இசையமைப்பாளர் காண்டீபன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற அதிர்ச்சியான தகவலை இன்று காலை பாபு அண்ணா வழியாக அறிந்து வேதனை கொள்கிறேன்.
காண்டீபன் அவர்கள் குறித்து முன்னர் நான் எழுதிய இடுகை.
"இரவுகளை உறங்க வைக்கவே தாலாட்டு
கனவுகளைத் தொடங்கி வைக்கவே"
வானொலிகளாலேயே பிரபலப்படுத்தப்பட்டு மனசில் நிலைத்து நிற்கும் பாடல்களில், அதன் படமோ இசையமைப்பாளரோ அறிமுகமில்லாதிருப்பவையும் அடங்கும். அதில் ஒன்று தான் இந்த இரவுகளை உறங்க வைக்கவே தாலாட்டு பாடலும். இன்றும் கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு நேர நிகழ்ச்சிகளின் நிலையக் குறியிசையாக இந்தப் பாட்டின் ஆரம்ப வரிகள் பயன்படுத்தப்படுகின்றன. "சித்திரமே நீ சொல்லடி" என்ற திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலும்
சொர்ணலதா பாடிய பாடலுமாக இரண்டு வடிவங்கள் உள்ளன. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் விஜய காண்டீபன்.
விஜய காண்டீபன் என்ற பெயரைக் கேட்டதும் இன்னொரு இசையமைப்பாளர் காண்டீபனும் நினைவுக்கு வருகிறார். அல்லது அவரே தான் பெயரை மாற்றியிருக்கக் கூடும். அந்த மற்றைய காண்டீபன் ஈழத்தில் பிறந்து "காவலுக்குக் கண்ணில்லை" என்ற ஆனந்த்பாபு நடித்த படத்தின் இசையமைப்பாளர் ஆனார். அவர் ஈழத்தவர் என்ற விபரம் தெரியாத சந்தர்ப்பத்தில் காவலுக்குக் கண்ணில்லை படத்தில் வரும் "பிகரு பிகரு" பாடலைக் கேட்ட போது ஏ.ஈ.மனோகரன் மீளப் பாடிய சிங்கள & தமிழ்ப் பாடலான "கிக்கிரி பலன" https://youtu.be/VL9fCV5Qb8U பாடலின் அப்பட்டமான சாயல் அடித்தது. மூலப் பாடலைப் பாடியவத் சிங்களத்தின் புகழ்பூத்த பாடகர் எம்.எஸ்.பெர்னாண்டோ அவர்கள். ஏ.ஈ.மனோகரன் சிட்னி வந்த போது இந்த ஒப்பீடை நான் வானொலிப் பேட்டியில் கேட்ட போது தான் காண்டீபனின் பின்னணியைச் சொன்னார்.
காவலுக்குக் கண்ணில்லை படத்தின் பாடல்கள்
தாயின் மடி தேடி
https://www.youtube.com/watch?v=0aWp_JdY1iA
ஓ அன்பே
https://www.youtube.com/watch?v=vDZ3sHh2kCM
பிகரு பிகரு
https://www.youtube.com/watch?v=bGFD0ikaIS8
தொடர்ந்து பாபு அண்ணா Babu Jayakanthan பகிர்ந்த குறிப்புகள்
இலங்கை வட மாகாணம் தென்மராட்சி நுணாவில் சாவச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர், இசையமைப்பாளர் கணபதிப்பிள்ளை சுதாகரன் என்ற “காண்டீபன்”. இவர் சென்னையில் 90 பகுதிகளில் SPB, சித்ரா, சுஜாதா, சொர்ணலதா போன்ற முன்னணி பாடகர்களை வைத்து தென்னிந்திய திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர். பிரித்தானியாவில் பல தென்மராட்சி நிகழ்வுகளுக்கு முன்னினின்று உதவி, தனது புற்று நோய் நோய் வாய்ப்பட்டு சொந்த ஊரில சிறிது காலம் வாழ்ந்து இனிதே இயற்கை எய்தினார்.
காவலுக்கு கண்ணில்லை திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான என் நீண்ட நாள் இசை நண்பன் (காண்டீபன்) Sutha . இலங்கை வந்த போது இவரின் இசையில் 20 பாடல்களுக்கு மேல் வாசித்து பணி புரிந்த காலம் நீங்காத நினைவுகள் கடந்த வாரம் வரை தொடர்பில் இருந்தார் .நேற்று முன்தினம் இவ்வுலகை விட்டு போவார் என நினைத்திருக்கவில்லை .இன்னும் சாதிக்க வேண்டும் என்ற கனவு அவரிடம் பேசும் போது அறிந்து கொண்டேன். என் Pop பாடல்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும். அன்பு நண்பனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவர் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் இது.
கானா பிரபா
22.03.2022
1 comments:
உங்களது சுயவிபரத்தில் வைக்கப்பட்டுள்ள வாசகம் சுடுகின்றது..
Post a Comment