Pages

Wednesday, May 16, 2007

நீங்கள் கேட்டவை 5


வணக்கம் நண்பர்களே

ஒரு வார கால ஓய்விற்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்டவை தொடர்கின்றது. இன்றைய நிகழ்ச்சியில் இருந்து என் விருப்பப் பாடலோடு இந்தத் தொகுப்பை வழங்கவிருக்கின்றேன்.

அந்த வகையில் என் விருப்பப்பாடலாக முதலில், பகல் நிலவு திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், பி.சுசீலா குரல்களில் "பூவிலே மேடை நான் போடவா" என்ற பாடல் வருகின்றது. இந்தப்பாடல் என் மனதைக் கவர்வதற்கான காரணம், மனதை வருடிச்செல்லும் மென்மையான கிற்றார் இசை, புல்லாங்குழல் ஆலாபனையோடு சேர்ந்து பயணிக்க, வாத்தியம் விழுங்காத அந்த இசையோடு கலக்கின்றது ஜெயச்சந்திரன் குரல். இவருக்குக் கிடைத்த முத்தான பாடல்களில் இந்தப் பாடலும் விலக்கமுடியாதது. இரண்டே இரண்டு அடிகளை மட்டும் பாடி வசீகரிக்கின்றார் பி.சுசிலா. 2.35 நிமிடமே ஒலிக்கும் இந்தப் பாடல் படத்தில் இன்னும் வெட்டுப்பட்டு வந்ததாக ஞாபகம். பாடல் இசை இளையராஜா என்று சொல்லவும் வேண்டுமா?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சன் டி.வி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியை பாடகர் உன்னிமேனன் தொகுத்து வழங்கியபோது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு பாடலைப் பாடிச் செல்வார். அந்தப் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலும் வந்து உன்னிமேனனின் குரலில் இன்னும் நேசம் கொள்ள வைத்தது. இப்போது சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி தொலைந்து போய் புதிய ராகங்கள் என்ற உப்புமா நிகழ்ச்சி வருவது வேறு கதை.

சரி நண்பர்களே என் விருப்பத்தைப் பற்றிச் சொல்லிவிட்டேன். இதோ இன்றைய நிகழ்ச்சியில் நீங்கள் கேட்ட பாடல்கள்.

உங்கள் தேர்வுப் பாடல் வரிசை:
1. சந்திரவதனா அக்காவின் விருப்பத் தேர்வில் "என்னைத் தாலாட்ட வருவாளா" திரைப்படத்தில் ஹரிஹரன், சுஜாதா பாடிய " என் நெஞ்சில் தூங்கவா"

2. வாசனின் விருப்பப் பாடலாக "கார்த்திகை தீபம்" திரைப்படத்தில் ரி.எம்.செளந்தரராஜன் பாடும் "எண்ணப்பறவை சிறகடித்து", பாடல் இசை ஆர்.சுதர்சனம்

3. சர்வேசன் "மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படத்தில் இருந்து சந்திரபோஸ் இசையில் "மாம்பூவே சிறு மைனாவே" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா குரலில் கேட்டிருக்கின்றார்

4. பொன்ஸ், "சொல்லத்தான் நினைக்கிறேன்" திரைப்படத்தில் இருந்து அதே ஆரம்ப வரிகளில் பாடலைக் கேட்டிருக்கின்றார். பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி

5. ஜி.ராகவன் "நிலவே மலரே" திரைப்படத்தில் பி.சுசீலா பாடும் "மண்ணில் வந்த நிலவே" என்ற இனிமையான பாடலை நிறைவாகக் கேட்டிருக்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

15 comments:

வடுவூர் குமார் said...

பாடல்கள் தாலாட்டுகின்றன.
நன்றி

Chandravathanaa said...

மிகவும் நன்றி கானாபிரபா

G.Ragavan said...

அருமையான பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பான பாடல்.

பூவிலே மேடை நான் போடவா என்ற பாடலே அந்தப் படத்தின் சிறந்த பாடல் என்பேன். ஒரு ஆழமான அன்பின் வெளிப்பாடாக அமைந்த பாடலது. படத்தில் இடம் பெறாதது படத்திற்கே நட்டம். ஜெயச்சந்திரனின் உயிர்ப்பான பாவம் பாடலுக்கு மிகவும் பொருந்துகிறது. இரண்டு வரி பாடக் கொடுத்தாலும் தன்னுடைய இருப்பை அருமையாகவும் அழகாகவும் பதிவு செய்து விடுகிறார் இசையரசி.

ஒரு மென்மையான பாடலை விரும்பிக் கேட்டிருக்கிறார் சந்திரவதனா. அருமையான தேர்வு. வாசனின் தேர்வும் அருமை.

மாம்பூவே சிறு மைனாவே மச்சானின் பச்சைக்கிளி..தொத்திக் கொள்ள தோள் கொடுத்தான்...எனக்கது சுகமாக இருக்குது...ஆகா...அருமையான பாடல். சந்திரபோஸ் ஆரம்பகாலத்தில் இசையமைத்த பாடல். மிகவும் சுகமானது.

காற்றினில் மிதக்கும் புகை போலே...ஒரு மெல்லிய காதல் பாடல் பொன்சின் விருப்பமாக. ஆகா....அருமையான தேர்வு.

அடுத்து என்னுடைய விருப்பப் பாடல். தாலாட்டு. தாலாட்டுப் பாடல் என்றால் இசையரசிதான். பெரும்பாலான சிறப்பான தாலாட்டுப் பாடல்கள் இசையரசியின் குரல்தான். அந்த வகையில் மெல்லிசை மன்னர் இசையில் வந்த இந்தப் பாடல் மிகவும் அருமை. மண்ணில் வந்த நிலவே...என் மடியில் பூத்த மலரே..விழிகளில் கவிநயம்..விரல்களில் அபிநயம்..கண்ணே நீ காட்டு...விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு....ஆகா...ஆகா..கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டேயிருங்க...

கானா பிரபா said...

வடுவூர் குமார்
தேடிக்கொண்டிருக்கும் பாடல் ஏதேனும் இருப்பின் அறியத் தாருங்கள்.

சந்திரவதனா அக்கா,
நீங்கள் கேட்ட பழைய பாடல்கள் பின்னர் வரும்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

வரிசையில எத்தினை பேர் இண்டையான் கணக்கின்படி? பாட்டுக் கேட்ட வரிசைப்படி எங்கையும் ஒரு இடத்தில குறிச்சு வைச்சிருக்கிறீங்களா?

எனக்குக் கேட்கிறதுக்கு இன்னுமொரு பாட்டு இருக்கு.. கோடீஸ்வரன் படமெண்டு நினைக்கிறன்.. பாட்டு மறந்து போச்சு.. ஞாபகம் வந்தா வாறன்.

-------
என்னண்டு இவ்வளவு விவரங்களை விரல்நுனியில வைச்சிருக்கிறீங்க பிரபா? அப்துல் ஹமீட் பக்கத்து வீடோ? :O)
(படிக்கிற காலத்தில இந்த ஞாபகசக்தி நல்லா உதவியிருக்கும் என்ன? ;O) )

கானா பிரபா said...

//G.Ragavan said...
அருமையான பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பான பாடல்.//

வணக்கம் ராகவன்

பாடல்களுக்கு இருக்கக் கூடிய தனிச்சிறப்பைச் சிலாகித்துச் சொல்ல உங்களிடம் தான் பயிற்சியெடுக்க வேண்டும். அருமையான விளக்கம், பாடல்களுக்கு இன்னும் சிறப்புச் சேர்த்து விட்டது. மிக்க நன்றிகள்.

கானா பிரபா said...

//`மழை` ஷ்ரேயா(Shreya) said...
வரிசையில எத்தினை பேர் இண்டையான் கணக்கின்படி? பாட்டுக் கேட்ட வரிசைப்படி எங்கையும் ஒரு இடத்தில குறிச்சு வைச்சிருக்கிறீங்களா? //


வாங்கோ மழை

எங்களுக்கெல்லாம் பாட்டுத் தான் உசிரு. படிப்பெல்லாம் அப்பால தான்.
பாடல்களைக் கேட்கும் சாக்கில் அவற்றோடு தொடர்புடைய சந்தர்ப்பங்களும் ஞாபகத்தில் வந்து ஒட்டிக்கொண்டு விட்டன.

பின்னூட்ட வரிசைப்படியும் உடனே கிடைக்கக் கூடிய வரிசையிலும் பாடல்கள் வந்து விழுகின்றன. உங்கட பாட்டு இதோ வருகிறது.

கோடீஸ்வரன் படத்தில நீங்கள் கேட்க நினைச்ச பாட்டு "தொலைவினிலே வானம் " , ஹரிஹரன் பாடியது அதுவா?

Anonymous said...

மிக்க நன்றி கானா பிரபா.

இதுவரை இப்பாடல் ஆண்குரலிலும் உண்டு என தெரியாது !!

நான் கேட்க நினைத்திருந்தது பெண்குரலில் !!!

ரி! டீ.எம்.சவு குரல் பரவாயில்லை :))


நன்றியுடன்

(சாதகப்பறவை) - வாசன்

Vassan said...

விட்டு போனது :

சந்திரபோஸ் பாடல் நன்றாக உள்ளது. பற்பல வருடங்களாயிற்று, கேட்டு.

நான் பொடியனாய் இருந்த காலத்தில்,வளர்ந்த சீர்காழி நகரில் முடி திருத்தகம் ஒன்றில் அவரை அடிக்கடி கண்டுள்ளேன் - 70 களின் ஆரம்பத்தில். தாடி வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பார்.


சந்திரபோஸின் அம்மா பழங் காலத்தில் பெரிய பாடகி,பெயர் எஸ்.ஆர்.கமலம் என கேள்விப்பட்டதுண்டு.

இவர் மற்றும் இவர் போன்ற எனது தந்தையின் இளமை கால பாடகிகள் பாட்டுகள் கேட்க கிடைக்குமா .?!!

கானா பிரபா said...

வணக்கம் வாசன்

ரி/டி எம்.எஸ் குரலில் வந்த எண்ண பறவை பாடல் நம்மூர் வானொலிகளில் ஏக பிரபலம். பெண்குரலினைப் பின்னர் தருகின்றேன் உங்கள் விருப்பமாக.

இளையராஜாவை நம்மவீட்டுப் பிள்ளையின் சாதனையாக ரசித்த காலத்தில் அடுத்தவீட்டு இசையமைப்பாளர்களையும் நேசிக்காமல் இருந்ததில்லை. கங்கை அமரன், வி.எஸ்.நரசிம்மன், வி.குமார், மரகத மணி, மனோஜ் கியான் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தாயகத்துக்கும் தமிழகத்திற்கும் வரும்போதெல்லாம் சீ.டியில் கிடைக்கமுடியாத அரிய பாடல்களை ஒலிப்பதிவு செய்து பெற்றுக்கொள்வேன்.

தங்கப்புதையல் என்ற தலைப்பில் இந்த அரிய பாடல்களை அவ்வபோது தரவிருக்கின்றேன். அப்போது உங்கள் ஆசையும் நிறைவேறும் என்று நம்புகின்றேன்.


பி.கு. சந்திரபோசின் மகன் அண்மையில் ஒருபடத்துக்கு இசையமைத்தார். சந்திரபோஸ் மத்திய கிழக்கு நாடொன்றில் தற்போது வாழ்கின்றார்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நான் கேட்க நினைச்ச பாட்டில:
"சந்திர வெளிச்சத்தில் வீட்டுக்கு வெள்ளையடி.."
வானவில் என்டு தொடங்கி ஒரு வரி
"இளவரசன் வந்து விட்டான் , இதயங்களைக் கொள்ளையிட்டான் வென்று விட்டா..ஆ..ஆ..ஆ..ன் தாம் தகதிமி தோம்.." என்டெல்லாம் வரும் அண்ணாச்சி.. கண்டுபிடிச்சுப் போடுங்களன்.

சினேகிதி said...

\\சந்திர வெளிச்சத்தில் வீட்டுக்கு வெள்ளையடி.."
வானவில் என்டு தொடங்கி ஒரு வரி
"இளவரசன் வந்து விட்டான் , இதயங்களைக் கொள்ளையிட்டான் வென்று விட்டா..ஆ..ஆ..ஆ..ன்\\

நான் நினைக்கிறன் இந்தப்பாட்டு "கோடீஸ்வரன்" படப் பாடல் என்று.

கானா பிரபா said...

மழை
பாட்டு கட்டாயம் வரும்,
தங்கச்சி
இந்தப் பாட்டும் கோடீஸ்வரன் படத்தில் தான், ஆகோஷ் என்று 3 இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் அவர்களில் ஒருவரான கோபால் சர்மா பாடியிருந்தார்.

கொழுவி said...

/சந்திர வெளிச்சத்தில் வீட்டுக்கு வெள்ளையடி..//

ஏன் வீட்டில கரன்ட் இல்லையே..

SurveySan said...

மிக நன்று.

நன்றி. தொடரட்டும் பிரபா :)