Pages

Saturday, March 12, 2022

ஸ்ரேயா கோஷல் ♥️

திருமண போதை அது தரும் அந்தக் கிறக்கம் சொல்லி மாளாது. ஒரு பக்கம் தன்னையே முன்னுறுத்தி திருமணக் கொண்டாட்டத்தின் பெருங்கூட்டம் கொண்டாடி மகிழந்த அந்த போதையும், தன் வாழ்வின் அடுத்த கட்டத்தை முகிழ்ப்போடு இதழ் விரியும் பூவாய் மனம் கொள்ளாச் சந்தோஷத்தோடு ஏற்றுக் கிறங்கி நிற்கும் போதையுமாக இரட்டை போதை மயக்கத்தில் ஓய்ந்த கொண்டாட்டத்தில் அமைதியின் இடுக்கில், கட்டிலில் அப்படியே  சாய்ந்து கண் மூடிக் கிறங்கினால் எழும் சங்கீதம் எப்படியிருக்குமோ அப்படியொன்று.

குண்டுமல்லி குண்டுமல்லி.....

தென்றல் காத்து அடிச்சதும்

கண்ணு தெறக்குது

கண்ணன் கண்ணு பட

தேனு சொரக்குது

கையில் நீயெடுத்து.....மெல்ல

தோளில் மாலை காட்டு ❤️

மணப்பெண்ணின் அந்த மயக்கக் கிறக்கத்தோடே ஸ்ரேயா கோஷலின் குரலும் போதையோடு தள்ளாடும். கூடவே தோள் கொடுக்கும் ஹரிஷ் ராகவேந்திரா Harish Sai Raghavendra இன்னோர் அந்தத்தில் பறந்து விட்டு மீண்டும் தோள் கொடுப்பார். பாடல் ஓயும் தறுவாயிலில் இருவரின் அலைவரிசையும் ஒருமித்துக் கூடிக் களிக்கும்.

கூடையில் இருக்கும் பூக்குவியலை அப்படியே உயரத்தில் இருந்து உலுக்கிக் கொட்டுமாற் போலக் கற்பனை செய்வேன் இந்தப் பாடலின் இடையிசை கலக்கும் தருணம். 

"குண்டு மல்லி குண்டு மல்லி" என்று இன்ப போதை தலைக்கேறியது போல ஒரு வித கிறக்கத்துடன் ஷ்ரேயா  கோசல்  பாட ஆரம்பிக்கும் போதே பச்சைத் தமிழச்சியின் வெட்கம் கலந்த குரலாகக் கொண்டாடுகிறது மனது. 

மஞ்சள் எல்லாம் வானத்திலே.....

அந்தியிலே ஒட்டிக்கிச்சு

குங்குமமும் சேந்துக்கிச்சு

தாங்கிடுமோ பிஞ்சுநெஞ்சு.....

நான்கு தசாப்தங்களில் ஒவ்வொரு தசாப்தமாகப் பிரித்துப் பார்த்தால் வித விதமான வடிவங்களில் தாம்பத்தியத்தைக் கொண்டாடும் இசையைக் கொடுத்திருப்பார் நம் இசைஞானியார்.  அந்த வகையில் மிலேனியத்தின் ஆகச் சிறந்த வரவு இது.

பாடலாசிரியராக இசைஞானி இளையராஜாவைக் கொண்டாடக் கூடிய பாடல்களில் இந்தப் பாடலை எல்லாம் முதல் வரிசையில் வைத்துப் போற்றுவேன்.

புது மணத் தம்பதிகளின் காதல் மொழிகளை அதே இளமை தப்பாது வரிகளைப் பொருத்தி எழுதிய பாடலாசிரியர் இளையராஜாவுக்கு இதை எழுதும் போது வயது 59. பாடிய ஸ்ரேயா கோஷலுக்கோ 18 வயதே தான்.

அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்

வீணை நரம்பினிலே ஹோ....

நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளிவந்து தொடும்

எந்தன் நரம்பினிலே ஓ.....

ஷ்ரேயா கோசல் குரலில் இலேசான அப்பாவித்தனம் தொனிக்க, ஹரிஷ் ராகவேந்திராவோ இரு கையை வீசி காற்றை அளையும் சுதந்திரத்தோடு பயணிப்பர் இந்த பாட்டில்.

பாடலைப் பிரித்து விட்டு இசையை மட்டும் கற்பனையில் ஓட்டினால் என்னவொரு துள்ளிக் குதிக்கும் ஆர்ப்பரிப்பு.

பாடல் வரிகளை மட்டும் பதியம் வைத்தால் மெது நடை கட்டி நிதானமாகப் பயணிக்கும்.

இவ்விரு தாள லயமும் சேர்ந்த அற்புதமான கூட்டுப் படையல்.

பாடலுக்குக் கொடுத்திருக்கும் இசை இளையராஜாவும் இயக்குநர் சத்யன் அந்திக்காடுவும் 2000 க்குப் பின் கூட்டணி கட்டி வெளி வந்த மலையாளப் படங்களின் இன்னிசையின் பிரதி பிம்பம் இது.

சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில்

இந்த வெட்கம் தெரிகிறதே ஹோஓஓஓ

சிற்பி செய்த அந்தச் செல்லப் பெண்ணுக்கு

அவன் எண்ணம் புரிகிறதே ஓஓஓ.....

2012 ஆம் ஆண்டில் ஒரு நாள் Zee TV இன் பாலிவூட் படங்களின் விருது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையிடையே தங்களின் பிரபல்யமான நிகழ்ச்சிகளின் படத்துண்டுகளைக் காட்டிக் கொண்டு வந்தார்கள், அப்படி வந்தது தான் "சரிகமப" என்ற இசை நிகழ்ச்சி குறித்த ஒரு சில நிமிடத்துளிகள் கொண்ட காட்சித்துண்டு. அதில் சின்னஞ்சிறுமியாக கலந்து கொண்ட ஷ்ரேயா கொசலைக் காட்டியபோது இந்தப் 20 வருட காலத்தில் அவரின் நதிமூலம் எப்படித் தொடங்கியது என்பதைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இன்றைக்குப் பாட்டுப் போட்டி நடத்தாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம், எல்லோருக்கும் பாடி நம்மைப் படுத்த ஆசை இருக்கின்றது. அதற்கான களம் கூடக் கட்டற்று ஏன் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. 

ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட திரையிசையில் பாடகிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழில் கூட சுவர்ணலதாவுக்குப் பின் சின்மயியை ஓரளவு சொல்லி வைப்பதோடு சரி. மற்றோர் எல்லாம் கூட்டத்தில் கும்மாளம் என்ற நிலை தான். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து தன்னை நிலை நாட்டிப் பின்னர் ஹிந்தி தவிர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் சொல்வாக்குக் கொண்டிருக்கும் பாடகி என்ற பெருமையை ஷ்ரேயா கொசல் பெற்றிருக்கின்றார். இது இன்றைய கூட்டத்தில் கோவிந்தா என்ற சூழலில் அவ்வளவு சுலபமான விஷயமல்ல. தனித்துவமான திறமை ஒன்றே அவரின் மூலதனம், அதிலும் எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஷ்ரேயாவினுடைய குரல். இந்த அந்நியமற்ற மொழி கடந்த குரல் மொழியை வடநாட்டுச் சகோதரிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்லே கூடப் பெற்றிருக்கவில்லை.

சஞ்சய் லீலா பான்சாலியின் "தேவதாஸ்" என்ற ஹிந்திப் படம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிட்னித் திரையரங்கில் காண்பிக்கப்பட்டபோது அந்தப் படம் தரப்போகும் பிரமாண்ட்டத்துக்காக மட்டுமே தியேட்டருக்குச் சென்றேன். ஆனால் கட்டிப்போட்டது இஸ்மாயில் தர்பாரின் இசை. அதில் தான் தொடங்கியது ஷ்ரேயா கொசலின் இசைப்பயணம். எடுத்த எடுப்பிலேயே அந்த முதற்படத்தில் தேசிய விருது வேறு. 

ஆனால் அவ்வளவு சீக்கிரம் தமிழுக்கு இந்தப் பாடகி வருகின்றார் என்று நினைக்கவேயில்லை, வந்தார் இங்கும் முத்திரை பதித்தார்.

ஆல்பம் படத்தில் "செல்லமே செல்லம்" என்று ஆரம்பித்து வைத்தது கார்த்திக் ராஜாவின் இசையில் முதலடி. ஸ்ரேயா கோஷல் ஹிந்தியில் அறிமுகமான அதே ஆண்டிலேயே தமிழுக்கும் வந்து 20 ஆண்டுகளாகக் கோலோச்சிக் கொண்டிருக்க அச்சாரம் இது.

 "எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப் பிடிக்குமே" ஜீலி கணபதி படப் பாடலில் உருகிய ஷ்ரேயா கொஷலின் குரல் உருக்கியது எம்மை. ஆனால் அந்தப் பாடலை ஒரு சொதப்பல் காட்சியமைப்பு மேல் இன்றளவும் கோபமுண்டு. இசைஞானி இளையராஜா, ஷ்ரேயா கொஷலுக்கு வள்ளலாக மாறிப் பாடல்களை அள்ளிக்கொடுக்க முன்னோடியாக அமைந்து விட்டது இந்தப்பாட்டு.

https://www.youtube.com/watch?v=lY4NDcECw-0

"இளங்காற்று வீசுதே" பாடல் ஶ்ரீராம் பார்த்தசாரதியின் தனிப்பாடலாகவும் இருக்கிறது, ஷ்ரேயா கொஷலோடு ஜோடி கட்டிய பாடலாகவும் இருக்கிறது. இரண்டையும் ஒருதடவை சுழல விட்டுப் பின் எடை போட்டுப்பாருங்கள் ஷ்ரேயா கொஷலின் அந்தக் கொஞ்சும் குரல் பாடலுக்குக் கொடுத்திருக்கும் வலிமையை. ஊனினை உருக்கிப் பார்க்கின்றது பாடல்.

https://youtu.be/PmKzSECplgI

"ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை" சரணாகதி கொண்டு பாடும் அந்தத் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தின் வெள்ளாந்திக்குரலுக்குப் பின் பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்த வடநாட்டுக் குரல் உருக்கொண்டிருப்பதை யாரும் நம்ம முடியுமா?

http://www.youtube.com/watch?v=pQa4aoI-guE&sns=em

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மலையாளிகள் இந்த விஷயத்தில் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனானப்பட்ட இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் நவீன் பாடிய மலையாளப்பாடலில் ஒலிச்சுத்தம் தேடிக் கிழித்துக் காயப்போட்டவர்கள். அப்படியிருக்க அங்கும் ஷ்ரேயா கொஷல் சென்று மயக்கினார் தன் குரலால்.

மலையாள சினிமாவின் இன்றைய இசையரசர் ஜெயச்சந்திரன் இசையில் பனாரஸ் படத்தில் பாடும் "சாந்து தொட்டில்லே"

பாடலில் அவர் கொடுக்கும் குரலின் ஜாலத்தில் கிறங்கி விருதுகள் கொடுக்குமளவுக்குப் போய்விட்டார்கள். "பிரியனொராள் இன்னு வன்னுவோ" என்று தொடங்கும் அந்த ஏக்கம் தொனிக்கும் குரல் எப்படியெல்லாம் போகிறது என்று கேளுங்களேன்.

https://www.youtube.com/watch?v=Q9gUU3TDiCQ

ஷ்ரேயா கொஷல் இந்த ஆண்டோடு தன் கலைத்துறையில் 19 ஆண்டுகளைத் தொடுகின்றார். இந்தப் பத்தாண்டுகளில் இஸ்மாயில் தர்பார் கொண்டு, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் என்று எல்லா இசையமைப்பாளர்களிடம் இருந்தும் இவருக்குக் கிடைத்த பாடல்கள் மணிமுத்துக்கள். தொடரட்டும் அவரின் கலைப்பயணம். 

தனது கலைப்பயணத்தில் 20 ஆண்டு நிறைவில் மிதக்கும்

ஷ்ரேயா கொஷலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ♥️🎸

மேகப் பெண்ணே

வந்து மூடிக் கொள்ளு 💚

பாடலை இன்று முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். குண்டுமல்லியை நுகர்ந்து நுகர்ந்து பார்த்துக் கிறங்குமாற் போல 

https://www.youtube.com/watch?v=3q26lV9E47U

கானா பிரபா


0 comments: