Pages

Friday, October 22, 2021

பாடுதம்மா காற்றின் அலைகள் அந்த நாட்களைத் தேடுதம்மா காற்றில் இலைகள்



“அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா " பாடலுக்கு முன் நான் எழுதி இளையராஜா எடிட்டர் லெனின் உடன் இருக்க பதிவு செய்யப்பட்ட பாடல்
“பாடுதம்மா காற்றில் இலைகள்..
அந்த நாட்களை தேடுதம்மா ஆற்றின் அலைகள்”
சரணத்தில் நான் எழுதிய
"-செங்கதிர் கள் தீட்டும் ஓவியம் வானம்!
சேதி சொல்லும் காற்றில் சேர்ந்தது ஞானம்!
பள்ளி சென்ற சாலை- அந்நாளை இன்று எண்ணும்போது பொன்வேளை! "
என்னும் பல வரிகளை உள்ளடக்கிய பாடலை டைட்டிலில் இடம்பெறச்செய்தார்கள்.. இந்தப்பாடலின் மறுவடிவம் "அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா"”

இப்படி ஒரு கருத்தைப் பகிர்ந்திருந்தார் நம் இயக்குநர் பாடலாசிரியர் மதுக்கூர் கண்ணன் Yaarkannan Actordirector Mathukkur அவர்கள். அவரின் பிறந்த நாளில் பகிர்ந்து கொண்ட பகிர்வில் நண்பர் Ravisankaranand Ramakrishnan இந்தப் பாடலை யார் எழுதியது என்று விசாரிக்க, உடன் பதிலாக மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்து கொண்டார் கண்ணன் அவர்கள். இதுவொரு அரிய தகவல், இசைத்தட்டில் வெளிவராத இந்தப் பாடலை யார் பிரசவித்தது என்றே தெரியாமல் போயிருந்திருக்கும். இணையம் ஒரு வரப்பிரசாதம் என்பது இம்மாதிரியான கொடுப்பினைகளால் தான்.

பாடுதம்மா காற்றின் அலைகள் பாடல் வீணாகவில்லை, நண்டு படத்தின் முகப்புப் பாடலாக அரங்கேறியது. அந்தப் பாடலை அந்தப் பாடலை புதுப் பாடகர் சுரேஷ் பாடியதாக கண்ணன் சார் குறிப்பிட்டுள்ளார், ஒரு ஏக்கத் தொனியில் எழும் அழகான சங்கீதம்.
அதற்கு மாற்றீடாக மலேசியா வாசுதேவன் அவர்களுக்கான பொக்கிஷப் பாட்டு “அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா” பாடல் ஆரம்பிக்கும் தொனியிலேயே அந்த ஏக்கத்தை “அள்ளித்தந்த பூமி” க்குள் அடக்கி வைத்து விட்டு மேற்கொண்டு அந்த இயற்கை எழிலுக்குள் கடந்த காலப் பயணத்தை நாடோடி போல அழகாகக் கொடுத்திருப்பார். இரண்டுமே நமக்குக் கிடைத்த பொக்கிஷப் பாடல்கள்.
“பாடுதம்மா காற்றின் அலைகள்” பாடலின் பல்லவியில் வரிகள் மாற்றப்பட்டிருக்கலாம்.

பாடுதம்மா ஆற்றின் அலைகள்..
அந்த நாட்களை த்தேடுதம்மா காற்றில் இலைகள்...
வாழும் குயில் நாதம்.. வண்டின் ரீங்காரம்.. ஹோ..
இங்கும் அங்கும் பார்த்தால் இன்பமோ கோடி!
கங்கை வந்து சேர்ந்தாள் காவிரியை தேடி
கோமதியின் ஓரம் என் தாரம் கொஞ்சுகின்ற நேரம்
சங்கீதம்! சாமரப்பூ வீசும் சந்தக்கவிபேசும் கோவில் மணிபாடும் கீதங்களே!
செங்கதிர்கள் தீட்டும் ஓவியம் வானம்!
சேதி சொல்லும் காற்றில் சேர்ந்தது ஞானம்!
பள்ளி சென்ற சாலை- அந்நாளை...
இன்று எண்ணும்போது பொன் வேளை!
சோக நிலை மாறும்... சொந்தம் இனிச் சேரும்...
ஞான விதை தூவும் நேரங்களே...

அந்தப் பாடலை படத்தின் ஒளியோட்டத்தில் இருந்து பிரித்து, பின்னணி இரைச்சலை நீக்கிப் பகிர்கிறேன் இதோ.




கானா பிரபா

22.10.2021

0 comments: