ஒரு படைப்பு வழக்கமான திரைப் பரிமாணத்தை விட்டு விலகி அமைந்து விட்டால் இசைஞானியும் தன் பங்குக்கு அதற்கு ஏதாவது சீர் செய்ய வேண்டும் என்று அவா கொள்வார் போல.
அதனால் தான் “என் ராசாவின் மனசிலே” படத்தில் “குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே” https://www.youtube.com/watch?v=JL_LoEqEkLs பாடலின் மெது வேக வடிவத்தைப் படத்தின் எழுத்தோட்டத்திலேயே பொருத்தி அழகு பார்த்தார். வெளிவந்த சூழலில் படத்தைப் பார்த்து முடித்த பின்னர் அந்த ஆரம்பப் பாடல் தான் கனதியாக நெஞ்சில் அமர்ந்து கொண்டது. அப்போது ராஜ்கிரண் பேட்டியில் கூட இந்தப் பாடல் ராஜாவே விரும்பிக் கொடுத்த பாடல் என்றே சொல்லியும் இருந்தார்.
“ஒரு காவியம் அரங்கேறும் நேரம்”
https://www.youtube.com/watch?v=tIkw3vOAkMc
அப்படியொரு தன்மை கொண்ட பாட்டு. ஆனால் துரதிஷ்டவசமாகக் காட்சி வடிவம் கொணராத பாடல்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
அறுவடை நாள் படத்தைப் பார்த்து முடித்து விட்டு மனச்சாட்சி உள்ளவர்கள் இந்தப் பாடலை முகப்பில் வந்த “தேவனின் கோயில் மூடிய நேரம்” பாடலுக்குப் பதிலாகப் பொருத்திப் பார்த்தால் அந்தப் படத்தின் காவியத்தனத்தை அழகூட்டிக் காட்டியிருக்கும்.
“தேவனின் கோயில் மூடிய நேரம்” பாடல் அதி உச்சம் கொண்ட பாட்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தப் பாடல் வர வேண்டிய சூழல் ஆரம்பக் காட்சி அல்ல.
“அறுவடை நாள்” படத்தை முதலில் சிவாஜி கணேசனுக்குப் போட்டுக் காட்டிய பின்னர் நடிகர் திலகம் சொன்னாராம்.
“படம் ஓகே மீதியை வந்து சாமியார் பார்த்துக்குவார்” என்று.
(சாய் வித் சித்ராவில் இயக்குநர் ராஜ்கபூர்)
அதுதான் இளையராஜா, அதே தான் அவர் மற்றவர்களிடமிருந்து அந்நியப்பட்டு படைப்பு ரீதியாக ஆத்மார்த்தமாக எவ்வளவு உச்சம் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்கும் கிணறு. கிராமத்தாரிடம் கேட்டுப் பாருங்கள் கலக்கிக் கலக்கி இறைக்க இறைக்கத்தான் ஊற்றெடுக்கும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு எமது ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கு மேலாகச் சிந்தனையில் ஞான வெள்ளம் ஊற்றெடுக்கும்.
ஒற்றை மிருதங்க நாதம் ஓசையடங்கிப் போக, அப்படியே கூட்டுக்குரல்கள் சங்கமித்து ராஜாவை அழைப்பார்கள். அவர் கதை சொல்ல ஆரம்பிப்பார்.
“ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
மழை தூவுதே இதமாகுதே
மழை தூவுதே இதமாகுதே
ஒரு காவியம்....”
அவர் சொல்லச் சொல்லக் கூட்டுக் குரல்களும் இடம் விட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
“காதல் எனும் யாகம் காணுகின்ற யோகம்
காட்டு நதி வேகம் காதல் மனம் போகும்”
அதற்கு மேல் தங்கள் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜாவுக்கு அமைதியான ஆர்ப்பரிப்பை நிகழ்த்துவார்கள்.
பின்னர் இரண்டாவது சரணத்தில் மிதக்கும் போதுதான் சுதந்திரமாகத் தம் உணர்வைக் கூட்டாக வெளிப்படுத்துவார்கள் அந்தக் கூட்டுக் குரல்கள்.
கங்கை அமரனும் தன் அண்ணனுக்கு வரிகளால் தோள் கொடுத்திருப்பார்.
இந்தப் பாடல் பின்னப்பட்டிருக்கும் வாத்தியங்களை எண்ணிப் பாருங்கள். கை கொள்ளும் அளவில் தான் இருக்கும். ஆனால் ஒரு நூறு கூட்டம் இசைக் கூட்டுகள் தராத ஒரு தாக்கத்தை விளைவித்துக் கொண்டிருப்பார்கள் அந்த ஒரு சில. அந்த ஆரம்ப மிருதங்க ஓசை கரைதல் வழக்கமாகப் பாடல் முடியும் முத்தாய்ப்பாக அமைவது. ஆனால் அதையே தொடக்கமாக வைத்துக் கொண்டு ஒரு கட்டுடைத்தலை நிகழ்த்தியிருப்பார்.
அந்த வீணை நட்டுவாங்கம் கொடுக்க, மிருதங்கம் சின்னதாய் பரதம் ஆடி விட்டுப் போகும்.
புல்லாங்குழல் ராஜாவின் உணர்வின் பரிபாஷையாய் விளங்கும்.
மனம் சஞ்சலப்பட்டிருக்கும் போது இந்தப் பாடலைப் போட்டு விட்டுக் கண்ணை மூடிக் கொண்டால் அப்படியே விக்ஸ் தடவும் சுகம்.
ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று
நாளும் விலகாமல் கூடும் சுகம் இன்று
சேர்ந்ததே நன்று..
ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
மழை தூவுதே இதமாகுதே
https://www.youtube.com/watch?v=tIkw3vOAkMc
படத்தில் வராத பாடலைக் காட்சித் தொகுப்போடு ஒரு அன்பர் கொடுத்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=t2FHhgIgN_Q
கானா பிரபா
0 comments:
Post a Comment