Pages

Sunday, March 13, 2022

ஞான ஒளி 50

கிண்ணென்ற அந்த அந்தத் தேவாலயத்து மணியோசையே ஒலிப்பது போலோரு பிரமை. தேவாலயத்து மணியடிக்கும் ஆன்டனி என்ற (அன்பால்) தோற்றுப் போனவன் கதை ஒரு அனுதாப அலையை நம் நெஞ்சில் எழுப்புகின்றது. 

ஞான ஒளி படம் வந்து இந்த வாரத்தோடு 50 ஆண்டுகள் நிறைவுறுகின்றது (11.03.1972). தமிழ்த் திரை வரலாற்றில் தவிர்க்க முடியாத சித்திரங்களில் ஒன்று. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்னொரு திலகமாக அமைந்தது. 

கண்மூடித்தனமான அன்பு, கண்முடித்தனமான கோபம் இரண்டும் கலந்த கலவையாக அந்த முரட்டு அன்டனியாக வாழ்ந்திருக்கிறார்.

தன்னை வளர்த்த பாதிரியாரின் இறுதி நாளில் கரைந்து உடைந்து போய், அவரின் கையை வாங்கி அழதுகொண்டே விரல் சொடக்குப் போட்டுக் கொண்டு அவரின் கையைப் பற்றிக் கொஞ்சி அழும் போது நம்மையும் கண் நனைக்க வைத்து விடுவார். சிவாஜி என்ற பட்டை தீட்டிய வைரம் அப்படியே இந்தப் படத்தில் புத்தம் புதுத் தோற்றம் பெறுகிறார். படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியது. இந்தக் காலத்தில் எல்லாம் நடிக்க வருபவர்களுக்கு முன்னோடியாகப் பலர் இருக்கிறார்கள், அல்லது யதார்த்த சினிமாவில் அப்படியே வாழ்ந்து விட்டுப் போகலாம். ஆனால் சிவாஜி என்ற அந்த உன்னதம் ஒரு சுயம்புவாக ஒவ்வொரு படைப்பிலும் தன்னைக் கூடு விட்டுக் கூடு பாய்கிறாரே என்ற ஆச்சரியம் மேலோங்கியது.

இடைவேளைக்குப் பிறகு “அருண்” என்ற தொழிலதிபராகக் கூடு விட்டுக் கூடு பாய்வாரே அடடா என்னவொரு கம்பீரமும், மிடுக்கும்.

“Catch Me If You Can” ஆடு புலி ஆட்டம் அல்ல, புலியும் புலியும் ஆட்டம், இங்கேயும் சிவாஜியின் பால்ய நட்பு மேஜர் எதிர்த் துருவமாக. உயர்ந்த மனிதனில் சிவாஜியின் மனச்சாட்சியை இறுதியில் அசைத்துப் பார்க்கும் கூடிய நட்பு அல்ல, இங்கே இறுதியில் சிவாஜியின் மனச்சாட்சியின் ஆழம் கண்டு உருகிக் கரைந்து விடும் லாரன்ஸ் என்ற போலீஸ் அதிகாரியாக மேஜர் சுந்தரராஜன். இருவருக்குமிடையிலான அந்தக் கண்டுபிடி ஆட்டம் வெகு சுவாரஸ்யமாக நகர்த்தப்பட்டிருக்கும். ஆனால் கடைசியில் பாசத்தால் சிவாஜியை வீழ்த்த வேண்டும் என்ற பாரம்பரியத்தில் கொஞ்சம் நாடகத் தனம் தலைதூக்கி விடும்.

புகழ்பூத்த பிரெஞ்சுப் படைப்பாளி விக்டர் ஹியூகோவின் “Les Misérables” கதையின் அடிநாதம் “ஏழை படும் பாடு” என்றும் பின்னர் மேஜரின் “ஞான ஒளி” நாடகமாகவும், படமாக மாறிய கதையும் சொல்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் இங்கே

https://www.youtube.com/watch?v=35aZ-QjHGC4

வியட்நாம் வீடு படத்துக்குப் பின் தன் கதையில் சிவாஜிக்கு “ஞான ஒளி” என்ற அற்புதமான படைப்பைக் கொடுத்த கதாசிரியர் வியட்நாம் வீடு சுந்தரம் தொடர்ந்து “கெளரவம்” கொடுத்துச் சிறப்பித்தது போல, எழுபதுகளில் சிவாஜியின் நடிப்பாற்றலுக்குத் தீனி போட்ட படங்களைத் தொடர்ந்து இயக்கிய பி.மாதவன் இயக்கிய படம்.

 பின்னாளில் வந்த தங்கப்பதக்கம் போலே கெட்ட ஜீவனாக ஶ்ரீகாந்த். “ஊர்வசி” சாரதாவுக்குத் தன் தந்தையை இனம் கண்டு ஏற்றுக் கொள்ள முடியாத பரிதவிப்பில் அதுவரை கொட்டியிராத நடிப்பை அள்ளிக் கொட்டுகிறார். 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இந்த மாதிரிப் படைப்பெல்லாம் எழுதி வைத்தது போலோரு பாக்கியம். துணைக்குக் கவியரசர் வேறு.

“தேவனே என்னைப் பாருங்கள்” பாடலெல்லாம் திரையிசை கடந்தும் தத்துவப் பாடலாக பலர் முணுமுணுப்பதைக் கண்டிருக்கிறேன்.

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பே 

“மணமேடை......

மலர்களுடன் தீபம்...”

பாடலோடே பலகாலம் வாழ்ந்திருந்தேன். அந்தப் பாடலைக் கேட்டாலும் உடம்பு முழுக்க மணியோசை அதிர்வு.

அந்தத் தேவாலயத்து மணியோசை ணங் என்று ஒலித்துப் பின் அது அப்படியே பின் இசையாகப் பரவித் தூய காதலைத் தன் தலையாட்டி ஆமோதிக்கிறதோ...

தன் மாசற்ற காதலுக்காக அவனிடம் தன்னை ஒப்படைக்கும் போது எழும் வரிகளில் ஒருதலையாய்க் காதல் விளையும் பாங்கைக் கவியரசர் காட்டியிருப்பார். அந்தப் பாடலுக்குப் பின்னால் தொடரும் விபரீதத்தைப் பார்த்த பின் பாடலை மீண்டும் இரை மீட்டினால் அது துலங்கும்.

“உயர்ந்த மனிதன்” போலே பி.சுசீலாம்மாவுக்கு இன்னொரு ஒளிரும் வைரமிது.

நான் இரவில் எரியும் விளக்கு

நீ என் காதல் மணி மாளிகை

நீ பகலில் தெரியும் நிலவு

நான் உன் கோவில் பூந்தோரணம்

மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

மண மேடை மலர்களுடன் தீபம்

மங்கையர் கூட்டம் மணக் கோலம்

https://www.youtube.com/watch?v=cfUedZ9DCjs

தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டே நொந்து போனவனுக்குக் கையில் ஏந்த ஒரு “ஞான ஒளி” அது அவனின் அந்திம காலத்தில் தான் கொண்ட கடமைகளைச் செய்ய வைத்துக் கூடவே தன் குடும்ப பந்தத்தை இணைத்தும் அழகு பார்க்கிறது.


கானா பிரபா




0 comments: