Pages

Thursday, March 24, 2022

மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை ❤️

நேற்று முன்தினம் நித்திரைக்குப் போகும் முன் ஒரு பாடலின் சரணத்தில் ஒரு பகுதியை நினைப்பூட்டிக் கொண்டிருந்தது.

அது இதுதான்,

“பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

அண்ணனன்றி யாருமுண்டோ

பின்னும் ஒரு சொந்தமுண்டோ.....”

அப்படியே ஒரு இந்துஸ்தானி இசை விரிப்பில் மூழ்கிப் போனது மனசு. அதுவும் அப்படியே கொண்டு போய்

“அதன் பேர் பாசமொன்றோ” 

என்று எஸ்பிபி கொடுக்கும் போது என்னவொரு அழகானதொரு அமர்வு. 

அண்ணன் ஒரு கோவில் என்றால்

https://www.youtube.com/watch?v=2ibGFOOI2xM

இசைஞானி இளையராஜா வின் புதுவெள்ளம் இசைவெள்ளமாகப் பரவிய அந்த யுகத்திலும் வற்றாத ஊற்றாய் மெல்லிசை மன்னரின் பாடல்கள் இருந்தன என்பதற்கு “அண்ணன் ஒரு கோவில்” படமும் மாற்றுக் குறையாத தங்கம் எனலாம்.

“அண்ணன் ஒரு கோவில்” படத்தின் கன்னட மூலம் “தேவரக் கண்ணு” படத்திலும் இதே எஸ்பிபியும்,  பி.சுசீலாவும் “அண்ணன் ஒரு கோயில் என்றால்” பாடல் போனவே தனித்த பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இசை T.G.லிங்கப்பா. இன்றும் கன்னடர்கள் போற்றிக் கொண்டாடும் சங்கீதமாக அந்த

“Ninna Neenu Maretharenu”

https://www.youtube.com/watch?v=__jBBtL32Fk

பாடல் விளங்குவதை யூடியூபில் உருகிக் காதலிக்கும் பின்னூட்டங்கள் வழி உறுதிப்படுத்திக் கொண்டேன். 

அதுவே மலையாளத்தில் “எல்லாம் நினைக்கு வேண்டி” என்று போன போது தட்சணாமூர்த்தி ஸ்வாமிகளின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸும், வாணி ஜெயராமுமாகப் பாடியிருக்கிறார்கள் இந்த அண்ணன், தங்கைப் பாடலை அவ்விதம் தனித்தனியாக.

நேற்று முதல் வேலையாக, வேலை முடிந்ததும் செய்த காரியம் “அண்ணன் ஒரு கோவில்” படத்தைப் பார்த்தது தான். சின்ன வயசில் எங்களூர் வாசிகசாலையில் “படக்காட்சி” என்று ஆள் நிரப்பி ஐம்பது சதத்துக்கோ, ஒரு ரூபாவுக்கோ தொலைக்காட்சி, டெக் சகிதம் படம் பார்த்த அந்தப் புதினத்தில் “அண்ணன் ஒரு கோவில்” ஒன்று. 

அந்த நேரம் “நாலு பக்கம் வேடருண்டு” பாடல் தான் புதுமையாக இருந்தது.

ஆனால் இலங்கை வானொலி பொங்கும் பூம்புனலாய் அதிகம் பிரபலப்படுத்தியது “மல்லிகை முல்லை” பாடலைத்தான்.

பல்லவியில் இரண்டே அடுக்குகளில் 

“மல்லிகை முல்லை

பொன்மொழி கிள்ளை” 

தொடங்கிவிட்டு ஒரு காரியம் செய்வார் கவியரசர் கண்ணதாசன்.

முதல் சரணத்தில் வைணவத்தையும், இரண்டாவது சரணத்தில் சைவத்தையும் அடையாளப்படுத்துவார் தன் உவமையில்.

எப்படி?

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம்” ஆண்டாளைக் கொண்டு வந்து

“சூடிக் கொடுத்தாள்

பாவை படித்தாள்

சுடராக எந்நாளும்

தமிழ் வானில் ஜொலித்தாள்

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்”

என்று ஆண்டாளின் திருப்பாவை ஈறாக உள்ளடக்கி ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று உவமைக் கலப்பு வைத்து விடுவார்.

அப்படியே அடுத்த சரணத்துக்குப் போய்

“தோகை மீனாள்

பூவை ஆனாள்

சொக்கேசன் துணையோடு

ஊர்கோலம் போனாள்”

மீனாட்சி, சொக்கநாதர் பந்தத்தைக் காட்டி மதங்கள் கூடும் ஒரு சித்திரைத் திருவிழாவாக்கிவிடுவார் கவியரசர்.

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி"என்ற ஆண்டாள் பாசுரத்தோடே பி.சுசீலாம்மாவின் குரலோடு சிவாஜியின் தங்கை சுமித்திரா படத்தில் அறிமுகமாகுவார்.

இன்று பிறந்த நாட் காணும் பாட்டுத் திலகம் T.M.செளந்தராஜன் அவர்கள் நடிகர் திலகத்துக்குக் கொடுத்த பொக்கிஷப் பாடல்களில் தவிர்க்க முடியாததொன்று

மல்லிகை முல்லை

பொன் மொழி கிள்ளை

அன்புக்கோர் எல்லை

உன்னைப் போல் இல்லை

பொன் வண்ண ரதம் ஏறி

இம் மண்ணில் எங்கும் ஓடி

பொன் வண்ண ரதம் ஏறி

இம் மண்ணில் எங்கும் ஓடி

நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்

https://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos

கானா பிரபா

0 comments: