Pages

Wednesday, February 16, 2022

இதயமே....போகுதே....



“துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ.......”

சலவைக்காரரிடம் உடுதுணிகளைக் கொடுக்கும் போது இது இன்னாரது உடுப்புப் பொதி என்று நுணுக்கமாக ஒவ்வொரு ஆடையிலும் சிறு முத்திரை இடுவார். அந்த மாதிரியான நுணுக்கத்தை இந்தப் பாடலில் பொதித்திருப்பார் பாடலாசிரியர் பொன்னடியான்.

மேலும், 

“வெள்ளாவியில் வேக வச்ச

வெளுத்த துணி நானு புள்ள

கச்சிதமா கஞ்சி போட்டு

தேச்ச துணி நீதான் புள்ள

ஆத்துக்குள்ளே நீ இறங்கி நிக்கையிலே

ஒரு சொகுசு

துணி எடுத்து துவைக்கிறப்போ

துவண்டு விடும் என் மனசு

காஞ்சிபுரம் பட்டில் மின்னும்

பொன்னப் போல உன் மேனி

எப்போதும் சாயம் போகா

சிலுக்கு துணி கண்ணே நீ

நான் தேடியே வாடுறேன் தேவியே”

என்று அந்தச் சூழலோடு பொருந்திய அற்புதமான உவமை தொனிக்கும் வரிகளோடு தொடரும்

“இதயமே போகுதே காதலில் வேகுதே” என்ற “அரண்மனைக் கிளி” படப் பாடல். 

ராஜ்கிரண் தன்னுடைய “என் ராசாவின் மனசிலே” படத்தில் வடிவேலுவுக்கு முத்திரைப் பாத்திரம் கொடுத்து “போடா போடா புண்ணாக்கு” பாடலும் வாயசைக்க வைத்தவர் ஒரு முழு நீளப் பாடலுக்கு ஒத்திகை பார்த்திருக்கலாம். 

ராஜ்கிரண் நடித்து இயக்கிய "அரண்மனைக் கிளி" படத்துக்காக இசைஞானி இளையராஜா வாரி வழங்கிய ஒன்பது பாடல்களில் இரண்டு பாடல்கள் படமாக்கப்படவில்லை. ஒன்று இளையராஜா பாடிய "ராமரை நினைக்கும் அனுமாரு", இன்னொன்று கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பாடிய "இதயமே போகுதே". இங்கே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திரைப்படத்துக்காகப் பாடிய "இதயமே போகுதே" பாடலைப் பகிர்கிறேன். இந்தப் பாடல் தொண்ணூறுகளின் பாடல் விரும்பிகளுக்கு, குறிப்பாக என் நண்பர் வட்டம் அப்போது நேசித்த பாடல்களில் ஒன்று. இந்த மாதிரியான பாடல்கள் இவருக்கு நிரம்பக் கிடைத்திருந்தால், கூடவே அவை படமாக்கப்பட்டிருந்தால் இன்னும் பல வாய்ப்புகள் இவரை நாடியிருக்குமோ என்னமோ.

“இதயமே போகுதே” பாடலைப் பாடிய பாடகர் கிருஷ்ணமூர்த்தி மேடை இசைக் கச்சேரிகளில் பிரபலமான பாடகராக விளங்கியவர். T.M.செளந்தரராஜன் என்ற மேதமை பொருந்திய குரலோனின் பிரதி பிம்பமாக இவர் மெல்லிசை மேடைகளில் துலங்கியவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆரம்ப வரவுகளிலும் இவரின் கச்சேரிகளை ரசித்திருக்கிறேன்.

மதுரா ட்ராவல்ஸ் நடத்திய தென்னிந்தியப் பாடகர்களை ஒன்று கூட்டிய பிரமாண்டத் திருவிழாவில் கூடப் பாடியிருக்கின்றார்.

“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடலை அட்சர சுத்தமாகப் பாடுவார்.

இசைஞானி இளையராஜாவின் கூட்டுப் பாடகர் குழாமில் இருந்து சிறப்பித்தவர். 

“பாடாத தேனீக்கள்” படத்தில் வரும் “ஆதி அந்தம் இல்லாதவனே” https://www.youtube.com/watch?v=WsizL-eurKk என்ற களிப்பூட்டும் பாடலும், 

“சக்கரைத் தேவன்” படத்தில் பாடகர் T.S.ராகவேந்தருடன் “பாக்கு கொண்டா வெத்தலை கொண்டா” https://www.youtube.com/watch?v=GfMyqoWdFjw (கார்த்திக் ராஜா இசைமைத்ததாக விஜயகாந்த் மேடையில் குறிப்பிட்டார்)

பாடல்களும் முக்கியமானவை. 

ஏப்ரல் 2 ஆம் திகதி, 2016 இவ்வுலகை விட்டு மறைந்தார். 

எனது மனசுக்கு நெருக்கமான பாடல்களில் அவர் பாடிய “இதயமே போகுதே” என்றென்றும் என் நினைவில் வாழும்.

“துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ

இதயமே போகுதே காதலில் வேகுதே

கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே”

https://www.youtube.com/watch?v=QnpZvToaZHo

கானா பிரபா

16.02.2022


0 comments: