Pages

Saturday, January 25, 2025

இசைஞானி இளையராஜா வின் ❤️❤️❤️ Symphony No. 1 ❤️❤️❤️

 இசைஞானி இளையராஜா வின்     

❤️❤️❤️

Symphony No. 1 

❤️❤️❤️



“நாங்கள் இன்னும் இன்னும் 

சேர்ந்து வேலை செய்யப் போகிறோம்,

எனக்கு வயது 82 என்பதையும் 

சொல்லி வைக்கிறேன்”

அரங்கத்தில் தன் சிம்பொனிப் படைப்பை வாத்தியங்களால் மொழி பெயர்த்த வாத்தியக்காரர்கள் முன்னே பூரிப்போடு சொல்லி நிமிர்ந்து நிற்கின்றார்

நம் காலத்து ராஜாதி ராஜன் இந்த இளையராஜா.

“இளையராஜாவின் புதுவிதமான  நெறிப்படுத்தலில்  வாத்தியங்களைக் கையாண்டது நமக்கெல்லாம் புதிய அனுபவம்,

இம்மட்டுக்கும் இங்கே இசை படைத்த வாத்தியக்காரர்கள் எல்லோருமே நிரம்பிய அனுபவசாலிகள் என்பதையும் சொல்லி வைக்கிறேன்”

என்ற பிரமிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றார் இசை இயக்குநர் (conductor) Mikel Toms.

ஒவ்வொரு வாத்தியங்களைத் திரையிசைப் பாடல் உருவாக்கத்தின்போது கையாளும் போது,

“இதில் இருந்து  இப்படி வரலாமே?”

“ஏன் இந்த இசைக் கருவியில் இருந்து 

நான் நினைத்த மாதிரி எடுக்க முடியாதுள்ளது?

இன்னும் முயன்று நான் எது கேட்டேனோ அதை இது வழியாகத் தர வேண்டும்”

என்ற ஒரு கறார்த்தனம் மிகுந்த இளையராஜா என்ற இசையமைப்பாளரிடம் ஆண்டாண்டு காலம் அனுபவபட்ட நம் வாத்தியக் கலைஞர்கள் எல்லாம் சொல்லக் கேட்டதால் இதெல்லாம் ஆச்சரியமில்லாமல் நமக்குள் ஒரு குறுஞ் சிரிப்பையும், பெருமையையும் கொண்டு வருகிறது. நம்மாள் அருமை இன்னொரு தேசத்தவருக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறதே என்ற பெருமையின் வெளிப்பாடு அது.


Symphony No. 1 இசை உருவாகத்தின் பின்னணிப் படத்தைப் பார்க்கும் போது இன்னொன்றை அவதானித்திருப்பீர்கள்.

தான் எதை எழுதினாரோ அதை அச்சொட்டாக வாங்கி விடும் ஆளுமைத் திறன். 

Mikel Toms இடம் திரும்பத் திரும்பச் சொல்லி இப்படி வர வேண்டும் என்கிறார். வாத்தியக்காரர்களிடம் இது சேர்ந்திசை எல்லோரும் அணிவகுங்கள் என்று கட்டளை பிறப்பிக்கிறார்.

“கேமரா கோணம் Mikel Toms இடமிருந்து தான் மெல்ல மெல்ல மெல்ல என்னிடம் வர வேண்டும்”

இளையராஜா என்ற கலைஞனிடமிருக்கும் ஒளிப்படக்காரனும் குறும்போடு எட்டிப்பார்க்கிறார் இப்படி.

இந்தப் பத்து நிமிடத்துக்கும் குறைவான காணொளியில் இளையராஜாவின் முகத்தில் இருக்கும் அந்த இறுக்கம் தான் தொழில் பக்தி, தன் தொழிலுக்குக் கொடுக்கும் நேர்மை, தான் கற்ற வித்தை ஒரு முடிவற்றது என்ற ஆரம்ப வகுப்பு மாணவனுக்கு உரிய பயபக்தி எல்லாமே அங்கே ஒட்டியிருக்கிறது.

தன் செல்வமகள் பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவில் இன்னொரு குழந்தையை ஈன்ற செய்தியைச் சொல்கிறார் 

இளையராஜா எனுமோர் முடிவிலி ❤️

https://youtu.be/Tw0zz6SRVJk?si=W1DCIARoSmUBfw85

கானா பிரபா

25.01.2025

0 comments: