Pages

Sunday, October 24, 2021

விடை பெற்ற இசையமைப்பாளர் இனியவன்

இன்று காலை இசையமைப்பாளர் இனியவன் இவ்வுலகை விட்டு மறைந்து போனார் என்ற சோகச் செய்தியை விதைத்தது நண்பர் கல்லாறு சதீஷ் Arulrasa Nageswaran அவர்களது ஃபேஸ்புக் இடுகை.

இசையமைப்பாளர் இனியவன் குறித்து முன்பும் சிலாகித்து எழுதியிருக்கின்றேன். அவரைத் திரையுலகம் வீரியமாகப்  பயன்படுத்தியிருந்தால் தொண்ணூறுகளில் முக்கிய இசை ஆளுமையாக விளங்கியிருப்பார்.

இசையமைப்பாளர் இனியவன் அற்புதமான இசையாற்றல் கொண்டவர் என்பதை அவரின் “கெளரி மனோகரி” படம் பறையும். 

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது

அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா

இசை ஒன்றே .......

லயம் ஒன்றே .........

https://www.youtube.com/watch?v=v7msses-Bo4

சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் உடன் பாடும். நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இணைந்து பாடிய அழகான பாட்டு இது.

இதே படத்தில் “பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளம் ஆனது” https://www.youtube.com/watch?v=9QjGwWZJak4 

என்ற இன்னொரு அற்புதமான காதல் பாடலை எஸ்.ஜானகி & எஸ்.பி.பி பாடியிருக்கிறார்கள். இந்த இரண்டும் தொண்ணூறுகளின் பண்பலைகளைக் கலக்கியது. என் பங்குக்கு நானும் கொடுத்திருக்கிறேன் வானொலியில்.

“தங்கமே உந்தன் காதல் தன்னை

கண்கள் ஏன் மறைத்தது..

தாவணி போட்டு மூடி வைக்கும்

ஆசைதான் முளைத்தது....”

“இதயத்தில் உன்னை ஏற்றி வைத்து

என்றுமே வாழுவேன்

இமைகளால் உன்னை மூடிக் கொண்டு

இரவில் நான் தூங்குவேன்”

சரணத்தில் நோகாமல் பயணிக்கும் வித்தையிலேயே அப்போது வியக்க வைத்து இந்தப் பாடல் மேல் காதல் கொள்ள வைத்தார்.


சாஸ்திரிய சங்கீதத்தை அடி நாதமாகக் கொண்டு கெளரி மனோகரி படத்தில் இவ்விதம் அமைந்த பாடல்களோடு தியாகராஜர் கீர்த்தனையான “சங்கீத ஞானமு” https://www.youtube.com/watch?v=N3kDIQrYrLk பாடலை எஸ்.ஜானகிக்காகக் கொடுத்திருந்தார்.


இத்தகு ஆற்றல் மிகு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் அதிகம் ஆளுமைப்படவில்லையே என்ற ஏக்கம் என் போன்ற ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு. 

கவிஞர் வைரமுத்துவோடு தொடர்ந்து பயணித்த இசையமைப்பாளராக இனியவன் விளங்கினார்.

அதில் மிகவும் பிரபலம் பூத்தது “கவிதையே பாடலாக” என்ற வைரமுத்துவின் கவிதைகள் பாடல்களாக இனியவன் இசையில் பூத்த போது.

அதிலும் புகழ் பூத்த பாடகர்கள் பலரை இணைத்திருக்கின்றார்.

https://www.youtube.com/watch?v=Rp1FK65KSNM

சுனாமிப் பேரவலம் நிகழ்ந்த போது அதைத் தொடர்ந்து வெளியான “வீழ மாட்டோம்” இசைத் தொகுப்பிலும் வைரமுத்துவின் பாடல்களுக்கு இனியவன் இசை வழங்கியிருந்தார்.

https://eelapparavaikal.com/ms_song/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/

அதில் வீழ மாட்டோம் என்ற பாடல் புலம் பெயர் வானொலிகளில் வழி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

“ஜென்மம் நிறைந்தது”

https://www.youtube.com/watch?v=MG79HQDIDzM

சமீப ஆண்டுகளில் புலம் பெயர் தேசங்களில் மரணச் சடங்குகளில் அறிவிக்கப்படாத நிரந்தர இடம் பிடித்த கீதம் கூட வைரமுத்து வரிகளில் இனியவன் கொடுத்ததே.

இன்று இனியவனுக்கான விடை கொடுப்புப் பாடலாகவும் அமைந்தது பெரிய சோகம்.

https://www.youtube.com/watch?v=D7Cpl-z8o58

திரையிசையில் எத்தனையோ ஆளுமைகள், ஆனால் அதிஷ்டமும் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்ற துரதிஷ்டக் கணக்கில் அமிழ்ந்து போன நம் இசையமைப்பாளர் இனியவன் என்றென்றும் இசை ரசிகர் மனதில் வீற்றிருக்கட்டும்.


கானா பிரபா

24.10.2021


0 comments: