என்னைத் தினமும் உயிர்ப்போடும், துடிப்போடும் வைத்திருப்பது பாடல் கேட்பது மட்டுமல்ல, இசை ரசனையில் மூழ்கி அவற்றைப் பதிவாக்குவது. காலை, மாலை ரயில் பயணங்களிலும், காத்திருக்கும் நேரங்களில் கிடைக்கும் அவகாசங்களிலும், நள்ளிரவு தாண்டிய நித்திரை இல்லாப் பொழுதுகளிலுமாகப் பெருகிப் பெருகி இன்று ஆயிரம் கடந்து நிற்கிறது என் றேடியோஸ்பதி வலைப்பதிவு.
மார்ச் 7, 2007 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்தப் பயணம் 20 வருடங்களைத் தொடப் போகிறது.
இடைப்பட்ட காலத்தில் செல்போனில் பதிவு எழுதும் வசதி வந்து விட்டது எனக்குப் பெரும் வரப்பிரசாதம் ஆகியது.
இசைஞானி இளையராஜா போற்றும் முன்னோர்கள் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தொட்டு இன்றைய இசையமைப்பாளர்கள் வரை என் ரசனைக்குத் தீனி போட்டவர்களை இந்தத் தளத்தில் களஞ்சியப்படுத்தியிருக்கிறேன்.
ஆபாவாணன் தொட்டு வி.எஸ்.நரசிம்மன் உள்ளிட்ட அரிய பல திரைப் படைப்பாளிகளைப் பேட்டி கண்டு பதிவாக்கி இருக்கிறேன்.
சின்னத்தாயி இயக்குநர் கணேசராஜ் இன் புகைப்படம் ஒரு காலத்தில் இணையத்தில் இல்லாத சூழலில் என் ஆவணப் பகிர்வு பலருக்குக் கை கொடுத்திருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் தேர்ந்தெடுத்த 40 படங்களின் பின்னணி இசையை அவற்றின் பின்னணி அலசலோடு பகிர்ந்திருக்கிறேன்.
இன்னும் இன்னும் தொடர்வேன்
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும்
அணையா விளக்கே ❤️
தமிழோடு இசை, பாடல்
மறந்தறியேன் ❤️❤️❤️
❤️ கானா பிரபா ❤️


0 comments:
Post a Comment