“பன்னீரையும் வெந்நீரையும்
உன்னோடு நான் பார்க்கிறேன்
பூவென்பதா
பெண்ணென்பதா?
நெஞ்சோடு நான் கேட்கிறேன்
முள்ளோடு தான்
கள்ளோடு தான்
ரோஜாக்களும் பூக்கலாம்.......”
நேற்றுத் தொடங்கி மனசு முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது இப்படி.
இந்தப் பாட்டோடே இவ்வளவு தூரம் இந்த நாளில் சுற்றிக் கொண்டு வரக் காரணமாயிற்று நண்பர் Devarajah Rameshan பாடிய பகிர்வைப் பார்த்ததில் இருந்து.
நாயகன், நாயகிக்கான காதல் பாடல்
https://www.youtube.com/watch?v=TQcijv2xwgo
அதுவே பின் குழந்தை வடிவில் வரும் அமானுஷ்யத்தின் குரல்,
https://www.youtube.com/watch?v=AguwrK6WnWQ
அமானுஷ்யத் தோற்றத்தின் பிம்பமாய் வரும் அந்தக் காதலியின் பாட்டு
https://www.youtube.com/watch?v=38iJg4hr_PY
என்று மூன்று வடிவம் தாங்கிய இந்தப் பாடல் “பிள்ளை நிலா” படத்தின் முதுகெலும்பு.
ஜெயச்சந்திரனின் மென் தொனிக் குரலோடு இழையும், எஸ்.ஜானகியின் ஆலாபனை, பின்னர் அதுவே மழலைக்கானதாகவும், நாயகிக்கான சோக ராகமாகவும் மாறும் ஜாலம்.
ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வரும் “வெண்மேகமே” பாடலை இன்றும் எனக்குக் கேட்டால் குலை நடுங்கும். அந்தப் படத்தை என் சிறுபிராயத்தில் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அது முதல் இரவு வேளைகளில் அம்மாவோ, யாரோ காவல் தெய்வங்களாக என் பின்னுக்கு வர வேண்டும். (அவர்களை முன்னுக்கு விட்டால் எனக்குப் பின்னால் வந்து பேய் பிடித்து விடும் என்ற பயம் அவ்வ்)
கை கால் மறைத்து தலையின் மூக்கு வாய்ப்பாகம் மட்டும் வெளியே தெரிய போர்வையால் மூடிக்கொண்டே தூங்குவது, பேய்ப்படங்களின் பாடல்கள் வானொலியில் வந்தால் இருகாதிலும் விரலால் இறுகமூடிக்கொள்வது சில உதாரணங்கள். அப்படியாகத் தான் “ராஜா மகள் ரோஜா மகள்” பாடலும் என் பட்டியலில் ஒரு காலத்தில் இருந்தது.
“பிள்ளை நிலா” படத்தை அப்படியே கடந்து போய் விட முடியாது.
“ஆகாய கங்கை” என்ற தன் முதல் படத்தை எடுத்துத் தோற்றுப் போய்த் தற்கொலை வரை செல்லப் போன இயக்குநர் மனோபாலாவுக்கு நம்பிக்கைத் தோள் கொடுத்த கதாசிரியர் பி.கலைமணி வழி வந்த வாய்ப்பு. இதுவே தன் இயல்பான குடும்பக் கதை முத்திரையைத் தள்ளி வைத்து இயக்கிய பிள்ளை நிலா வெற்றி மனோபாலாவை அடுத்த ஐந்து ஆண்டுகள் பரபரப்பான இயக்குநராக வைத்து அழகு பார்த்தது.
நடிகர் மோகனுக்கு 1985 சித்திரை வருடப் பிறப்பு வெளியீடாக மூன்று படங்கள். அதில் தெய்வப் பிறவி (சங்கர் கணேஷ்) நீங்கலாக, இசைஞானி இளையராஜாவின் 300 வது படமான உதயகீதம் படத்தோடு பிள்ளை நிலாவும் களமிறங்குகின்றது. மூன்றுமே மாறுபட்ட தளங்கள் கொண்ட படைப்புகள். இவற்றில் இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்த பாரதிராஜாவின் சிஷ்யர் கே.ரங்கராஜ் ( உதயகீதம்) இன் படத்தோடு இணை சிஷ்யர் மனோபாலாவுக்கும் வாழ்வு கொடுத்துக் கொண்டாடுகின்றது பிள்ளை நிலா.
“தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே....”
உதயகீதம் படத்தில் ஒரேயொரு பாட்டு அதுவும் தாய்மைக்கும், பிள்ளைக்குமாக வாலியார் எழுதுகிறார்.
“ராஜாமகள்.....ரோஜாமகள்”
இதோ சம நேரத்தில் வெளியான பிள்ளை நிலாவில் அதே உணர்வூட்டத்துடன் இன்னொரு பரிமாணத்துக்காக கவிஞர் வாலியார் கை வண்ணம்.
ஆடைகளும் ஜாடைகளும்
கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும்
கை வணங்கும் தேவதை
நீயும் ஒரு
ஆணையிட
பொங்கும் கடல் ஓயலாம்
மாலை முதல்
காலை வரை
சூரியனும் காயலாம்
தெய்வ மகள் என்று
தேவன் படைத்தானோ?
தங்க சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ?
மஞ்சள் நிலவே ...
ராஜா மகள்.....
ரோஜா மகள்.....
https://www.youtube.com/watch?v=tPYPUtRdmdM
கானா பிரபா
0 comments:
Post a Comment