Pages

Wednesday, October 20, 2021

“மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே” - மதுக்கூர் கண்ணன்


சேவை செய்த காற்றே பேசாயோ

சேமங்கள் லாபங்கள் யாதோ 

பள்ளி சென்ற பாதைகளே

பாலங்கள் மாடங்கள் ஆஹா


அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா

சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா


இதோ இந்த வரிகளை இப்போது எழுதும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கிறேன்.

ஒவ்வொரு பயணத்திலும் மலேசியா வாசுதேவன் என் மனக்கிணற்றில் இருந்து பாடுவார் 

"அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா", 

இப்படி ஒரு ட்விட்டை ஜனவரி 20, 2016 இல் எழுதி வைத்திருந்தேன் அது கல்வெட்டாக இன்னும் அப்படியே இருக்கின்றது அங்கே.

எண்பதுகளின் இசையோடு வாழ்க்கைப்பட்ட ஈழத்தவருக்கு “அள்ளித் தந்த பூமி” வெறும் பாட்டு அல்ல. ஊனோடும், உயிரோடும் கலந்து விட்டதொன்று. நாடு விட்டு நாடு ஓடு ஏதிலியாய் அலைந்து ஊர் திரும்பும் ஒவ்வொருவரின் மனச்சாட்சியும் பாடும் பாட்டு அது.

இப்பேர்ப்பட்ட பாட்டுக்கு இந்த ஆண்டோடு நாற்பது வயசு.

இந்தப் பாட்டை எழுதிய மதுக்கூர்க் கண்ணன் என்ற எங்கள் அன்புக்குரிய யார் கண்ணன் அவர்களுக்கு 65 வயசு இன்று.


திரைத்துறைக்கு ஓடி வருபவர்கள்

நடிப்பதற்காக வரலாம்

படம் இயக்க வரலாம்

அல்லது இன்ன பிற உப பணிகளில் இயங்குவதற்காகக் கூட இருக்கலாம். ஆனால்

பாடலாசிரியராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு

பாடலாசிரியர் ஆக்கி அழகு பார்த்து, இயக்குநராகவும், இன்று நடிகராகவும் அமர்த்தியது திரையுலகம். அதுதான் மதுக்கூர்க் கண்ணன் அவர்களுக்குக் கிடைத்த பெரும் பேறு.

நண்டு படத்தில் வேறொரு பாடல் பதிவாகி, ஆனால் இயக்குநர் மகேந்திரனுக்குத் திருப்தி இல்லாது போகவே 

“இதோ இன்னொன்று தருகிறேன்” 

என்று இசைஞானி கொடுத்த மெட்டைக் கேட்டுப் பல்லவி போடச் சொன்ன மகேந்திரனுக்கு அந்த ஒலி நாடாவைக் கேட்டவாறே பேப்பர், பேனா இன்றி வாய் வழி பிரசவித்தாராம்

“அள்ளி தந்த பூமி அன்னையல்லவா”

பல்லவியை மதுக்கூர் கண்ணன். அதனால் தானோ என்னமோ அது வெறும் அச்சில் மட்டும் நில்லாது நம் நெஞ்சிலும் உறைந்திருக்கிறது.


நிலவென்ன பேசுமோ

இளம் காற்று வீசுமோ

https://www.youtube.com/watch?v=EEP7BTX7eSE


இசையமைப்பாளர் சந்திரபோஸிடம் பாட்டெழுதப் போனவர் அந்தப் பாட்டோடு படத்தையும் இயக்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். அதுவே

மதுக்கூர் கண்ணனின் முதல் படம் “வடிவங்கள்”.


“நிலவென்ன பேசுமோ” சந்திரபோஸின் தனித்துவமான குரல் பேச, 

மதுக்கூர்க் கண்ணன் எழுதாது, இயக்கிய அந்தப் படத்தின் இன்னோர் பாட்டு எஸ்பிபி & வாணி ஜெயராமின்

“இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே”


https://www.youtube.com/watch?v=erwRImZksNk


எல்லாம் ரேடியோ சிலோன் பொற்கால நினைவுகளின் தங்கத் துகள்கள்.


கலைப்புலி தாணு என்ற பெரும் தயாரிப்பாளரின் திறவுகோலாய் அமைந்த “யார்” படத்தில் சக்தி – கண்ணன் இரட்டையர்களாக இயங்கி அந்தப் படம் கொடுத்த வெற்றியில் “யார் கண்ணன்” ஆக நிலைத்து விட்டார்.

“யார்” படத்திலும் இரண்டு பாடல்கள்

“அபிராமியே உமா மகேஸ்வரி”

https://www.youtube.com/watch?v=k8Obf5UyZEQ


“ஆன மேல அம்பாரியாம்” என்று வி.எஸ்.நரசிம்மன் இசைக்காக எழுதியவர் பல்லாண்டுகள் கழித்து “கும்கி” யின் அம்பாரியாக நடித்தது காலம் எழுதிய அழகிய கோலம்.


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் எண்பதுகளில் மறக்கவொண்ணாப் படம் “கண்ணே கனியமுதே” அந்தப் படத்தில் ஏழு பாடல்களில் “நின்னையே ரதியென்று” பாடலை மட்டும் மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்குக் கொடுத்து விட்டு மீதி ஆறையும் எழுதியவர் படத்தின் இரட்டை இயக்குநர்களில் (சக்தி கண்ணன்) ஒருவரான யார் கண்ணனே தான்.

அந்தப் பாடல்கள் எல்லாமே பலாச் சுளை தான் என்றாலும் 

“பூக்களே வண்ணக் கவிதைகள் படைக்கும்”

https://www.youtube.com/watch?v=js1Dceh0T84


அந்தக் காலத்துக் கல்யாண வீட்டு வீடியோக்களில் கூடத் தவறாது வந்து போன சிறப்பு விருந்தினர்.

மலரே மலரே மலரே மலரே 

மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே.. 

உயிரே உயிரே உயிரே 

ஊர்வலம் ஏகும் தோரணமாகும் தூறும் வானம்.....


கடந்த ஆண்டு ஃபேஸ்புக் வழியாக நேரடி உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் உதகமண்டலத்திலிருந்து நேயராக நண்பர் சார்ல்ஸ் இணைந்து இந்தப் பாடலைக் கேட்டிருந்தார்.

என்னுடைய நினைவு தெரிந்த நாளில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு இந்த அதியற்புதமான பாடலைக் கேட்கிறேன். வி.எஸ். நரசிம்மனின் அறியப்படாத தேன் மெட்டு, இப்போது கேட்டாலும் என்னவொரு புத்துணர்ச்சி அடடா.

ஒரு பரத நாட்டியத்துக்கான சூழலை சாஸ்திரிய சங்கீதத்தோடு மேற்கத்தேய சங்கீதத்தைக் கலந்து கட்டிக் கொடுக்கும் பாங்கில் வி.எஸ்.நரசிம்மன் நிற்கிறார்.

யார் கண்ணன் அவர்களோடு அழைத்துப் பேசிய போது பூரிப்போடு நரசிம்மன் அவர்களின் திறனைப் பாராட்டி மெச்சினார்.


இந்தப் பாடலை வெகு காலத்துக்குப் பின் கேட்பதாக சகோதரர் S.K. Guna கூட மகிழ்ந்து பின்னூட்டியிருந்தார். 

இன்னொரு ஆச்சரியம், இந்தப் படத்தின் இரட்டை இயக்குநர்கள் சக்தி - கண்ணன் இவர்களில் "யார்" கண்ணன் என்ற மதுக்கூர் கண்ணன் தான் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக இந்தப் பாடலின் வரிகள் எல்லாம் தேர்ந்த பாடலாசிரியருக்கே கை வரக்கூடிய உச்சம். முன்பே "அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா" பாடலில் தன் சாகித்தியத்தைக் காட்டியவராச்சே இந்த மதுக்கூர் கண்ணன்.

இவரை வைத்து ஒரு பேட்டி செய்து விட வேண்டும் என்று துடிக்கிறது உயிரே உயிரே 🙂

மலரே மலரே மலரே மலரே 

மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே.. பாடலைக் கேட்க

https://www.youtube.com/watch?v=Yq_0ofWWt2Q

உன்னை ஒன்று கேட்பேன் படத்தின் முழுப்பாடல்கள்

https://www.youtube.com/watch?v=hSP5qXRk03Q


“மெட்டி மெட்டி ராகம் எங்கேயோ" 

https://www.youtube.com/watch?v=eFp7UDVGuME

மலையாளத்தின் மகோ இசையாளுமை பிரம்மானந்தம் அவர்களும் பி.எஸ்.சசிரேகாவும் பாடும் அந்தப் பாட்டு யார் கண்ணனின் குருநாதர் மகேந்திரன் இயக்கிய “மெட்டி” படத்தின் அடி நாதம். தன் குருநாதருக்காக இயற்றிய இன்னொரு முத்து அது. அதே படத்தில் பிரம்மானந்தம் அவர்கள் பாடும் “சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே” கங்கை அமரனின் விளைச்சல்.

தான் படம் இயக்க வந்தும் தன் குருநாதரோடு இணைந்து பணியாற்றிய கை கொடுக்கும் கை படத்தில் “அழகு சிரிச்சதிலே ஆயிரம் பூ பூத்ததம்மா” என்று இளையராஜா பாடும் முகப்புப் பாடலையும் எழுதி அழகு பார்த்தார். 

பின்னாளில் யார் கண்ணன் இயக்கிய மகுடிக்காரன் படத்தில் தேவா இசையில் “செண்டுமல்லி” என்ற பாட்டையும் எழுதியிருக்கின்றார்.

ஒரு காலகட்டத்தில் நடிகர் ராமராஜன் படங்களின் வழியே இயக்குநராக அடையாளப்பட்ட யார் கண்ணன் அவ்விதம் இரண்டு படங்களை இசையமைப்பாளர் ராஜேஷ் கண்ணாவுக்குக் கொடுக்கின்றார். ராஜேஷ் கண்ணாவே பாடல்களை எழுதி இசையமைத்த அந்தப் படங்களில் ஒன்று

“நம்ம ஊரு நாயகன்”. அதில் வரும் ஜன்னலுக்குப் பக்கத்தில சின்ன ரோஜா” https://www.youtube.com/watch?v=06RUXgKba0M அந்தக் கால வானொலிப் பிரியர்கள் மறக்கவொண்ணாப் பாட்டு.

ராமராஜனுக்காக இவ்விருவரும் சேர்ந்து பாடல்களை வெளியாக்கி வெளிவராத படம் “காவலன்”.

நம்மை விட்டு மறைந்த இசைஞானியின் தீவிர வெறியர் அன்புச் சகோதரர் இளையராஜா அண்ணாமலையின் சகோதரர் தான் இந்த ராஜேஷ்கண்ணா.

“பொன்மானே பொன்மானே

ஒன்றோடு ஒன்றானோம்”

https://www.youtube.com/watch?v=LvuCp1-9vwQ

அன்புக் கட்டளை படத்தில் கங்கை அமரன் எழுதிய அந்தப் பாட்டைச் சென்னை வானொலியில் கேட்க யாழ்ப்பாணத்தில் தவம் கிடந்த காலமெல்ல்லாம் நினைப்பில் அலை மோதும்.

அந்தப் பாட்டு இடம் பெற்ற, யார் கண்ணன் அவர்கள் இயக்கிய அன்புக் கட்டளை படத்தில் அண்மையில் நம்மை விட்டு மறைந்த

பிறைசூடன் அவர்கள் எழுதிய 

ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ

உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ

எங்கே சென்றாலும் அன்பே மாறாது

நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது

https://www.youtube.com/watch?v=SyNDs4F8daY

என்று மீண்டும் எம் ஆவியோடு கலந்திருக்கும் பாடலைத் தன் இயக்கத்தில் கொண்டு வந்தும் தொடர்கிறார் எம் இயக்குநர்.

பன்முகப் படைப்பாளி மதுக்கூர் கண்ணன் அவர்கள் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஆடும் நாள் பாடும் நாள்

தாளங்கள்

இனி ஆனந்தம் ஆரம்பம்

வாருங்கள்

அள்ளித் தந்த பூமி

அன்னையல்லவா

சொல்லித் தந்த வானம்

தந்தையல்லவா


கானா பிரபா

20.10.2021


(படங்கள் நன்றி: யார் கண்ணன் புகைப்படப் பகிர்வு)


பதிவைப் படித்த பின் யார் கண்ணன் சார் பகிர்ந்தது
துள்ளியமான வெகுநுட்பமான ஆராய்ச்சி பூர்வமான திருமிகு கானாபிரபா அவர்களின் இந்த "வாழ்த்துநினைவலைகள்"- பலருக்கும் தெரியாத செய்திகளை ஆதாரங்களோடு பதிவு செய்திருக்கும் ஆவணம்! என்னை நானே திரும்பிப்பார்க்க, மீண்டும் மிகமிகவலிமையுடன் நாம் பயணிக்க -மேலும் நம்மை உயர்த்த உதவும் ஓர் உண்மையான மானசீக மந்திரக்கோல்!.. வார்த்தைத்திறவுகோல்!.. நமது திரைப்படத்துறையில் நாம் அல்ல நான் செய்த தொழில் ரீதியிலான தவறுகளை- நான் தடுமாறிய பொழுதுகளை- எனக்கு மட்டுமே ஆன- விழுந்து விழுந்து எழுந்த தருணங்களை.. விவரிக்கும் அற்புதமான பதிவு! தொடர்ந்து நான் யு.டி.வி.யின் தென்னிந்திய கால்பதிப்பில் சன்டி.வி 'ஜென்மம் எக்ஸ்' சின்னத்திரைதொடர்எழுதி இயக்கியபோது- இசையமைப்பாளர் தினாவை அறிமுகப்படுத்தி நான் எழுதிய "எல்லாம் மாயை" பாடல் தொடங்கி தேவா சந்திரபோஸ் இருவரையும் மீண்டும்இணைத்துச்செய்த "மறுபடியும் மறுபடியும்"- பாடல் கேரள இசையமைப்பாளர் திரு ரமேஷ் நாராயணன் இசையில் எழுதிய "கஸல் பாடல்கள்" கொரானாகொடுமைகளை உள்ளடக்கி பிகைன்ட்வுட்ஸ்க்காக நம்மேன்மைமிகு சி.சத்யா இசையில் உருவாக்கிய "நல்லஒருசேதிவரும்" -போன்ற பாடல்களையும் அடையாளம் காட்ட கடல்கடந்தும் நம்மை நிறைய்ய்ய்ய நேசித்துக்கொண்டிருக்கும்.. 'கானாபிரபா'வின் பிப்பெட்பியுரெட் பேனா பிரியப்படட்டும்! நன்றி!

0 comments: