Pages

Sunday, September 20, 2026

இசைஞானி இளையராஜா 50 ❤️ ஆஸி இசைச் சுற்றுலா 2026


அரே ஏமண்டி….

இப்படிப் பாடிக் கொண்டே இசைஞானியின் தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி வந்தால் எப்படியிருக்கும் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நடந்தது.

அதைக் கேட்டதுமே கிருஷ்ணா நதி நீர் தமிழ் நாட்டுக்குத் திசை திருப்பிய குளுமை.

இளையராஜா சாருக்கெல்லாம் அறிமுகமா என்ன? நீங்களே அவரைக் கூப்பீடுங்களேன் அப்படியே என்றுவிட்டு

ராஜா சார்ர்ர்ர்ர்ர்!

என்று கத்தியது தொகுப்பு தெலுங்கு பாப்பா.

ராஜா சாஆஆஆஆர்ர்ர் (கூட்டம்)

மள்ளி (தொகுப்பு பாப்பா)

ராஜா சாஆஆஆஆர்ர்ர் (கூட்டம்)

“ஐ லவ் யூ இளையராஜா”

பின்னிருக்கையில் இருந்து ஒரு இருபது வயது  அம்மாயி கத்தியது இளையராஜாவைப் பார்த்து.

சமக்கு சமக்கு சம் குத்துப் போட்டுக் கொடுத்த பாட்டுகளின் இளமையிலேயே தம் ராஜாவையும் வைத்திருக்கிறார்கள் போல.

ஒரு துளி பயம் இல்லை, துப்பாக்கி பட காஜல் அப்பாக்கார மனோபாலாவைக் கையாள்வது போல.

ஆனால் தமிழ் ரசிகர்கள் கண்டிப்பான தந்தையாக ராஜாவிடம் அனுபவப்பட்டதால், தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே “மாமன் மகள்” படத்தில் ஜெயச்சித்ராவிடம் பம்மும் மணிவண்ணன், கவுண்டமணி ரேஞ்சில் நடுக்கம் ஏற்படாத குறையாக இளையராஜாவை அணுகினார்கள்.

கோதண்டராமரெட்டி ரேஞ்சில் இருக்கும் வாடுகளும், 

சிரஞ்சீவிக்கே அம்மா வேஷம் கட்டும் அம்மாயிகளும் வயது பேதமின்றி ஆடியும்,  பாடியும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஆந்திரா, தெலுங்கு தேசம் வாலாக்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நாலைந்து சிரஞ்சீவி, ஏழெட்டு பாலகிருஷ்ணா இருப்பார்கள் போல.

ஆட்டம், பாட்டம், ஹார்டின் என்று ஒரே அமர்க்களமாகக் கொண்டாடி ரசிக்கிறார்கள்.

இந்த மாதிரி அயல் மொழிக்காரர் ராஜாவை எப்படி அணுகுகிறார்கள் என்பதற்காகவே இசைஞானியின் தெலுங்கு இசை நிகழ்ச்சிக்குச் சென்றேன்.

இளையராஜா 50 என்பதால் தான் இசையமைப்பாளராக வந்த வரலாற்றுக்கு 15 நிமிடங்கள்.

தொடர்ந்து சரண் வருகிறார்.

ஒரே சமயத்தில் பாலகிருஷ்ணாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வந்தால் எப்படியிருக்கும் சொல்லுங்கள்.

அப்படியொரு அதிர்வலையில் கூட்டம் அமளிப்பட்டது. 

அப்படியொரு மரியாதை அவருக்கு.

ராமராஜ்ஜியம் படத்தில் வந்த “ஜகதானந்த காரக” 

ராஜா ராஜாதி ராஜனெங்கள் (தெலுங்கு)

பாடலைத் தொடர்ந்து 

ஜல்லெண்ட (ஆத்தாடி அம்மாடி) கீதாஞ்சலி பாடலை அனன்யா பட் அட்சர சுத்தமாகப் பாடினார்.

குயில் சத்த ஆரம்பத்தைக் கேட்டாலே தெலுகுவாலாக்கள் கூவி ஆர்ப்பரிக்க

ஆமனி (காவியம் பாட வா தென்றலே)

ஆனால் சித்தாராவில் வந்த Vennello Godari Andam (தூரத்தில் நான் கண்ட உன் முகம்) சுர்முகி பாடும் போது ஊசி விழுந்தாலும் கேட்காத அமைதியில் ரசித்தார்கள்.

