இந்தப் பாடலை இதுவரை கேட்காதவர்களோ அல்லது காலம் கடந்து மீண்டும் ஒருமுறை கேட்பவர்களோ ஆத்மார்த்தமாக உங்கள் காதுகளைக் கொடுத்துப் பாருங்கள் பிறகு தெரியும் சங்கதி. நாள் முழுக்க பல்லவியை முணுமுணுத்துக் கொண்டிருப்பீர்கள் அப்படியொரு அந்நியோன்யத்தை ஏற்பட்டுத்தும் பாட்டு இது.
இன்றைக்கு சூப்பர் சிங்கரில் வாண்டுகள் எல்லாம் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடும் போது உள்ளூர ஒரு உவகை எழுமல்லவா? ஆனால் தனது 14 வயதிலேயே “காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ” என்று ராஜா இசையில் கவிக்குயில் படத்துக்காகப் பாடிவிட்டார் சுஜாதா.
“புது வெள்ளை மழை” பாடலோடு தன்னோடு இரண்டாவது சுற்றை ஆரம்பித்த பாடகி சுஜாதாவின் முதல் சுற்றில் இளையராஜா இசையில் பாடியளித்த பொக்கிஷப் பாடல்களில் ஒன்று தான் இந்த “நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்” பாட்டு. எழுபதுகளின் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜென்ஸி, சொர்ணலதா (இன்னொருவர்), பூரணி, இந்திரா என்று கட்டுக்கடாத அறிமுகப் பாடகிகள் போன்று சுஜாதாவுக்கும் பல நல்ல பாடல்கள் கிட்டின. “நீ இல்லாத போது” பாடலைக் கேட்கும் போது ஒரு அனுபவப்பட்ட பாடகி போல இணைந்து பாடும் மலேசியா வாசுதேவனுக்கு ஈடு கொடுத்துப் பாடியிருக்கிறார். இதைப் பாடிய போது அவருக்கு வயது பதினேழு. இந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்து கே.ஜே.ஜேசுதாஸுடன் வீரசிங்கம் மண்டபத்தில் பாடகியாகவும் மேடையேறினார்.
மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி என்ன சொல்ல... இந்த மாதிரியான பாடலைக் கேட்கும் போதே “அலங்காரப் பொன்னூஞ்சலே” (சொன்னது நீ தானா), “நீங்காத எண்ணம் ஒன்று” (விடியும் வரை காத்திரு), “காலங்கள் மழைக்காலங்கள்” (இதயத்தில் ஒரு இடம்) என்று வரிசை கட்டி வந்து விடும் இவர் நினைப்போடு.
இந்த மாதிரி சாந்தமான பாவத்தோடு பாடும் பாடல்களில் வெகு அடக்கமாக, உணர்ச்சிப் பெருக்கோடு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடுவதைக் கேட்பவர்களும் உணரக் கூடிய அளவுக்குக் கரைந்து பாடுவார்.
“எது வரையில் சுகமென அதை நான் காண்பேன்” என்று பயணிக்கும் இடங்களில் எல்லாம் மலேசியா முத்திரை இருக்கும்.
“நீ.....இல்லாத போது....ஏங்கும் நெஞ்சம்....” இப்படியானதொரு நீட்சியானதொரு சங்கதியைப் போட்டு பல்லவியிலேயே கேட்போரைக் கட்டிப் போடும் வித்தைக்கார ராஜாவின் இசையில் தவிர்க்கக் கூடாத பாட்டு இது. அந்தக் காலத்தில் தானே இயக்காமல் கதை, வசனம் என்று பாக்யராஜ் பங்களித்த படங்களில் ஒன்று இந்தப் பாட்டு இடம்பெற்ற “இளமை கோலம்”. இந்தப் பாடத்தில் “வச்ச பார்வை தீராதடி”, “ஶ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா” போன்ற தேனான பாட்டுகளும் உண்டு. பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள். “நீ இல்லாத போது” பாடலை கங்கை அமரன் யாத்திருக்கிறார்.
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு..
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம்
உறவினில் நறுமணம்
ஒன்றாக வழி கூறு....
https://www.youtube.com/watch?v=-B1TVacqXdI
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடகி சுஜாதாவுக்கு
கானா பிரபா
0 comments:
Post a Comment