Pages

Monday, March 7, 2022

என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ.....❤️💚

இன்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு தேதியும், மாதமும் கூட ஞாபகம் இருக்கிறது. காரணம் அந்த நேரம் அப்படியே பாடலைக் கேட்டு விட்டு மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு என் ஐஃபோன் Notes இல் முழுப் பாட்டையும் எழுதி வைத்ததை இன்றும் அழிக்காமல் வைத்திருக்கின்றேன்.

அந்த நாள் எனக்கு உவப்பான நாளாக அமைந்திருக்கவில்லை. பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது இவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டி இலங்கை சூரியன் எஃப் எம் ஐக் காதில் விட்டேன். அப்போது அந்த நொடியில் வந்த பாட்டுத் தான் இந்த “என்ன சொல்லிப் பாடுவதோ.....என்ன வார்த்தை தேடுவதோ”.

அதுவரை குழம்பிப் போயிருந்த எனக்கு ஒரு ஒளிக்கீற்றாய் இந்தப் பாட்டு இருந்தது போலிருந்தது. திரும்பத் திரும்பக் கேட்டுக் கேட்டு பாடலை எழுதி வைத்துக் கொண்டேன். சொன்னால் நம்ம மாட்டீர்கள் இந்தப் பாடலை விட்டு வெளியே வந்த ஒரு மணி நேரத்துக்குள் எல்லாம் மாயமானது போல ஒரு உணர்வு. காற்றில் மிதப்பது போலிருந்தது மனம்.

இசைஞானியை, அவரின் இசையை ஏன் இவ்வளவு தூரம் ஆழமாக நேசிக்கிறேன் என்பதற்கு என் வாழ்க்கையிலேயே பல விடைகள் கிடைத்திருக்கின்றன.

இந்தப் பாடல் இவ்வளவு தூரம் அந்நியோன்யமாக இருப்பதற்கு சகோதரர் பழநி பாரதி அவர்கள் எழுதிய வரிகளின் மீதான நேசமும் இன்னொரு காரணம்.

“இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்

எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ....”

கேட்கும் போது ஒரு மோன நிலைக்குக் கொண்டு போகும். 

அது போல “இளங்காத்து வீசுதே” பாடலுக்கும் இந்த “என்ன சொல்லிப் பாடுவதோ” பாடலுக்கும் ஒரு அழகான தொடர்பை பாடலில் பொதிந்திருக்கும் இயற்கைக்கும் இசைக்குமான தொடர்பு இறுகக் கட்டி விட்டிருக்கிறது.

“வளையாத மூங்கிலில் 

ராகம் வளைஞ்சு ஓடுதே

மேகம் முழிச்சு கேக்குதே....”

என்பது “இளங்காத்து வீசுதே” பாடலில் வரும் பாங்கில் 

“வெறும் காற்று 

இசையாக மாறுகின்ற 

மாயங்களை.....

என்ன சொல்லிப் பாடுவதோ”

இங்கே இந்த “என்ன சொல்லிப் பாடுவதோ” பாடலில் அழகாக இருத்தி விடுகிறார்.

வாய் பேசாத இரு ஜீவன்களின் காதல் பரிபாஷையை எவ்வளவு அழகாகச் சங்கேத பாஷையில் இந்தப் பாடலின் வரிகள் காட்டி நிற்கின்றன. பாடலின் பின்னணியில் பொருத்தியிருக்கும் இசையைத் தனியாகக் கழற்றிப் பார்த்தால் இதயத்துடிப்பு ஏறி இறங்கும் இயந்திரத்தின் திரை போல இருக்கும்.

இந்தக் காதலர்களின் தூய அன்பை எந்தவிதமான அனுதாப முத்திரையையும் இசையிலும், வரிகளிலும் காட்டாத ஒரு பாட்டு. இதுவொரு நேரான சிந்தனையின் வெளிப்பாடு. இது போலவே 

“மீண்டும் ஒரு காதல் கதை” படத்தில் குழந்தை சுபாவம் கொண்ட, மனதளவில் வளராத காதலர்களுக்கான பாட்டு

“அதிகாலை நேரமே 

புதிதான ராகமே

எங்கெங்கிலும் ஆலாபனை

கூடாத நெஞ்சம் ரெண்டும் 

கூடுதே பாடுதே....”

என்று பயணிக்கும். அங்கே கங்கை அமரன் பாட்டெழுதிய போது 

“காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது.....”

என்று இசைக்கும் இயற்கைக்குமான பந்தத்தைக் காட்டி நிற்பார்.

வட நாட்டுப் பாடகர்கள் தமிழுக்குப் பாட வந்த போது அது லதா மங்கேஷ்கராகட்டும் ஆஷா போன்ஸ்லே ஆகட்டும் இசை தந்த இனிமையை அவர்கள் பாடும் போது எழும் மொழிச் சிதைவு நெருடலாக இருக்கும்.

“பாட்டுச் சொல்லிப் பாடச் சொல்லிக் குங்குமம் தந்ததம்மா”என்று தேசிய விருதளவுக்கு அங்கீகாரத்தைப் பெற்ற பாடகி சாதனா சர்க்கம்

பாடும் தோறும் அந்த நெருடல் அவ்வளவாக எழுவதில்லை. அதிலும் இந்த “என்ன சொல்லிப் பாடுவதோ” பாட்டு அப்பழுக்கில்லாத பிரவாகம்.

ஹரிஹரன் - சாதனா சர்க்கம் ஜோடியில் அப்படியென்ன மந்திரமோ மாயமோ அவர்கள் எதைத் தொட்டுப் பாடினாலும் தேனாக இறங்குகிறது.

‪இந்தப் பாடல் வெளிவந்த புத்தாயிரம் ஆண்டுக் காலப் பகுதியில் எப்படி கார்த்திக் ராஜாவோ, யுவனோ அதே காலகட்டத்து இசைப் பரிமாணத்தில் கொடுத்திருப்பார்களோ அதே இளமைத் துள்ளலோடு ராஜா கொடுத்திருக்கிறார்.‬

14 ஜூலை 2015 இல் எழுதி வைத்த இந்தப் பாடல் வரிகளை அச்சுப் பகிர்கிறேன் இதோ. பாட்டுக்குள் போய் விட்டு வாருங்கள் அது ஒரு தனி உலகத்தைக் காட்டும்.

என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

வண்ணம் தரும் தூரிகையே

எண்ணங்களைச் சொல்லிடாதோ

என் ஓவியமே

என்ன சொல்லி பாடுவதோ

என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

கோடி குயில் கூவி

எந்தன் நெஞ்சில் கூடி

மெளனம் ஏனோ என்று கேட்குதே

ராகம் போடும் நேரம் 

வானம் தொடும் மேகம்

என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே

நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓ

மூச்சுக்குள் புல்லாங்குழல்

வெறும் காற்று இசையாக 

மாறுகின்ற மாயங்களை.....

என்ன சொல்லிப் பாடுவதோ 

என்ன வார்த்தை தேடுவதோ

அந்திப் பிறை வந்து 

மஞ்சள் வானில் நின்று

உன்னழகின் வண்ணம் சொல்லுதே 

ஓ ஹோ

பூவின் மடி தூங்கி 

தென்றல் மொழி வாங்கி

ஊமை நெஞ்சின் ஓசை சொல்லுதே

தீராத தேடல் ஒன்று ஓ

தேடட்டும் நெஞ்சம் ரெண்டு

சொல்லாமல் நில்லாமல் 

மனம் கொள்ளும் 

இன்பதுன்பம் தனை

என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சாதனா சர்க்கம்

https://www.youtube.com/watch?v=iA4MjaIe4gU

0 comments: