Pages

Monday, September 28, 2026

இசைஞானி இளையராஜாவின் காதல் ரோஜாவே


 "இளவேனில் இது வைகாசி மாதம்" காதல் ரோஜாவே படப் பாடலைத் தான் மனசு முணுமுணுத்தது, சாய் வித் சித்ராவில் நடிகை ஷீலாவின் பேட்டி வருவது தெரிந்ததும்.

ஷீலா - ரவிச்சந்திரன் ஜோடியின் மகனான ஜார்ஜ் விஷ்ணுவோடு, பின்னாளில் கமல்ஹாசனோடு விஸ்வரூபம் எடுத்த பூஜாவின் அறிமுகப் படம்.  இசைஞானி இளையராஜா இசையில் 1997 இல் ஆஸ்கார் மூவீஸ் இயக்குநர் எம்.பாஸ்கரின் குடும்பத் தயாரிப்பில் கேயார் இயக்கம் என்று ஏகப்பட்ட நட்சத்திரம் இருந்தாலும் காதல் ரோஜாவே மூன்று வருட இழுபாட்டில் தான் வெளியே வந்து வாடிப் போனது.

பத்துப் பாடல்களும் பலாச்சுளைகள். நினைத்த வரம் கேட்டு, இளவேனில் இரண்டும் முன்னிற்கும் ரகம்.

https://www.youtube.com/watch?v=7cc4PujeX78

இதற்கு முன் தன் வாரிசு விஜய் ஐ வைத்து ஒரு படம் தயாரிக்கச் சொல்லி எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டவும், அவரையே இயக்குநராக்கி பாஸ்கர் தயாரித்த திரைப்படம் "விஷ்ணு". ஆனால் அந்தப் பட அனுபவம் கொடுத்த கசப்பை குமுதத்திலும் பகிர்ந்து கொண்டார் பாஸ்கர்.

இன்னொரு வாரிசைக் களத்தில் இறக்கிக் காட்டுவோம் என்று நினைத்தார் போல. ஆனால் காதல் ரோஜாவே படமும் அவருக்குக் கை கொடுக்கவில்லை.

நடிகை ஷீலா & பிரேம் நஸீர் ஜோடி 100+ படங்கள் ஜோடியாக நடித்து சாதனை படைத்தவர்கள். ஷீலாவின் மகன் ஜார்ஜ் விஷ்ணு போலவே பிரேம் நஸீர் மகன் ஷா நவாஸ் கூடத் தம் பெற்றோர் அளவுக்குப் பெரிய அளவில் எடுபடாதது காலத்தின் தீர்ப்பு.


தன்னுடைய மூன்று மகள்களை எப்படிக் கரை சேர்ப்பேன் என்று பத்திரிகையாளர் மதி ஒளி சண்முகம் தன்னுடன் பேசும் போது குறைப்படவும், அவரைத் தயாரிப்பாளராக்கி, தானே நிதி ஏற்பாட்டைச் செய்து ஷீலா இயக்கி நடித்த படம் தான் யக்‌ஷ கானம். இதை சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் படம் தான் ஆயிரம் ஜென்மங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்பங்களில் முக்கிய படமாக அமைந்தது.

சமீபத்தில் ஜென்ஸீ கிட்ஸ் ஊடகர் ஒருவர் தர்மன் படத்தில் தான் ரஜினி டாக்டர் வேடம் ஏற்று நடிக்கப் போகிறார் என்று இந்த வரலாறு தெரியாமல் போட்டிருந்தார்.

எனக்குப் பேய்ப் பயம் வந்து, அந்த ஏரியாப் படங்களே பார்க்கக் கூடாது என்று முடிவெடுக்க வைத்தது, என் சின்ன வயசில் நியூ விக்ரேர்ஸ் இல் வீடியோ கேஸட் காலம் வந்த புதிதில் அண்ணன்மார் இந்தப் படத்தை அப்பப்பா வீட்டில் போட்டுக் காட்டிக் கிலி கொள்ள வைத்ததுதான்.

தன்னுடைய "சிகரங்கள்" கதையைக் கூட பஞ்சு அருணாசலம் உரிமை பெற்று "ருசி கண்ட பூனை" படமாக எடுத்ததை சாய் வித் சித்ராவில் பெருமையோடு நினைவுகூர்ந்தார் ஷீலா.

மதி ஒளி சண்முகம் குறித்து எனக்கு ஸ்பெஷலாகப் பிடிக்கக் காரணம், இளையராஜாவின் குரு நாதர் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் நெஞ்சில் ஒரு முள், காஷ்மீர் காதலி ஆகிய இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார்.

இரண்டு படங்களின் பாடல்களுமே பூந்தி லட்டுகள்.

அட இளையராஜாவில் ஆரம்பித்து ஜி.கே.வெங்கடேஷில் முடிக்க வைத்திருக்கிறதே இந்தப் பதிவு :-)


கானா பிரபா.

0 comments: