Pages

Saturday, February 26, 2022

பயணங்கள் முடிவதில்லை ❤️ 40 ஆண்டுகள்பயணங்கள் முடிவதில்லை ❤️ 40 ஆண்டுகள்
ஒரு எதிர்பாராத வெற்றி தமிழ் சினிமாவின் போக்கையே நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியமைத்தது.
ஏற்கனவே “நெஞ்சத்தைக் கிள்ளாதே”, “கிளிஞ்சல்கள்” வழியாக (மூடுபனி துணை வேடம்) வெற்றிகளைக் குவித்த நடிகர் மோகனுக்கு மைக் ஐக் கொடுத்து அடுத்த பத்தாண்டுகளுக்குக் குறைவாக “மைக்” மோகனாக்கியது.
அதுவரை கே.பாக்யராஜோடு ஒட்டிக் கொண்டிருந்து, சுயம்புவாகத் திரைத் தொழிலைக் கவனித்துக் கற்றுக் கொண்டு
“ஒருத்தி மட்டும் கரையினிலே” படத்துக்குக் கதை, வசனம், ஆர்.சுந்தரராஜனுக்கு ஒரு பெரும் வெற்றிக் கனியைச் சுவைக்க வைத்து, வெள்ளி விழா இயக்குநராகப் பத்தாண்டுகள் வைத்திருந்தது. பாக்யராஜ் உதவி இயக்குநராகக் குடியிருந்த குடியிருப்புப் பகுதியை நினைவுபடுத்தும் காட்சியை கவுண்டமணி காட்சியாக இணைத்திருப்பார்.
“ஒருத்தி மட்டும் கரையினிலே” படத்திற்கு இசை கங்கை அமரன். அது போலவே எண்பதுகளின் வெள்ளி விழா நாயகன் ராமராஜன் இயக்குநராக அறிமுகமான “மண்ணுக்கேத்த பொண்ணு” படத்துக்கும் இசை கங்கை அமரன்.
“பயணங்கள் முடிவதில்லை” படத்தில் “தோகை இளமையில்” பாடலைப் பார்த்து ரசிக்கும் முக்கியஸ்தராக கங்கை அமரன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்.
“பயணங்கள் முடிவதில்லை” படத்துக்காக முதலில் ஒப்பந்தமானவர் நடிகர் சுரேஷ். ஆனால் ஒரு விபத்தின் காரணமாக அவரை வைத்துப் படமாக்காத சூழலில், ஸ்டில்ஸ் ரவி அவர்களின் பரிந்துரையில் நடிக்க வந்தவர் மோகன். அந்தத் திடீர் அதிஷ்டமே அவரைத் தொடர்ந்தும் தமிழ் சினிமாவில் நிலைக்க வைத்தது.
இந்தப் படத்தின் கதையைத் தானே எழுதியதாக பி.வாசு சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெரிய நிறுவனங்கள் கதையைத் தம் இலாகா பெயரிலேயே போடுவது வேறு மொழிகளில் எடுப்பதற்கான உரிமைச் சிக்கலையும் குறைக்கும். மதர் லேண்ட்ஸ் பிக்சர்ஸ் மூலம் தயாரிப்புத்துறைக்கு அடியெடுத்து வைத்து அந்தக் காலத்தில் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க இந்தப் படமும் தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்குப் பிள்ளையார் சுழி போட்டது. முழுத் திருப்தி இல்லாமல் படத் தயாரிப்புக்கு வந்தவருக்கு ஒரு பெரிய நம்பிக்கை விதையைக் கொடுத்தது இந்தப் படம்.
இந்தப் படத்தில் பிரபல திரைக் கதாசிரியர் சிறுமுகை ரவி இணை இயக்குநராக இயங்கினார்.
“பயணங்கள் முடிவதில்லை” வெள்ளி விழாக் கண்டதோடு
வட சென்னை மகாலட்சுமி தியேட்டரில் ஒரு வருடம் ஓடிய சாதனை படைத்தது.
இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி என்ன சொல்ல? ஒரு பதிவு தானும் போதுமோ?
பாடகர்கள் எஸ்.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
என்ற இருவரைத் தவிர யாரையும் காணாத பிரமிப்பு இந்தப் படம் பார்த்த நாளில் கொண்டிருந்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது.
“இளைய நிலா பொழிகிறதே” பாடல் இந்த நாற்பது ஆண்டுகள் இன்னும் நவீனம் கலையாத இசை ஓவியம்.
வைரமுத்துவுக்கு இளைய நிலா பொழிகிறதே, சாலையோரம், தோகை இளமயில் என்று மூன்று பாடல்கள்.
ராக தீபம் ஏற்றும் நேரம், மணி ஓசை கேட்டு எழுந்து என்று கவிஞர் முத்துலிங்கத்துக்கு இரண்டு,
அதுபோலவே ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா என்று ஒரு குத்துப்பாட்டு, வைகறையில் வைகைக்கரையில் என்று ஒரு சோக ராகம் என்று கங்கை அமரனுக்கு என்று முத்தான ஏழு பாடல்கள்.
உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் இந்த ஏழு பாடல்களில் ஒன்றைத்தானும் தவிர்க்க முடியுமா?
பயணங்கள் முடிவதில்லை பாடல்கள்
இசைஞானி இளையராஜாவை வட நாட்டிலும் தன்னுடைய முகவரி இல்லாமல் ஆக்கிரமிப்புச் செய்தவர் என்பதற்கு “இளைய நிலா”வும் இன்னோர் உதாரணம்.
Neele Neele Ambar Par
மட்டுமல்ல ஈராயிரங்களில் வெளிவந்த ஹிந்தி மியூசிக் ஆல்பங்களிலும் இந்த இசை திருடப்பட்டு ஹிந்திக்காரரால் பயன்பட்ட வரலாற்றை அப்போது கொடுத்திருந்தேன். (பல வீடியோக்கள் இப்போது அழிக்கப்பட்டு விட்டன)
இசை கற்கும் மாணவருக்குப் பாலபாடமாக ஏதாவது திரையிசைப்பாடல் இலக்கணமாக இருக்கும். நான் கீபோர்ட் பழகும் போது “யாழோசை” கண்ணன் மாஸ்டர் “நிலவு தூங்கும் நேரம்” (குங்குமச் சிமிழ்) பாட்டைத்தான் எடுத்த எடுப்பில் வாசிக்கப் பழக்குவார்.
அது போலவே இந்த நாற்பது ஆண்டுகளாக கிட்டார் இசையில் நீக்கமற இருக்கும் ஒரு பாட்டு எதுவென்றால் அது
“இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே.....”
பயணங்கள் (என்றும்) முடிவதில்லை
சாகாவரம் பெற்றது


கானா பிரபா
26.02.2022

0 comments: