பிரிவொன்று நிகழப் போவதை உணராத காதலர்,
தம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் வார்த்தைகளாக
“உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்...”
பிறக்கின்றது.
ஆனால் இந்தப் படத்தின் கதையோட்டத்தில் காதலர்களுக்கிடையில் பிரிவொன்று நிகழ்ந்து விடுகிறது. பிரிவின் பின்னான சூழலில் இந்தப் பாடலின் நிறமே மாறி சோக ராகமாக ஒலிக்கிறது.
பிரிந்த காதலர் சந்திக்கும் சூழலில் தாம் கூடிக் கொண்டாடிய இந்தப் பாடலே வலியை எழுப்பி நிற்கின்றது.
இந்தப் பாடல் ஜோடிக் குரலாகவும், ஒற்றைக் குரலாகவும் இரட்டை வடிவங்களில் கொடுத்த போதும் பாடலின் வடிவமைப்பில் ராஜா அதிகம் மினக்கெடவில்லை. அதெப்படி ஒரே பாடல் அப்போது இன்ப ராகமாகவும், இப்போது சோக கீதமாகமும் இரு வேறு தொனிகளில் ஒலிக்கிறதே என்ற கேள்விக்கு, பாடலைக் கேட்கும் போது அத உணர்வின் பாங்கில் நம்மை மாற்றி விடுகிறது என்ற நுட்பம் தெரிய வரும். அதுதான் ராஜா.
ஜேசுதாசும், சித்ராவும் இந்தப் பாடலுக்குத் தான் எவ்வளவு அழகாகப் பொருந்திப் போகிறார்கள். இவர்கள் ஜோடி சேர்ந்த வகையிலேயே பாடல் கொடுக்கும் ஏகாந்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். அதனால் தானோ என்னமோ அக்னி நட்சத்திரம் படத்தில் “தூங்காத விழிகள் ரெண்டு” துள்ளிசைக்கு ஜேசுதாஸ், எஸ்.ஜானகி என்றமைந்த கூட்டணி “வா வா அன்பே அன்பே” பாடலுக்கு ஜேசுதாஸோடு சித்ராவைத் தான் அளவாகப் பொருத்தி அழகு சேர்க்கின்றது.
அது போலவே நினைக்கத் தெரிந்த மனமே படத்தில்
“சின்னச் சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ணக் கோலம் போடுதே”
https://www.youtube.com/watch?v=EhZgoiTY7AQ
என்ற துள்ளிசைக்கு ஜானகியோடு கூட்டுச் சேர்ந்த ஜேசுதாஸ் “எங்கெங்கு நீ சென்ற போதும்” என்ற மெல்லிசைக்கு சித்ராவோடு அணி செய்கிறார். நினைக்கத் தெரிந்த மனமே படப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்த காலத்தில் “கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்” பாடலை ஒலி நாடா தேயத் தேயக் கேட்டிருக்கிறேன். பின்னர் “சின்னச் சின்ன முத்து நீரிலே” அதன் பின் “எங்கெங்கு நீ சென்ற போதும்” பாடல் பிடித்த காலத்தில் இருந்து விடாமல் ஒட்டிக் கொண்டு விட்டது.
மோகனுக்கு அச்சொட்டாகப் பொருந்திப் போகும் குரல் எஸ்.பி.பியுடையதாக இருப்பினும், இசைஞானியோ மனோ, மலேசியா வாசுதேவன் என்று கலவையாகப் பாடகர்களைப் பொருத்தியிருக்கிறார். அந்த வகையில் “தென்றலே என்னைத் தொடு” படத்தில் “தென்றல் வந்து என்னைத் தொடும்” மற்றும் “கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்” என்று மோகனுக்கான குரலாக ஜேசுதாஸைக் கொடுத்தவர் “நினைக்கத் தெரிந்த மனமே” படத்தில் நான்கு பாடல்களைப் பொருத்தி அழகு பார்க்கிறார். அதிலும் சோடை போகவில்லை. அதற்கு முன்பே இளமைக் காலங்களில் (பாட வந்ததோர் கானம், ஈரமான ரோஜாவே) தொடங்கிய கூட்டணி, மனைவி சொல்லே மந்திரம் (ஆத்தாடி அதிசயம்), நூறாவது நாள் (உலகம் முழுதும்), அன்பே ஓடி வா (இதழில் அமுதம்), டிசெம்பர் பூக்கள் (மாலைகள் இடம் மாறுது) , ரெட்டை வால் குருவி (ராஜராஜ சோழன் நான் அசரீரிப் பாட்டு) என்று தொடர்ந்தது. என்று மோகனுக்கான குரலாக ஜேசுதாஸைக் கொடுத்தவர் “நினைக்கத் தெரிந்த மனமே” படத்தில் நான்கு பாடல்களைப் பொருத்தி அழகு பார்க்கிறார். அதிலும் சோடை போகவில்லை.
அதிலும்
“Smile Please”
என்று விட்டு
“கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்”
https://www.youtube.com/watch?v=rJiMq8Z1WRc
பாடலில் மோகன் காட்டும் நளினத்துக்கு ஈடாக ஜேசுதாஸின் குரலும் வளைந்து போகும். நினைக்கத் தெரிந்த மனமே படத்தின் அதியற்புதமான பாடல்களில் ஒன்று இது. "மாணிக்கத்தீவே மாலைப்பூவே காணக் கண்கோடி வேண்டும் தாயே" வரிகளில் எவ்வளவு அழகானதொரு பிரவாகம் அப்பப்பா.
“புருவக் கொடி பிடித்து, பருவப் படை எடுத்து
ஜெயித்திடும் இனமே
அபயக் குரல் கொடுத்து, அழகு கரம் பிடித்து
அணைக்கணும் மனமே” எவ்வளவு அற்புதமான உவமை.
நினைக்கத் தெரிந்த மனமே படத்தின் அனைத்துப் பாடல்களும் கவிஞர் காமகோடியன் வரிகளில் அணி செய்திருக்கின்றன.
“எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்”
பாடலின் ஆரம்பத்தில் துமிக்கும் கிட்டார் இசையும், கொட்டும் வயலின்களின் ஆர்ப்பரிப்பும் அப்படியே அந்தப் பாடலின் உள்ளே நம்மையும் அழைத்து விடும். சரணங்களுக்கு இடையில் ஒலிக்கும் வாத்திய ஆர்ப்பரிப்பும் ஆர்ப்பாட்டமில்லாத அணிகலன்கள்.
ட்ரம்ஸ் வாத்தியத்தையும் இளக வைத்துத் தாள லயம் கற்பிக்கிறது.
மல்லிகையை முகர்ந்தால் எழும் மென் வாசம்,
ரோஜா இதழ்களைத் தொடும் போது எழும் மென் ஸ்பரிசம் இந்தத் தீண்டும் இன்ப உணர்வுகளைக் ஒரு பாட்டு கொடுக்குமென்றால் அது “எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்” பாடலுக்கு மிகவும் கச்சிதமாகப் பொருதிப் போகும்.
இருநெஞ்சின் துன்பம் இது காதல்தான்
அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்.....
https://www.youtube.com/watch?v=1hJm-Ev_ZSY
இந்த மாதிரிப் பாட்டையெல்லாம் காதலிக்காமல் பாட முடியாது, நான் சொல்வது இந்தப் பாடலைக் காதலிக்காமல் பாடவே முடியாது.
அப்படிப்பட்ட சாகித்தியங்களை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள் கேட்டுப் பாருங்கள் சொக்கிப் போவீர்கள்.
ஈழத்துப் பாடகர், அன்புச் சகோதரன் சுதர்சன் ஆறுமுகம் குரல்
https://www.youtube.com/watch?v=qnMV9cwzWVA
ஈழத்துப் பாடகர், அன்புச் சகோதரன் ஶ்ரீ விஜய ராகவன் குரலில்
https://www.youtube.com/watch?v=v7qNhnx66qg
மலேசியப் பாடகர் திலீப் வர்மன் குரலில்
https://www.youtube.com/watch?v=8lJuJX3fgac
காந்தினி கிஷோன் குரலில்
https://www.youtube.com/watch?v=4wetBcebqMk
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
கானா பிரபா
0 comments:
Post a Comment