இந்தா ஹோரஸ் கேட்டதும் மீண்டும் ஹோவென ஆர்ப்பரிப்பு

வேறென்ன சம்மதம் தந்துட்டேன் பாடலின் தெலுங்கு மூலத்துக்குத் தான் அந்த வரவேற்பு.

Hello Guru Prema Kosame பாட்டுக்கு அந்த அரங்கத்தின் சிமெண்ட் தூண் எழுந்து ஆடாத குறை.

நின்னுக்கோரி பாட்டுக்கும் எல்லை கடந்த ரசிகப் பட்டாளம் இருக்கு என்று நிரூபித்தார்கள்.

மாட்டரானி மெளம் இதே வேற லெவல்யா என்று ஆர்ப்பரிப்பு.

சூப்பர் ஸ்டாருக்கும் சேர்த்து “ராக்கம்மா கையத் தட்டு” வைக் கொண்டாடினார்கள் போலும்.

கீரவாணி, மறக்குமா செழும் மலரைக் காற்று, இதழில் கதை எழுதும்

இதெல்லாம் தமிழும் அரவணைத்துக் கொண்டாடியதாயிற்றே. நாங்க தான் முதலில் கேட்டோம் என்று இந்த வாலாக்கள் உரிமை எடுக்கிறார்கள் போலும்.

பாட்டனி பாடம் பாட்டுக்கு அதிர்ந்தது அரங்கம். சிரிச்சுச் சிரிச்சு ரசிச்சார்கள்.

எனக்கு அந்த இசை ராட்சசன் SPB தான் கண் முன்னே வந்தார்.

இப்படிப் போய்க் கொண்டிருந்த தெலுங்கு ராஜா பாட்டுகளில் ஒரு திருப்பமாக அதிகம் தமிழ்ச் சூழலில் அறியப்படாத Challenge படத்தின் Induvadana Kundaradana பாட்டுப் பாடியது இன்ப அதிர்ச்சி.

மிளகாய்ப் பொடியைக் கண்ணில் தூவி விட்டு இளையராஜாவின் பாடலை ஒலிக்க விட்டாலும், கண் எரிச்சலை மறந்து கைத்தாளம் போட்டு ரசிப்பார்கள் இந்த தெலுங்கு ராஜாக்கள், ராணிகள் என்று மட்டும் புரிந்தது.

அடுத்தது தமிழ் நிகழ்ச்சி

ரசிகர்களே அமைதி அமைதி 😁

இன்னும் நான்கு நிகழ்ச்சி இடம்பெறவிருப்பதால் பாடல் பட்டியல் போட மாட்டேன் 😁

ஜானகிம்மாவின் mini version சுர்முகி

ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்.

இந்த அனன்யா பட் தெலுங்கு, தமிழ் இரண்டிலும் பட்டையைக் கிளப்பினார்.

ஸ்வேதா வரவில்லை.

தமிழ் நிகழ்ச்சிக்கு முன்பதாக உள்ளூர் இளசுகள் இளையாராஜா பாடல்களுக்கு வித்தியாசமான வடிவம் காட்டி நடனம் ஆடியது அருமையோ அருமை.

தெலுங்கு ரசிகர்கள் போல் ரசிப்போடு கைத்தாளம் போடத் தெரியாது என்று (!) தமிழ் நிகழ்ச்சி அன்பர்கள் செய்து காட்டினார்கள். 

தெலுங்கு நிகழ்ச்சியில் தகராறு பண்ணிய ஒலிச் சமநிலை, தமிழில் சீரானது.

பெரிய எதிர்பார்ப்பு ஆனால் ஏமாற்றம்

கங்கை அமரன் வராதது.

தெலுங்கு போல, தும்பி வா (மலையாளம்), ஜெதயலே (கன்னடம்) என்று முழுமைப்படுத்திக் காட்டி இருக்கலாம்.  இளையராஜா 50 ஆச்சே.

இன்னுமொரு பேராசை 

அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணைக்காகப் பாடியதை அர்ப்பணித்திருந்தால் எப்படியிருந்திருக்கும்.

இம்முறை ராஜாவின் முகத்தில் அந்தத் தெய்வீகக் களையும் இருந்தது.

இன்று காலை அந்தப் பாடலை என் மனசு பாடிக் கொண்டிருக்க மெல்பர்னில் இருந்து சிட்னிக்குத் திரும்பினேன் ;

போற்றிநின்.. பேரருள்

போற்றி நின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய

அருட்பெருஞ் ஜோதி 

❤️

கானா பிரபா

20.09.2026

0 comments: