Pages

Tuesday, October 26, 2021

இசைஞானி இளையராஜா இசை வழங்க பாடகர் மனோ பிறந்த நாள் இசைக் கொண்டாட்டம் ❤️🎙

இன்று பாடகர் மனோவின் பிறந்த நாள். 

இந்திரன் சந்திரன் (இந்திருடு சந்துருடு), இதயத்தைத் திருடாதே (கீதாஞ்சலி) போன்ற படங்களின் பாடல்களைத் தெலுங்கில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய அளவுக்கு நியாயம் செய்யவில்லை என்றெல்லாம் மனக் குறை உண்டு. அத்தோடு பாடகர் மனோவுக்கு இசைஞானி இளையராஜா வாரி வழங்கியதில் இன்னதெல்லாம் இவர் பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனம் ஒப்பிட்டுப் பார்க்கும். ஆனால் அதையும் தாண்டி மனோ பாடிய பாடல்களில் ஏராளம் என் நெஞ்சுக்கு நெருக்கமானவை. அதற்குக் காரணமும் உண்டு.

மனோவுக்கானதாக ஆக்கப்பட்டது என்ற வகையில் அப்படியொன்று,

ஒரு பெரும் மழை அடிப்பதற்குக் கட்டியம் கூறுமாற்போல ஒரு நீர்க்குட்டை ஒன்றில் மெல்ல மெல்ல வந்து விழுமாற்போல அந்தப் பியானோ இசை ஆரம்பிக்கிறது. அதைப் பெருப்பித்து ஊதி ஊருக்கே பறைசாற்றுமாற்போலக் கூட வரும் வயலின் கூட்டணி மேலே இழுத்துச் செல்கிறது அந்த ஆர்ப்பரிப்பைக் கொஞ்சம் அடக்கி மெல்ல அரவணைக்கும் புல்லாங்குழல் மனோவிடம் கொடுக்க

"மெளனம் ஏன் மெளனமே வசந்த காலமா..... நினைவிலே வளர்ந்தது பருவராகமா...

தனிமையில் நீ இனிமையை அழைத்து வா...... மனதில் ஆட வா"

என்று நிதானிக்க ஒரு ட்ரம்ஸ் இசைக்கீற்று இதயத்தின் படபடப்பாய் ஒலிக்க

மீண்டும்

"மெளனம் ஏன் மெளனமே 

வசந்த காலமே....மெளனம் ஏன் மெளனமே" 

https://www.youtube.com/watch?v=2gfahVbt09I

என்று தொடருகிறார்.

யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிறக்கின்றன. எல்லாமே எல்லோரையும் ஆட்கொள்ளும் அளவுக்கு ஆவதில்லை. எங்கோ, எப்போதோ இசையமைத்த பாட்டு ஒன்று அவ்வளவு பிரபலமாகாத பாட்டை நம் மனசுக்கு மட்டும் நெருக்கமாக வைத்திருக்கும் போது இன்னொருவரும் அதே அலைவரிசையில் இருக்கும் போது நம் இசைஞானம் அங்கீகரிக்கப்பட்டது போன்ற ஒரு பெருமிதம்.

"மெளனம் ஏன் மெளனமே" பாட்டை எனக்கு தொண்ணூறுகளின் ஒரு ஞாயிறு சென்னை வானொலியின் திரைகானம் தான் அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்து திண்டாட்டமான வயதும் மனதும் இந்தப் பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்து கொண்டதாலோ என்னவோ மிகவும் பிடித்துப் போனது.

பள்ளிக்காலத்தில் தீவிரமாகப் பாட்டுக் கேட்டு வாழத் தலைப்பட்ட சூழலில் எங்களுக்கு முதல் தேர்வாக அமைந்தது அப்போது சுடச் சுட வந்து கிட்டியவை இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல்கள். அதுவும் மனோ & சித்ரா கூட்டணி என்றால் கேட்கவே வேண்டாம்.

அதுவும் பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வரும் "பாராமல் பார்த்த நெஞ்சம்" பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் மனசுக்குள்ளால் வெளிக் கிளம்பும்.

"ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக" பாடலைக் கேட்ட காலமெல்லாம் "சிறகுகள் வாங்கி உறவெனும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்" என்று காதலாகிக் கனிந்த காலங்கள்.

மனோவின் பாடல்களை வைத்துக் கொண்டே என் இளமைக் காலத்தின் ஒவ்வொரு கூறுகளையும் அசை போட முடியும். அவ்வளவு நெருக்கமான ஞாபகக் கிளப்பிகள் அவை. 

என்னைப் போலவே இசைஞானியின் இசை அடிமை நண்பர் கலைச்செல்வனோடு காரில் ஊர் சுற்றும் போது அவர் பாட்டுக்கு எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் என்று ஆரம்பிக்க, நான் பதிலுக்கு மனோவை எடுத்து விட 

"ஐயா உங்களுக்கு மனோ எண்டால் லவ்ஸ்" 

என்று கிண்டலடித்துச் சிரிப்பார்.

அவ்வளவுக்கு மனோ பாடிய பாடல்களில் நேசம் வரக் காரணம் ஒவ்வொரு பாடலுக்குக்குப் பின்னால் பள்ளிக்கால ஆட்டோகிராப் நினைவு ஏதாவது புதைக்கப்பட்டிருக்கும்.

பாடகர் மனோ இளையராஜாவிடம் நிறையப் பாடியதற்கு ஒரு காரணம், ராஜாவின் இசை வேகத்துக்குத் தீனி போட்ட ஏராளம் படங்களோடு அந்த வேகத்தோடு நச்சென்று சொல்வதைப் புரிந்து பாட்டுக் கட்டும் திறன் தான்.

மனோவின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் சங்கதிகளில் வெகு சிரத்தையாகக் கையாண்டு நுணுக்கமாகப் பேர் வாங்கியவை ஏராளம் அப்படியொன்று 

“தேன்மொழி.....

எந்தன் தேன் மொழி

https://www.youtube.com/watch?v=DGBEFNPPtI8

தன் ஆரம்பப் பயணத்திலேயே ராஜாவிடம் நன் மாணக்கான் பெயர் பெற்ற பாட்டு.

இந்தப் பதிவுக்காகத் தயாரித்த புகைப்படக் கோவைக்காகத் தேர்ந்தெடுத்த படங்கள் பாடகர் மனோ குழுமத்தில் எடுக்கப்பட்டவை.

இன்று மனோவின் பிறந்த நாளில் இசைஞானி இளையராஜாவோடு இணைந்து கொண்ட வகையில் எனக்குப் பிடித்த பாடல்களின் திரட்டைப் பகிர்கிறேன்.

1. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா

2. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்

3. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

4. மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்

5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை

6. ‪மல்லியே சின்ன முல்லையே‬ - பாண்டித்துரை

7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான் - இது நம்ம பூமி

8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை வந்தாச்சு

9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே

10. நிலாக்காயும் நேரம் சரணம் - செம்பருத்தி

11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு - தென்மதுரை வைகை நதி (மைக்கேல் மதன காமராஜன் ரெக்கார்ட்டில் வந்தது)

12. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்

13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட் ராஜ்

14. மாலை நிலவே - அன்புக் கட்டளை

15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே

16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்

17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்

18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே

19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை

20. அன்பே நீ என்ன - பாண்டியன்

21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத்தங்கம்

22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என் ராசாதான்

23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்

24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி

26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப் பாட்டுக்காரன்

27. மலைக்கோவில் வாசலில் - வீரா

28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்

29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி

30. சின்ன ராசாவே - வால்டர் வெற்றிவேல்

31. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்

32. நிலவ நிலவ - காத்திருக்க நேரமில்லை

33. மணியே மணிக்குயிலே - நாடோடித் தென்றல்

34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய வச்சா

36. சிங்கார மானே தேனே - தாய் மொழி

37. சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை

38. மானே மரகதமே - எங்க தம்பி

39. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்

40. தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா

41. தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்

42. வெட்டுக்கிளி வெட்டி வந்த வாசம் - பிரியங்கா

43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி

44. கண்ணே இன்று கல்யாணக்கதை - ஆணழகன்

45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்

46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்

47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்

48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள

49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்

50. விழியில் புதுக்கவிதை படித்தேன் - தீர்த்தக்கரையினிலே

51. அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே

52. சிங்காரப் பெண் ஒருத்தி - ஒருவர் வாழும் ஆலயம்

53. தேன்மொழி எந்தன் தேன்மொழி - சொல்லத் துடிக்குது மனசு

54. காவியம் பாடவா தென்றலே - இதயத்தைத் திருடாதே

55. மெளனமேன் மெளனமே - என் ஜீவன் பாடுது

56. ஓ ஜனனி என் ஸ்வரம் நீ - புதிய ராகம்

57. மலையாளக் கரையோரம் - ராஜாதி ராஜா

58. கல கலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே

59. ராசாத்தி மனசுல - ராசாவே உன்னை நம்பி

60. காதல் ராகமும் கன்னித் தமிழும் - இந்திரன் சந்திரன்

61. வண்ணச் சிந்து வந்து விளையாடும் - கோயில் காளை

62. இங்கே இறைவன் இன்னும் கலைஞன் - சார் ஐ லவ் யூ

63. பொன்மானே பொன்மானே - அன்புக் கட்டளை

64. பாடுமோ ஓவியம் - புதிய ராகம்

65. பூவான ஏட்டத் தொட்டு - பொன்மனச் செல்வன்

66. பாசமுள்ள பாண்டியரு - கேப்டன் பிரபாகரன்

67. ஆச்சி ஆச்சி - மனதில் உறுதி வேண்டும்

68. குடகு மலைக் காட்டில் வரும் - கரகாட்டக்காரன்

69. காதல் கிளியே - ஜல்லிக்கட்டு

70. ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது

71. பாடுங்கள் பாட்டுப் பாடுங்கள் - பாடு நிலாவே

72. ஒரு உறவு அழைக்குது - கிருஷ்ணன் வந்தான்

73. அந்தியிலே வானம் - சின்னவர்

74. ஒரு நிலவு வந்தது - என்றும் அன்புடன்

75. மணிக்குயில் இசைக்குதடி - தங்கமனசுக்காரன்

76. கண்ணே என் கண்மணியே - கவிதை பாடும் அலைகள்

77. உந்தனின் பாடல் என்னை - ராக்காயி கோயில்

78. செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்

79. வான் நிலா தேன் நிலா - கவிதை பாடும் அலைகள்

80. சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி - என்னப் பெத்த ராசா

கானா பிரபா

26.10.2021

1 comments:

Unknown said...

Idhil nirdaya padalgal spb sir endru ninaithu irundhen