“ஹய்யய்யோ ஹய்யய்யோ பிடிச்சிருக்கு” வழியாக ஹாரிஸ் ஜெயராஜின் “சாமி” (2003) படத்துக்காக அடையாளப்பட்டிருந்தாலும், அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே இசைஞானி இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார் இன்று தன் இசையுலகில் இருபது வருடங்களைத் தொட்டு நிற்கும் பாடகி மஹதி.
சின்ன வயசிலேயே ராக ஞானம் கொண்டவர் இளையராஜாவைச் சந்திக்க நேர்கிறது தன் 16 வயதில். ராஜாவுக்கு முன் தியாகராஜரின் "எந்துகு பெத்தல' கீர்த்தனையைப் பாடியவருக்கு அந்த இடத்திலேயே வாய்ப்புக் கொடுக்கிறார் “காதல் சாதி” படத்துக்காக
அந்தப் பாடல் தான் “என்னை மறந்தாலும்” https://www.youtube.com/watch?v=wDPKbG5-rXc
என்ற பாட்டு. இதே பாடலை இசைஞானி இளையராஜாவும் தனித்துப் பாடியிருக்கிறார். இளையராஜாவே எழுதி, இசையமைத்துத் தானும் ஒன்று பாடி, மஹதியையும் பாட வைத்து அறிமுகப்படுத்தியது எப்பேர்ப்பட்ட வரம்.
"காதல் சாதி" திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்து முழுமையாக வெளிவராத படங்கள் என்ற பட்டியலில் அடங்கும். இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்க நடிகர் உதயா. பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் இதுவாகும்.
இந்தப் படத்திற்காக மொத்தம் ஒன்பது பாடல்கள் இசையமைக்கப்பட்டவை என்பதை நினைக்கும் போதுதான் முடங்கிவிட்ட படத்தால் அருமையான பாடல்களும் விழலுக்கு இறைத்ததாகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும். கஸ்தூரிராஜா இதற்கு முன்னர் தேவா இசையில் "மவுன மொழி" படத்துக்காகப் பத்துப் பாடல்களைப் பெற்றுப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
"காதல் சாதி" திரைப்படப் பாடல்கள் 2001 ஆண்டு வாக்கில் வெளியான போது அந்தக் காலகட்டத்தில் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரணி ஆகியோர் பாடகராக ஒரு சில படங்களில் பாடி வந்தனர். இந்தப் படத்திலும் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது. தவிர இசைஞானி இளையராஜா, கோவை கமலா, உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.
பாடகி மஹதியின் குரலை மேற்கத்தேயப் பாணியில் கேட்டுப் பழகிய காதுக்கு இவரின் ஆரம்பகாலப் பாடலான "என்னை மறந்தாலும்" பாடலை கேட்கும் போது புதுமையாக இருக்கும்.
"மனசே என் மனசே" உன்னிகிருஷ்ணன், பவதாரணி பாடிய ஜோடிப் பாடல் அப்போது பிரபலம்.
பாடகர் கார்த்திக் சன் டிவியில் அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கி வந்த "பாட்டுக்குப் பாட்டு" மூலம் மேடை வாய்ப்பைப் பரவலாக்கிக் கொண்டவர். ஒருமுறை தன் பேட்டியில் "காதல் சாதி" படப்பாடல் தான் தனக்குக் கிட்டிய முதல் வாய்ப்பு என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் "ஸ்டார்" படத்தில் வந்த "நேந்துகிட்டேன்" பாடல் சமகாலத்தில் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பாகக் கார்த்திக்குக்கு அமையவே அதுவே அவரின் அறிமுகப்பாடலாக அமைந்துவிட்டது. இருப்பினும் இளையராஜா, ரஹ்மான் என்ற இரு பெரும் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தனது அறிமுகத்தைக் காட்டும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிட்டும்.
"காதல் சாதி" படத்தில் பாடகர் கார்த்திக் மூன்று பாடல்களைப் பாடியிருக்கிறார்.
பாடகி மஹதிக்கு ஒரு திருப்பமாக அமைந்த “ஹய்யய்யோ ஹய்யய்யோ” பிடிச்சிருக்கு” https://www.youtube.com/watch?v=l9itqELxH0E அவரின் சாஸ்திரிய இசை மரபுக்கு முற்றிலும் வித்தியாசப்பட்டது. ஆனால் அந்தப் பாடலில் ஹரிஹரனோடு அவர் கொடுத்த அற்புதமான சங்கதிகளால் தான் அந்தப் பாட்டு தொடர்ந்து அவருக்கு ஏராளம் பாடல்ககள் கிடைக்க முதலீடானது.
“காது மடல் அருகே உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு”
என்ற இடத்தில் ஒரு சிரிப்பைத் தூவுவாரே அங்கே கன்னக்குழி தெரியச் சிரிக்கும் அழகி போல இருக்கும் அந்தச் சங்கதி.
எனக்கு நீ நன்றிக்கடன் ஏதாவது செய்யணும்னா ஒம் புருஷனை எனக்குப் பல் டாக்டரா நிரந்தரமாக்கிடு" என்று குறும்பாகச் சொன்னார் சிட்னி ஒபரா ஹவுசில் கே.ஜே.ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்து. அங்கே தான் மஹதி திருமண பந்தத்தில் இணைவதாக மேடையில் பகிரங்கமாக அறிவித்தார் கான கந்தர்வர்.
அப்போது நான் எழுதிய பதிவு
http://www.madathuvaasal.com/2006/10/blog-post.html
உன் பிள்ளையோடு கூட நான் பாடுவேன், இதை நான் நம்பிக்கையோடு சொல்வேன், என் குருநாதர் இதே செம்பை வைத்தியநாதபாகவதர் இதே போல எனக்குச் சொல்லியிருக்கார். எம்புள்ள முன்னாடி அவர் கச்சேரி செய்தும் இருக்கார்" என்று ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்துச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.
பாடகி மஹதிக்கும், ஹரிஷ் ராகவேந்திராவுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் அற்புதமான பொக்கிஷப்பாடல்களைக் கொடுத்திருக்கிறாரே என்று நினைப்பதுண்டு. அப்படி ஒன்று தான்
“அயன்” படத்தில் வரும்
“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே”
https://www.youtube.com/watch?v=4HDiSUisIS4
மஹதி கிசுப்பான குரலில் கொடுக்க, ஹரிஷ் ஏக்கத்தொனியில் அங்கேயும் இருவரும் துளி குறை வைக்காமல் அற்புதமான இசை வேள்வி நடத்தியிருப்பார்கள்.
பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் பத்து வருடங்கள் இசையைக் கற்றவர் மஹதியின் தந்தை. பையன் பிறந்தால் பாலமுரளி என்றும் பெண் என்றால் தான் கண்டுபிடித்த "மஹதி" ராகத்தையே சூட்டுமாறு வேண்டினாராம் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள். இசைக்கு அடையாளமாக விளங்கும் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட மஹதி தன் ஊர்ப்பெருமையைச் சாஸ்திரிய இசை மேடையிலும் காட்டுகிறார்.
காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல்
கட்டி புத்தன் ஆடுவான்
காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்
அடடா அடடா பிடிச்சிருக்கு.....
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மஹதி
கானா பிரபா
10.02.2022
0 comments:
Post a Comment