Pages

Friday, October 8, 2021

பூந்தென்றலே...... நல்ல நேரம் காலம் சேரும்

இந்தப் பாட்டை உள்ளதை உள்ளவாறு கேட்க வேண்டும். அதென்ன உள்ளதை உள்ளவாறு?

பல இறு வட்டுகளில் ஆரம்ப ஆலாபனையைத் தின்னக் கொடுத்து விட்டார்கள் அதைக் கொஞ்சம் அனுபவித்து விட்டு வாருங்களேன்.

https://www.youtube.com/watch?v=xoVMomdtW8w

நான..நான ..நான நான .. னா 

நா...ன நா....ன நா..ன நா........

நனன்ன நான நான நா

நனன்ன நான நான நா

நான நான 

நான நான

நா நா...

அப்படியே இந்த ஆலாபனையோடு இழையும்

ஜும் ஜூம் ஜூம் ஜுஜுஜும்ம்ம்ம்ம்

ஜூம்..ஜூம்..ஜூம்..ஜூம்

இசைக் கூட்டோடு விரியும் போது அந்தப் பாட்டு என்ன மாதிரியானதொரு ஸ்வர்க்க லோகத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறது பாருங்கள் அப்படியே

பூந்தென்றலே..

நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும் பாடி வா பாடி வா

பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா......பூந்தென்றலே

அந்த ஸ்வர்க்க வாசல் முகிலில் நின்று வரவேற்குமாற் போல ஜெயோட்டான் அதான் நம்ம ஜெயசந்திரன் குரல் மிதக்குமே ஆஹா.

காதலனைக் கண்ட சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமாற் போல

பார்வை சொல்லும்

ஜாடை என்ன தேவை என்பதோ

கண்ணான ராஜா 

ஒரு உற்சாகப் பீறிடல் போட

ஜெயச்சந்திரன் அப்படியே தன்னிலை தளராது

ஏ....பொன்னான ராணி என்று சாந்தப்படுத்துவார்.

என்னென்ன உறவுகள்

என்னென்ன புதுமைகள்.....

என்னென்ன கனவுகள்......

என்னென்ன இனிமைகள்..

பல்லவின் அந்தத்தில் இந்த ஜோடி பாடும் அந்தச் சந்தம் தான் பாடலின் சரணத்தில் மிதக்கும் சங்கதியை மீள நினைப்பூட்டிப் பாலம் அமைக்கும்.

மலையாளத்தின் தாய் மொழி தமிழ் என்று பகிரங்கமாகவே அறை கூவிய தமிழ் வெறியர் கேரளத்திண்டே ஜெயே ஜெயச்சந்திரன்,

பிறப்பாலும் தமிழ்க் குயில் என்ற அடையாளத்தோடே வந்துதித்த கலைவாணியாம் வாணி ஜெயராம் அம்மா.

இந்த இரு பாட்டுக்குயில்களும் இளையராஜாவின் இசை வனத்தில் வந்து சேர்ந்த காலமும் ஒன்றே. 1977 இல் புவனா ஒரு கேள்விக்குறி, துர்க்காதேவி, காற்றினிலே வரும் கீதம் என்று இளையராஜா பாசறையில் இவர்கள் பாடியளித்த போது, இந்தப் படங்களில் இருவரும் கூட்டுச் சேர்ந்த பாடல் என்ற வகையிலும், இளையராஜாவின் இசையில் முதல் ஜோடிப் பாடல் என்ற ரீதியிலும் “புவனா ஒரு கேள்விக்குறி” கொடுத்த “பூந்தென்றலே

பாடல் வந்தமர்ந்து கொண்டது சிறப்பு. சிவகுமாருக்கான பாடலாக இது போய்ச் “விழியிலே மலர்ந்தது”, “ராஜா என்பார் மந்திரி என்பார்” ஆகிய சூப்பர் ஹிட் பாடல்கள் ரஜினி வசம் போக, ஆர்ப்பாட்டமில்லாது ஆனால் இன்று 44 வருடத்தில் இன்னும் உச்சுக் கொண்டும் இந்த “பூந்தென்றலே” சிவகுமாருக்கான பாடலாக அமைந்தது.

பாடலின் காட்சி வடிவம்

https://www.youtube.com/watch?v=hsKDC_CwbJ8

அந்தக் காலகட்டத்தில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் புகழ் பூத்த எழுத்தாளர்களின் கதைகளைப் படமாக்கியதில் சுஜாதாவைத் தாண்டி (இது எப்படி இருக்கு மகா மோசம், ப்ரியா & காயத்ரி பரவாயில்லை), இன்னும் படைப்பிலக்கணத்தில் வெகு சிறப்பாக அமைந்ததாக என் தேர்வில் மகரிஷியின் இந்த “புவனா ஒரு கேள்விக்குறி”யைத் தான் தேர்ந்தெடுப்பேன்.

கேள்விக்குறி போட்ட “குணச்சித்திர” ரஜினியை வியப்புக்குறியோடு கொண்டாடி ஏற்றுக் கொண்டது ரசிக உலகம்.

பொன் முட்டையிடும் வாத்து இளையராஜா கிடைத்து விட்டாரே என்று அள்ளிப் போடாமல் அளவாக மூன்று பாட்டு “புவனா ஒரு கேள்விக்குறி” யில். இது மட்டுமல்ல அன்றைய எழுபதுகளிலேயே இளையராஜாவைப் பொருத்தப்பாட்டோட்டே மூன்று, நான்கு பாட்டுக்குள் வைத்திருந்தார்(கள்).

இங்கே இந்தப் “பூந்தென்றலே” பாட்டு ஒன்று தான் பின்னாளில் உரு மாறும் சிவகுமார் & சுமித்ராவின் முந்திய நேசத்தைக் கோடிட்டுக் காட்ட வேண்டிய, அழுத்தம் கொடுக்க வேண்டியதொரு சூழல் பாட்டு.

எண்பதுகளில் இசைஞானி இளையராஜா தொடர்ச்சியாகக் கொடுத்த ஹிட் பாடல்களிலேயே அதிகம் மூழ்கிக் கிடக்கிறோம். ஆனால் சற்றே முன்னோக்கிப் போனால் அந்த எழுபதுகள் தான் எவ்வளவு அழகியதொரு காலம் என்று கிட்டார் இசை பின்னணியில் மீட்க ஒரு பின்னணி இசை ஒலிக்கும்.

இந்தப் பாடலின் பின்னணி கிட்டார் ஜாலத்தை அப்படியே உற்றுக் காது கொடுத்துக் கொண்டே முன்னணியில் வந்து விழும் கற்கண்டு கிட்டார் நாதம் உருவாகும் என்னென்ன புதுமைகள் என்னென்ன இனிமைகளாக வாத்திய இசைக்கோலம் ஆகா அந்த எழுபதுகள் சாதிக்கத் துடிக்கும் இளவல்களுக்கான ஒரு உற்சாகப் பாட்டுப் போட்டி மேடை அல்லவா?

அந்த முதல் சரணத்தில் தாள லயம் கொட்டும் கிட்டார் கோஷ்டி ஏதோ ரயிலில் இருந்து தண்டவாளத்தின் அதிர்வலைக்கேற்ப அசைந்தாடுவது போல என்னவொரு துள்ளிசை ஜாலம். 

தட் துடும் தட் துடும் தட் தட் தட 

எழுபதுகளுக்கே உரிய அந்த கொங்கோ வாத்தியக் கொத்து இன்னொரு பக்கம்.

பஞ்சு அருணாசலம் &  இளையராஜா கூட்டணி அப்படியே பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்றது. ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் இசையை ஒற்றியபடியே தன் அழகுணர்ச்சி கூட்டும் வரிகளையும் புனைந்தேற்றிய பஞ்சு அருணாசலத்தாரைச் சிலாகிக்காமல் கடக்க முடியாது.

என்னென்ன உறவுகள்

என்னென்ன புதுமைகள்..

என்னென்ன கனவுகள்

என்னென்ன இனிமைகள்..

பூந்தென்றலே.....

நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா....

பூந்தென்றலே…..

லல்லல லாலலாலா லல்லல்ல லால லால

இந்தப் பாட்டைக் காதலித்துக் கேட்டால் ஒரு நாள் முழுக்க உங்கள் காதில் உட்கார்ந்திருக்கும்.

கானா பிரபா


0 comments: