ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் றேடியோஸ்பதியில் தொடர்கள் ஆரம்பிக்கின்றன. அந்த வகையில் இந்தப் பதிவு ஆரம்பிக்க இருக்கும் புதுத் தொடர்களுக்கான அறிமுகமாக இருக்கின்றது. சரி இனி வரப்போகும் தொடர்கள் குறித்த அறிமுகத்தைத் தருகின்றேன்.
வண்ண வண்ண சொல்லெடுத்து
வாராந்தம் ஒரு குறிப்பிட்ட சொல் வழங்கப்படும். அந்தச் சொல்லியில் வரும் ஏதாவது ஒன்று உங்களைக் கவர்ந்திருந்தால் அந்தப் பாடல் குறித்த சிறு விளக்கத்தோடு நீங்கள் பின்னூட்டப் பெட்டியிலோ அல்லது kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம். உதாரணமாக தென்றல் என்ற சொல் வழங்கப்பட்டால் அந்த சொல்லை பாடலின் முதல் வரிகளாகக் கொண்ட பாட்டைத் தேர்ந்தெடுத்து, பாடல் குறித்த உங்கள் சிலாகிப்புடன் அனுப்பவேண்டும். இது இரு வாரத்துக்கு ஒருமுறை இடம்பெற இருக்கின்றது. எனவே முதலில் தென்றல் என்ற அடியில் வரும் பாடலையும் உங்கள் விளக்கத்தையும் வரும் யூலை 14 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்.
இசையும் கதையும்
ஒரு சிறுகதை ஒன்றை நீங்களே எழுதி, அந்தச் சிறுகதைக்குப் பொருத்தமான பாடல்கள் நான்கிற்கு மேற்படாமல் பொருத்தமான இடங்களில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மாதாந்தம் ஒவ்வொரு படைப்பாளியின் இசையும் கதையும் வானொலிப்படைப்பாக அமையவிருக்கின்றது. இந்தப் படைப்புக்கு சிறப்பான குரல் வடிவம் கொடுத்துத் தயாரிக்க இருப்பவர் நமது சக வலைப்பதிவர் கதிர் சயந்தன் அவர்கள். ஆக்கங்களை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.
சிறப்பு நேயர் தொடர் - பாகம் 2
ஏற்கனவே ஆரம்பித்து இருபது பதிவர்கள் வரை பங்களித்த இந்த வாராந்தத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கின்றது. ஏற்கனவே பங்கு கொண்டவர்களை விடுத்து புதிய பதிவர்கள் மட்டுமல்ல பதிவுகளை வாசிக்கும் வாசகர்களும் இந்தத் தொடரில் பங்கேற்கலாம். உங்கள் மனம் கவர்ந்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவை குறித்த விளக்கங்களோடு kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்களேன்.
ஸ்யப்பா தொடர்களை அறிவித்து மூச்சு முட்டுகிறது. தொடர்ந்து இசை மழையில் உங்களை நனைவிக்கின்றேன். இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய புதிய தலைமுறைப்பாடகர்கள் சிலரின் பாடல்கள் இதோ.
ஹரிஷ் ராகவேந்திரா
வித்யாசாகரின் இசையில் "அரசியல்" திரைக்காக "வாசகி வாசகி" என்ற பாடலை முதலில் பாடியவர். ஆனால் ராஜாவின் இசையில் பாரதி படத்திற்காக "நிற்பதுவே நடப்பதுவே" பாடலைப் பாடிப் பெரும் புகழ் பெற்றார். ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இங்கே நான் தரும் "சொல்ல மறந்த கதை" திரையில் இருந்து " குண்டு மல்லி குண்டு மல்லி" என்ற இனியதோர் பாடல். அவருடன் இணைந்து பாடுகின்றார் ஷ்ரேயா கோசல்.
கார்த்திக்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரார் படத்தில் வரும் "நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்" பாடல் தான் இவரின் முதல் அடி. ஆனால் முகவரி கொடுத்த பாடலோ அழகி திரைப்படத்தில் பவதாரணியோடு இவர் பாடிய "ஒளியிலே தெரிவது தேவதையா"
ஸ்ரீராம் பார்த்தசாரதி
நல்ல குரல் வளம் மிக்க இந்த இளம் பாடகருக்கு மற்றையவர்கள் போல் வாய்ப்பு அதிகம் கிட்டுவதில்லை. கிடைத்தால் போதும் "பிதாமகன்" படத்தில் வரும் "இளங்காத்து வீசுதே" பாடலே சான்று.
