Pages

Tuesday, February 1, 2022

ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி...


“இந்த இழப்பைப் பற்றி வருந்திக் கொண்டிருக்காதே!

ஒரு இழப்புக்குப் பின்னால் ஒரு வெற்றியும் இருக்கும்”

இப்படி இயக்குநர் அனுமோகனைச் சமாதானம் செய்தாராம் இசைஞானி இளையராஜா. அனுமோகன் இணைத்தயாரிப்போடு இயக்கிய இரண்டாவது படமான “நினைவுச்சின்னம்” படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் இருந்த போது அவரின் தந்தை மறைந்த செய்தி கிட்டிய கலக்கத்தில் இருந்தவருக்குத் தான் இந்த மாதிரிச் சமாதானம் சொன்னாராம் ராஜா. பின்னணி இசையோடு காட்சியும் பொருந்த சில நகாசு வேலைகளையும் சொல்லி ராஜா போட்டுக் கொடுத்த இசை “நினைவுச் சின்னம்” படத்தை வெள்ளி விழாப் படமாக்கியது.

அண்மையில் சாய் வித் சித்ராவில் பிரபு நடித்த படங்களில் தனக்குப் பிடித்ததில் ஒன்றாக “நினைவுச் சின்னம்” படத்தையும், பிரபுவின் அண்ணன் ராம்குமார் குறிப்பிட்ட போது ஆச்சரியமாக இருந்தது. பிரபு, ராதிகா கொங்கு பாஷையில் நடிக்க, இரண்டாவது ஜோடியாக முரளி & சித்ரா நடித்தார்கள்.

நினைவுச் சின்னம் படத்தின் பாடல்கள் எல்லாமே தேன் மாரி தான்.

திடுதிப்பென்று எஸ்பிபி வந்து குதித்து, சித்ராவோடு கும்மாளமிடும்

“வைகாசி மாசத்துல பந்தலொண்ணு போட்டு”

https://www.youtube.com/watch?v=3qWhTR-e39M

அதுவும் அந்த “ரெண்டு” என்பதைப் போகிற போக்கில் சுழித்து விட்டுப் பாடும் நகாசுக்காகவே அடிக்கடி ஓட்டிக் கேட்பேன்.

மனசைத் தடவித் தாலாட்டுப் பாடும் 

ஏலே இளங்குயிலே 

என்னாசைப் பைங்கிளியே 

பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தீன்சுவையே

https://www.youtube.com/watch?v=oMyZgqme8YA

தாலாட்டு ஸ்பெஷலிஸ்ட் சுசீலாம்மா அப்படியே நம்மையும் பச்சைக் குழந்தை ஆக்கிவிடுவார்.

அப்படியே இன்னோர் பக்கம் ரணமான மனசுக்குக் களிம்பு போலத் தடவி விடும்

“சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன”

https://www.youtube.com/watch?v=VpWJ9bulKyA

என்று இசைஞானியார் தாயாகும் தருணம் என்று கொண்டாடும் இந்த இசைப் பெட்டகத்தில் இன்னொன்று அமைதியாக ஒளிந்து கொண்டிருக்கிறது. அதுதான்

“ஊருக்குள்ள என்னையும் பத்தி 

உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க”

https://www.youtube.com/watch?v=v37G03aovf8

முன் சொன்ன பாடல்கள் சொல்லாமலேயே பரவலான கவனத்தை ஈர்க்கக் கூடிய, சொல்லி அடித்த பாடல்கள். இவற்றில் இருந்து விலகி ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அழகிய காதல் பாட்டு என்பதால் இதன் மீதான நேசமும் எனக்கு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.

அப்போதெல்லாம் புதுப் படங்களின் பாடல்கள் வெளிவரும் போது ஊருக்குள் இருக்கும் ரெக்கார்டிங் பார் காரர்கள் சத்தமாக அவற்றை ஒலிபரப்பி விளம்பரம் கொடுப்பார்கள். அந்த விளம்பரத்தாலேயே அவை பிரபலமாகிச் சூடு கிளப்புவதுண்டு. இந்தப் பாட்டு அந்த ரகத்தில் கூட அப்போது இருக்கவில்லை. 

சாதாரணமாக ஆரம்பிக்கும் பல்லவி தான், ஆனால் சரணம் தூக்கிச் சாப்பிட்டு விடும். ஒரு மெலிதான நடன அசைவுகள் போல ஜாலம் போட்டு விடுவார் ராஜா. மலேசியா வாசுதேவன், சித்ரா குரல்களுக்கு ஒத்திசைக்க புல்லாங்குழலும் வந்து எட்டிப் பார்த்துச் சிரித்து விட்டுப் போகும். கிராமத்து ஜோடி முரளி, சித்ராவுக்காக மலேசியா அண்ணரும், அப்படியே தாவணி போட்ட குரலாக சித்ராவுமாக சோக்கான பாட்டு.

மலையோரம் மயிலே (ஒருவர் வாழும் ஆலயம்), கம்மாக்கரை ஓரம் (ராசாவே உன்னை நம்பி) , நீ போகும் பாதையில் (கிராமத்து மின்னல்), இளம் வயசுப் பொண்ணை ( பாண்டி நாட்டுத் தங்கம்) என்று மலேசியா வாசுதேவன், சித்ராவின் ஜோடிப் பாடல்கள் புதுப்பரிமாணம் கொடுப்பவை. 

“ஊருக்குள்ள 

என்னையும் பத்தி உன்னையும் பத்தி

அட என்னென்னமோ சொல்லுறாங்க”

https://www.youtube.com/watch?v=v37G03aovf8

அலுங்காமல் குலுங்காமல் வளைந்து நெளியும் சந்தச் சிறப்பிற்காக அலுக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

கானா பிரபா

01.02.2022


0 comments: