Pages

Tuesday, February 8, 2022

கலைமானே...... உன் தலை கோதவா...! ❤️


காதலியே....... என்று அந்த மூச்சு விட மறந்த நீட்சி அப்படியே மலை முகடு தொட்டு பரந்து விரிந்து ஒலிக்குமாற் போல அவள் இருக்கும் திசை தேடித் தட்டுமாற் போவொரு பாவனையோடு தொடங்கும் போதே வேறோர் ஒரு சூனிய உலகுக்குள் போய் விடும் மனது.

“கண்ணே நீ போகும் 

வழி எங்கு போனாலும்

எல்லா வழியும் என் வீட்டு வாசலில்

வந்துதான் முடியும்...”

அனுபந்தமாகத் தொடங்குமிடத்தில் ஒரு ஹைக்கூ தனத்துக்குப் பின்னர் தான் அந்தக் “காதலியே.....” நீட்சி. எவ்வளவு அழகானதொரு கற்பனையில் களச் சூழலும், இசையும், பாடல் வரிகளும் ஒத்திசைவோடு சங்கமிக்கும் அற்புதத் தருணமது.

ஏ.ஆர்.ரஹ்மான் வட இந்தியருக்காகத் தன்னை மாற்றிக் கொண்டவரல்ல, அவர்களைத் தன் பக்கம் ஈர்த்து விட்டுத் தான் அவர்களின் அடையாள செவ்வியல் இசையிலும் தன்னால் கொடுக்க முடியும் என்று தான் கற்ற சுபி இசை மரபுகளையும் கொடுத்தார்.

அந்த வகையில் இந்த 

“நஹி சாம்னே” 

https://www.youtube.com/watch?v=bNK94h7vUeA

முந்தியதாக ரஹ்மானுக்கான அடையாளத்தை அங்கு நிறுவி அவர்களை ஆக்கிரமித்த வரிசையில் ஒன்று. 

அதனால் தான் அந்தப் பாடல் 

“கலைமானே உன் தலை கோதவா” 

https://www.youtube.com/watch?v=Q976wRoUuyQ

என்று நதிமூலத்துக்கு வந்த போதும் அந்நியப்படாமல் நம் மெய் நனைத்தது. வரைமுத்துவும் அந்நியம் கெடாமல் பார்த்துக் கொண்ட அற்புதக் கைவண்ணம்.

நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது – என்

உயிர் உள்ள புள்ளிதான் 

நீ வாழ்வது......

அப்படியே நம்மை அடித்துப் போட்டுக் கிடத்தி விடுவார் ஹரிஹரன்.

ஹிந்தியில் ஹரிஹரன் & சுக்விந்தர் சிங் கூட்டணியாக அடையாளப்பட்டாலும் முன்னவர் தான் முழு ஆக்கிரமிப்போடு பயணிப்பார். தமிழில் அதனால் தான் தனித்தும் அதே ஆக்கிரமிப்பைக் காட்ட முடிந்தது.

உன் கையிலே பூ வலை போடவா

உன் பாதையில் பூ மழை சிந்தவா

பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா

பெரும் பணக்காரக் காதலன் தன்னை எல்லாம் இழந்து, தன் காதலிக்காக பட்டுப் பீதாம்பரமோ, வைர வெள்ளி நகைகளையோ அணிவிக்காது அப்படியே அவளின் எளிமைக்கு நிகரான சோடனையைப் போடுவானாம் பாருங்கள்.

தால் ஹிந்திப் பதிப்பு தமிழில் தாளம் ஆன காலம் தொட்டு நான் ஆத்மார்த்தமாக ஆராதிக்கும் பாட்டு இது. இருபது வருடங்களாக “காதலர் கீதமாய்” வானொலியில் கொடுத்தாலும் பட்டை தீட்டிய வைரம் போல அந்த இசைத்தட்டு இன்னும் பழுதுபடாமல் இருக்கின்றது.

அந்த “காதலியே.....” என்ற கீச்சுக் குரலுக்கும் , “கலைமானே” என்றமைந்து தொடரும் வரிகளுக்கும் தான் எத்தனை வேறுபாடு, அதுவே ஒரு அழகியல்.

படம் வந்த காலத்தில் அக்க்ஷய் கண்ணா மீது அவர் தூக்கிச் சுமக்கும் அந்தச் செல்ல நாய்க்குட்டி போல ஒரு அனுதாபப் பார்வை விளைந்தது. இந்தப் பாடலை நேற்றில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தொலைவானபோது 

பக்கம் ஆனவள்

பக்கம் வந்த போது 

தொலைவாவதோ ?

https://www.youtube.com/watch?v=Q976wRoUuyQ

கானா பிரபா

0 comments: