said...

சிறை படம் பார்த்திருக்கிறேன். அந்தக் கதை அனுராதா ரமணனின் கதை என்று இப்போதுதான் தெரியும். பாடிக்கொண்டே இருப்பேன் பாடல் நீண்ட நாளைக்குப் பிறகு கேட்டேன். நன்றி.

geethappriyan said...

தல மிகவும் வருத்தமாயுள்ளது,அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

G.Ragavan said...

சரியான நேரத்தில் பொருத்தமான பதிவிட கானா பிரபாதான். :)

அனுராதா ரமணன் அவர்களின் சில எழுத்துகளை வாசித்துள்ளேன். சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம் ஆகிய படங்களையும் பார்த்துள்ளேன். முதலிரண்டும் வெற்றிப்படங்கள். மூன்றாவது வெற்றியடையவில்லை. முக்தா சீனிவாசன் இயக்கியது.

சிறை படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். படம் தொடங்கியதும் வரும் அனுராதா ஆட்டப் பாடல். பிறகு வாணி ஜெயராம் குரலில் வரும் "நான் பாடிக்கொண்டேயிருப்பேன்" மகிழ்ச்சியாக. பிறகு மெல்லிசை மன்னரின் குரலில் "விதியெனும் கரங்களில் வீணையின் நரம்புகள்". இந்த இரண்டு பாடல்களுமே மிகச்சிறப்பானவை.

அடுத்து ஏசுதாஸ் குரலில் "ராசாத்தி ரோசாப்பூவே" பாடல். படம் முடியும் முன்னால் "நான் பாடிக்கொண்டேயிருப்பேன்" சோகமாக வாணி ஜெயராம் குரலில்.

G.Ragavan said...

சிறை படத்தில்தான் கவிஞர் பிறைசூடன் அறிமுகப்படுத்தப்பட்டார். மெல்லிசை மன்னர் முன்பொருமுறை பட்டுக்கோட்டை கலியாண சுந்தரத்தை கவிதையைக் கூடப் படிக்காமல் நிராகரிக்க இருந்தார். பிறகு முயற்சி செய்து பார்ப்போமே என்று சந்தம் குடுத்து கவிதை எழுதச் சொன்னார். அவர் எழுதிய கவிதையைப் படித்து விட்டு.... உங்களைப் போய் நிராகரிக்க இருந்தேனே. என்ன ஆணவம் எனக்கு என்று வருந்தினார். இப்படித்தான் தொடங்கியது பட்டுக்கோட்டையாரின் திரைப்பயணம். அதற்குப் பிறகு கவிதை என்று யார் எதைக் கொண்டு நீட்டினாலும் படித்து விட்டுதான் எதையும் முடிவு செய்வார். பிறைசூடன் கவிதைகளைப் படித்து விட்டு அவரை இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.

இயக்குனர் ஒரு புதுமையும் செய்தார். படம் தொடங்கி பெயர்கள் போடும் பொழுது பின்னணியில் இசை வராது. இயக்குனரும் இசையமைப்பாளரும் சேர்ந்து இசசயமமக்கும் ஒலி வரும். இதைப் பின்னாளில் வேறு இசையமமப்பாளர்களும் பின்பற்றினார்கள்.

கானா பிரபா said...

வருகைக்கு மிக்க நன்றி கலை

கானா பிரபா said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

தல மிகவும் வருத்தமாயுள்ளது,அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்//

வருகைக்கு நன்றி நண்பா

வணக்கம் ராகவன்

வழக்கம் போல பல சுவையான கருத்துக்களை உங்கள் பின்னூட்டம் கொடுத்து விட்டது. மிக்க நன்றி

Anonymous said...

Thanks for sharing....

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி புனிதா