Pages

Sunday, February 20, 2022

மலேசியா வாசுதேவன் அண்ணன் செம்மண்ணின் ஈரம் போல் ❤️

“காணும் கனவுகள்.....

நீ கொண்ட ஆசை நினைவுகள்

காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்

என்னென்ன சொல் இந்நாளிலே

நிறைவேற்றுவேன்......

அரவணைத்து ஆறுதல்படுத்தும் சுகத்தை கேட்கும் தோறும் ஒருவரால் கொடுக்க முடியும் என்றால் அது மலேசியா வாசுதேவனால் நிறையச் சந்தர்ப்பங்களில் விளைந்திருக்கிறது. ஆகத் திறமான சாகித்தியம் கொட்டும் பாடகர் நிறையப் பேர் குரலைக் கேட்டிருக்கிறோம், அதில் அவரின் திறனை மெச்சியிருக்கிறோம். ஆனால் நம் காலத்தவர் வாழ்வுக்கு மிக நெருக்கமாக இருந்த மலேசியா வாசுதேவனின் அணுக்கம் இன்னும் நெருக்கமானது. 

அதனால் தான்

“செம்மண்ணிலே தண்ணீரை போல் 

உண்டான சொந்தம் இது

சிந்தாமணி ஜோதியை போல் 

ஒன்றான பந்தம் இது”

கேட்கும் தோறும் இல்லாத தங்கை பந்தத்தையும் இருப்பது போல எண்ண வைத்து விடுகிறது.

அச்சொட்டாக அண்ணனின் குரலாகப் பொருந்தி விடும் மகத்துவம் எங்கள் மலேசியா அண்ணனுக்கு,

“ஒரு தங்கரதத்தில்” கேட்கும் போது உணரப்படும்.

“தோப்பிலே இருந்தாலும்

ஒவ்வொரு மரமும் தனித்தனிதான்

கூட்டத்தில் இருந்தாலும்

மனுஷன் எவனும் தனிமரந்தான்!

சமுதாயம் என்ன போடா

வீடு வாசல் என்ன போடா”

என்று தத்துவத்திலும் கை தேர்ந்த குரலாய் அவரே.

மலேசியா வாசுதேவன் பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்ற விநோதமான பாட்டோடு பிரபலமானவர். 

துள்ளிசைப் பாடல்களைக் கொடுக்கும் போது கூட எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் (வச்ச பார்வை தீராதடி பாடல் அவரின் உச்சம் என்பேன்) இவர்களோடு மலேசியா வாசுதேவன் என ஒவ்வொருவரும் தனிப்பாணி உண்டு.

எண்பதுகளில் மலேசியா வாசுதேவன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குரலாக அச்சொட்டாக அமைந்த போது ரஜினிக்கு துள்ளிசைப்பாடல்கள் என்று வரும் போது மலேசியாவும் சிறப்பாகக் கை கொடுத்தார். ஆசை நூறு வகை பாடல் ரீமிக்ஸ் யுகத்திலும் கலக்குகின்றது. 

ஒரு பாடலை வரிக்கு வரி ஒப்புவிக்காமல் கேக் இற்கு ஐசிங் தடவியது போல தன் சிரிப்பாலும் கனைப்பாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்தப் பாடலை மெருகேற்றுவது போலவே மலேசியா வாசுதேவனின் இந்த "ஹேய்" என்ற உற்சாகத் துள்ளல்.

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி என் கண்மணி பாடலை (தர்மத்தின் தலைவன்) பாடலை மலேசியா வாசுதேவன் குரலுக்காக மீண்டும் மீண்டும் ஒலிக்க விட்டுக் கேட்ட காலமெல்லாம் உண்டு. 

“ஆஆஆடி பாப்பமா” என்றெல்லாம் கொடுக்கும் எள்ளலை மனதுக்குள் சிரித்துக் கொண்டே கேட்பேன்.

அதிசயப் பிறவி படத்தில் மலேசியா வாசுதேவனுக்காக பாடல்களை ராஜா அள்ளிக் கொடுத்த போது சிங்காரி பியாரி பாடலை முந்திக் கொண்டு கேட்டது " ஒன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத் தோணும்" அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே "இதப்பார்ரா" என்று தரும் எள்ளலோடு பாடல் முழுக்க மலேசியா ராஜ்ஜியம் 

மலேசியா வாசுதேவன் எள்ளல், வயோதிபத் தொனி, கலாய்ப்பு என்று எல்லாவிதமான பரிமாணங்களிலும் பரிணமிக்க முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் மாமனுக்கு மைலாப்பூரு தான்

அண்ணன். 

மலேசியா வாசுதேவனுக்குத் துள்ளிசைப் பாடல் உலகிலும் ஒரு இடமுண்டு. ஆனால் அங்கே தான் அவர் வெகு சுதந்திரமாக ஆர்ப்பரிப்பார். 

காதல் பாடல்களிலோ, உணர்வு மேலோங்கும் குடும்பத்துப் பின்னணி ஒலியோ அவர் மிகக் கவனமாக அடியெடுத்துப் பாடுவது போல இருக்கும். அநாசயமாகத் தன் வரிகளைக் கொட்டாது இருந்த இடத்தில் அப்படியே அந்த வரிகளில் ஒரு உணர்வுக் குவியலை எழுப்பி விடுவார். 

“தென்றலே ஆசை கொண்டு

தோகையை கலந்ததம்மா

தென்றலே ஆசை கொண்டு

தோகையை கலந்ததம்மா

தேவதை வண்ணம் கொண்ட

பூவை நீ கண்ணே

மா அம்மம்மா , நெஞ்சில்

தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்”

அந்தக் கடைசி ஈரடிகளைக் கேட்கும் போது மெல்லிய நெகிழ்வைக் கொடுத்து எங்களை இளக வைத்து விடுவார்.

“ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக

பாடு, பண் பாடு.....,

இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்

கூடு, ஒரு கூடு....,,

என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்....”

“பூங்காற்று திரும்புமா....

என் பாட்டை விரும்புமா....”

T.M.செளந்தரராஜன் குரலோடு ஒட்டிய சிவாஜிக்கு எண்பதுகளின் இன்னொரு குரலாக மலேசியா வாசுதேவன் ஒட்டிக் கொண்டது அவ்வளவு இயல்பானதொன்றல்ல. முதல் மரியாதையை வைத்து ஒரு ஆராய்ச்சியையே செய்து முடித்து விடலாம்.

இந்தப் பக்கம் சிவாஜி இன்னோர் பக்கம் ஆரம்ப கால ரஜினிக்கு அச்சொட்டான குரல் என்று மலேசியா வாசுதேவனுக்கான அங்கீகாரம் கதவைத் தட்டி வந்ததல்ல. இயல்பாக எழுந்தது.

“நீ.....இல்லாத போது

ஏங்கும் நெஞ்சு சொல்லாத கதை நூறு....”

“அலங்கார பொன் ஊஞ்சலே 

அழகாடும் பூஞ்சோலையே 

இளமாதுளை மலைத்தேன் 

சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே .....”

“காலங்கள் மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள் பூக்கள்.....”

தோண்டத் தோண்ட ஊற்றெடுக்கும் மலேசியா வாசுதேவனின் ஆரம்ப காலங்கள். 

அப்படியே எண்பதுகளுக்குள் நுழைந்து விட்டால்

“மாறாது இது மாறாது...,”

என்று “கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச” பாடலோடு இன்னொரு குவியல்.

இதெல்லாம் கட்டிய தொகுதி இது.

1. இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது - எஸ்.ஜானகி (சிகப்பு ரோஜாக்கள்)

2. மலையோரம் மயிலே - சித்ரா ( ஒருவர் வாழும் ஆலயம்)

3. கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச - எஸ்.ஜானகி (என் ஜீவன் பாடுது)

4. சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே - சித்ரா (அண்ணனுக்கு ஜே)

5. காலங்கள் மழைக்காலங்கள் - எஸ்.ஜானகி ( இதயத்தில் ஒரு இடம் )

6. மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி எஸ்.ஜானகி (சக்கரைத் தேவன்)

7. குயிலே குயிலே பூங்குயிலே - சித்ரா (ஆண் பாவம்)

8. இள வயசுப் பொண்ணை வசியம் செய்யும் - சித்ரா ( பாண்டி நாட்டுத் தங்கம்)

9. ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில் - எஸ்.ஜானகி (மண் வாசனை)

10. மலர்களே நாதஸ்வரங்கள் - எஸ்.ஜானகி (கிழக்கே போகும் ரயில்)

11. ஆனந்தத் தேன் காற்றுத் தாலாட்டுதே - எஸ்.பி.சைலஜா (மணிப்பூர் மாமியார்)

12. ஆகாய கங்கை - எஸ்.ஜானகி ( தர்ம யுத்தம்) 

13. வெட்டி வேரு வாசம் - எஸ்.ஜானகி (முதல் மரியாதை)

14. தா தந்தன கும்மி கொட்டி - எஸ்.ஜானகி (அதிசயப் பிறவி)

15. தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - எஸ்.ஜானகி (தூறல் நின்னு போச்சு)

16. இதயமே நாளும் காதல் (அடுத்தாத்து ஆல்பாட்)

17. பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் ( மைக்கேல் மதன காமராஜன்)

18. ஆத்து மேட்டுல - எஸ்.ஜானகி (கிராமத்து அத்தியாயம்)

19. நீ போகும் பாதையில் மனசு போகுதே - சித்ரா ( கிராமத்து மின்னல்)

20. கம்மாக்கரை ஓரம் கண்ணு ரெண்டும் - சித்ரா ( ராசாவே உன்னை நம்பி)

21. ஆயிரம் மலர்களே - ஜென்ஸி, எஸ்.பி.சைலஜா (நிறம் மாறாத பூக்கள்)

22. ஹேய் மைனா - சித்ரா (மாவீரன்)

23. பனி விழும் பூ நிலவில் - எஸ்.பி.சைலஜா (தைப்பொங்கல் )

24. வான் மேகங்களே - எஸ்.ஜானகி ( புதிய வார்ப்புகள்)

25. ஒன்னப் பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி - உமா ரமணன் ( மல்லு வேட்டி மைனர்)

26. ஆழக்கடலில் தேடிய முத்து - எஸ்..ஜானகி (சட்டம் என் கையில்)

27. ஊருக்குள்ள ஒன்னையும் பத்தி - சித்ரா ( நினைவுச் சின்னம்)

28. சரியோ சரியோ நான் காதலித்தது - எஸ்.ஜானகி ( எங்கிட்ட மோதாதே)

29. சீவிச் சிணுக்கெடுத்து - எஸ்.ஜானகி (வெற்றி விழா)

30. ஏத்தம்மய்யா ஏத்தம் - சித்ரா (நினைவே ஒரு சங்கீதம்)

பெண் ஜோடிக் குரல் இல்லாதத் தனிப் பாடல்கள் 

31. கோடை காலக் காற்றே - பன்னீர் புஷ்பங்கள்

32. பூவே இளைய பூவே - கோழி கூவுது

33. என்றென்றும் ஆனந்தமே - கடல் மீன்கள்

34. ஏ ராசாத்தி ரோசாப்பூ - என் உயிர்த் தோழன்

35. வா வா வசந்தமே - புதுக் கவிதை

36. ஊரு விட்டு ஊரு வந்து - கரகாட்டக்காரன்

37. அள்ளித் தந்த பூமி - நண்டு

38. அடி ஆடு பூங்கொடியே - காளி

39. குயிலுக்கொரு நிறம் இருக்கு - சொல்லத் துடிக்குது மனசு

40. பாட்டு இங்கே ராபப்பா - பூவிழி வாசலிலே

“மலையோரம் மயிலே....

விளையாடும் குயிலே...

விளையாட்ட சொல்லித் தந்ததாரு.....”

இசை குறித்த இலக்கண அறிவில்லாத பாமர ரசிகனின் ரசிப்பு என்பது பசித்தவனுக்குக் கிட்டும் சாப்பாட்டுத் தட்டில் இருக்கும் அறுசுவை போன்றது. அது போல இருக்கும் எனக்காகவே வார்த்தது போல இருக்கும் இந்தப் பாட்டைக் கேட்காது நினைத்த மாத்திரத்தில் கூட.

“சிந்துமணி புன்னகையில்

சிந்தி வரும் மெல்லிசையில்

தேடாத ராகங்கள் கேட்கின்றது 

தேனோடு பாலொன்று சேர்கின்றது”

ஓ மை லவ்.......

ஓ மை லவ்.......

ஓ மை லவ்.......

https://www.youtube.com/watch?v=f2yqM4zXltk

அந்தத் தொண்ணூறுகளில் ஈழத்தில் இருந்து தமிழகத்தின் திசை நோக்கி சென்னை வானொலியில் கேட்ட இந்த காதல் ஜோடிப் பாடலை உள்ளூர் பாட்டுப் பதிவு செய்யும் நிலையத்தாரிடம் கேட்க அவரோ இதே பாடலின் ஜேசுதாஸ் பாடிய சோக வடிவத்தைப் பதிவு செய்து தந்த போது தாள முடியாத சோகம். ஏனெனில் சோக வடிவம் அருமையாகவும், பிரபலமாகவும் இருந்தாலும் கூட அந்த காதல் ஜோடிப் பாடலில் சித்ராவோடு இணைந்து, எண்பதுகளின் மென் குரலாக மலேசியா வாசுதேவன் பயணித்திருப்பார். 

தொண்ணூறுகளில் அதிகம் கிராமியத் தெம்மாங்கில் பயன்பட்டவருக்கு மலேசியா அண்ணன் இயக்கிய “நீ சிரித்தால் தீபாவளி” படத்தில் இப்படியொரு மெல்லிசைக் காதல் சந்தத்தைக் கொடுத்த ராஜாவை மனசாரப் பாராட்டினேன். தொண்ணூறுகளிலும் தன்னால் தன் பழைய எண்பதுகளின் குரலாக மிளிர முடியும் என்று செய்து காட்டிய அற்புதம் அது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பு வந்து இந்தப் படத்தின் ஒலிப்பேழையை வாங்கி ஒட்டகம் போல அவதி அவதியாகக் கேட்டு ரசித்தேன் அப்போது. 

இன்று காலை கூட இதே பாடலோடு தான் விடிந்தேன்.

மலேசியா வாசுதேவன் அண்ணன் செம்மண்ணின் ஈரம் போல் நம் நெஞ்சில் இருப்பார். 

கானா பிரபா

20.02.2022

பாடகர் மலேசியா வாசுதேவன்

15 June  1944 - 20 February 2011


0 comments: