Pages

Sunday, February 27, 2022

ஹிருதயம்❤️

இன்னொரு கல்லூரிக் காதல், ஆனால் எத்தனை கல்லூரிக் காதல் கதைகள் வந்தாலும் ஒரு பெரிய கூட்டணியோடு, மிகப் பெரும் எதிர்பார்ப்பும் சேர்ந்து கொண்டால் வெற்றிக் கணக்கு ஓரளவு தீர்மானிக்கப்பட்டு விடும். ஹிருதயமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

மோகன்லால் மகன் பிரணவ், இன்றைய காலத்து இளசுகளின் கனவுக்கன்னி கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் வினீத் சீனிவாசன் என்ற அடையாளத்தோடு விளம்பரப்படுத்தப்பட்டதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறிப் போனது.

ஆனால் 10 வருடங்களுக்கு முன்பே தட்டத்தின் மரயத்து” வழியாகத் தன் மாயா ஜாலங்களைக் காட்டியவருக்குப் புதிதாக ஏதும் காட்ட வழி தெரியவில்லையோ என்ற எண்ணமும் எழுகிறது.

அந்தப் படம் குறித்து என் பதிவு

http://www.radiospathy.com/2012/09/blog-post.html

மூன்று மணி நேரத்தை எட்டிப் பிடிக்கும் படம், ஆனால் சோர்ந்து விடாமல் பார்க்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தயார்படுத்தி விடுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் தியாகராஜ பாகவதர் காலம் போல மொத்தம் 15 பாடல்கள். என் அனுபவத்தில் இந்தப் பாடல்களை முன்னர் கேட்டிராத போதும் காட்சிகளோடு தானாக வந்து விழும் போது ரசித்து அனுபவிக்க முடிகின்றது. அந்த வகையில் இசைமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இயக்குநர் வினீத் சீனிவாசனின் மனவோசையாகப் பயணிக்கிறார்.

காதல் படம் என்றால் தயாரிப்பாளர் கணக்கில் குறைந்தபட்ச உத்தரவாதமாவது இருக்கும் என்றெல்லாம் ஒரு காலம் இருந்தது.

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் உருகி உருகிக் காதல் கொள்ளும் படைப்புகள் வருவதில்லையே என்றதொரு கருத்தரங்கைப் படைப்பாளிகள் பார்வையில் காதலர் தினச் சிறப்புப் பகிர்வாக ஆனந்த விகடன் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

வாட்சாப் நம்பரை வாங்கி காதலித்தோமா, காதலை முறித்தோமோ என்ற நிலையில் இருக்கும் உலகத்தில் ஆழமான மன உணர்வுகளைக் காட்சிப்படுத்தினாலும் ஏற்கும் மன நிலையில் ரசிகன் இருப்பானா என்றதொரு ஆதங்கத்தை அந்தப் பகிர்வில் இயக்குநர்கள் வெளியிட்டிருந்தார்கள். 

ஹ்ருதயம் படத்தின் கதையும் அதனாலோ என்னமோ யாகூ சாட் காலத்துக்குப் போய் விடுகிறது.

இந்தக் கல்லூரிக் காலத்தைப் பற்றி இடைக்காலத்தில் “அர்ஜூன் ரெட்டி”யும் வந்து போய் விட்டதால், நல்ல பிள்ளையாக அதீதமாக போதை, குடி, கும்மாளம் என்று காட்டாமல் அதைத் தன் மென் சுபாவத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் வினீத். ஒளிப்பதிவாளரும் (விஸ்வஜித்) இரண்டு கதைக்களிலும் தோளோடு தோள்.

வினீத் சீனிவாசன் நம்மாள், அதாவது சென்னையில் வளர்ந்து பையன் என்பதால் ஏகத்துக்கும் தமிழர்களை உச்சியில் ஏற்றிக் கொண்டாடுக்கிறார். 

ஹிருதயம் படத்தின் இடைவேளையோடு முடியும் கல்லூரிக் காலத்தோடு நிறைவு செய்திருந்தால் அது ஒரு அழகான ஹைக்கூ போல இருந்திருக்குமோ என்று தோன்றியது. அவ்வளவுக்கு இயல்பான கதையோட்டம். இடைவேளையைத் தொடர்ந்து வரும் அடுத்த காதல், கல்யாணம், ஊடல், கூடல் எல்லாம் ஓரளவு ரசிக்க வைத்தாலும் முன்பாதியின் நியாயம் இல்லை.

ஆகவே இடைவேளைக்கு முன் “அட்டகத்தி” போலவொரு ரஞ்சித் தனமாகவும், இடைவேளைக்குப் பின் திணறும் கெளதம் வாசுதேவ மேனன் படம் போலவும் பட்டது.


பிரணவ் மோகன்லாலே எல்லாக்காட்சிகளிலும் பயணிப்பதால் ஏகத்துக்கும் பொறுப்பைச் சுமந்திருக்கிறார். லட்டு மாதிரி அவரின் ஆரம்ப காலத்தில் இப்படியொரு படம். நல்லவிதமாக அதை தக்க வைக்கிறார்.

சக மாணவனை பண்ணைப்புரம் இளையராஜா என்று அறிமுகப்படுத்துவதாகட்டும், தமிழர்கள் ஒன்றும் மலையாளிகள் போலப் ப்ளான் போட்டு வாழ்றதில்லை என்று குட்டு வைப்பதாகட்டும்,படத்தின் முற்பாதியே கிட்டத்தட்ட ஒரு தமிழ்ப்படம் பார்த்த உணர்வு தான்.

“உன்னோட இலட்சியம் என்ன?” என்று கேட்கவும், 

“என்னோட அப்பா, அம்மா நிம்மதியா இருக்கணும்” என்ற செல்வாவின் வார்த்தைகளின் நியாயம் நெகிழ வைத்தது.

பிரணவ் & கல்யாணி சந்திப்போடு இருவர் மீதான எதிர்பார்ப்பையும் பொய்க்க வைத்து விடுகிறது. 

ஆனால் ஆனால் ஆனால் 

இந்தப் படத்தில் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டுப் போய் விடுகிறார் தர்ஷணா ராஜேந்திரன். இடைவேளையைத் தொடர்ந்து வரும் கதை நீட்டலே அவருக்காகத் தான். 

காதல் மெல்ல முளை விடும் தருணத்தில் எழும் வெட்கப்பூ, அப்படியே எதிர்த்திசையில் தன் ஏமாற்றத்தின் ஆற்றாமையைக் காட்டும் விதம், பின்னிய கூந்தலை அவிழ்த்து விட்டுச் சிலிர்க்கும் சிலிர்ப்பு என்று எவ்வளவுஅழகாகத் தன் உணர்வுகளை இயல்பாகக் கடத்துகிறார் ஆஹா. இந்தப் படத்தை மீண்டும் தர்ஷணாவுக்காகப் பார்த்தால் அவரின் கோணத்தில் கதை நகருமாற் போல.

இன்னும் நிறைய வாய்ப்புகளை அள்ளட்டும் ஹிருதயத்திலும் "தர்ஷணா" ஆகிய தர்ஷணா.தான் ஆழமாக நேசித்தவனின் நம்பிக்கைத் துரோகம் தந்த வலியை அவ்வளவு சீக்கிரம் தூக்கியெறிய முடியாத நிலையில் எழும் விரக்தியும் கோபமும், மெல்ல மெல்ல யாருடைய சமாதான வார்த்தைகளும் இல்லாமல் தானாகவே மனச் சமாதானம் செய்து கொண்டு அவன் எந்தத் தூரத்தில் இருந்தாலும் தனக்கானவன் என்று காத்திருந்தவளின் கதை தான் “ஹிருதயம்” என்று பொட்டில் அடித்தாற் போல நமக்கு இன்னொரு திசையில் கொண்டு போய் நிறுத்தி விடும் போக்கு, அதுதான் இந்தப் படத்தை நம் ஹிருதயத்திலும் இடம் பிடிக்க வைக்கிறது.

கானா பிரபா

27.02.2022


0 comments: