Pages

Wednesday, January 8, 2025

ஒலி அழகன் 💛💛💛 ஹாரிஸ் ஜெயராஜ் 💚❤️💚

“இப்போதெல்லாம் ஒலியை (sound) எப்படிக் கையாள்வது என்பதே இசையமைப்பு” என்று சமீபத்தில் இளம் இசையமைப்பாளர் ஒருவர் தன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

துல்லியமான இசையின் அருமையைப் பெற மும்பை தேடிப் போய் ஒலியமைத்த இசைஞானியின் ஆனந்தக்கும்மி, தளபதி ஆகச்சிறந்த உதாரணங்கள் என்பதோடு சரி. எத்தனையோ அற்புதமான பாடல்களின் வாத்தியக் கோப்புகள் தேய்ந்த ஒலித்தரத்தால் வெளிச்சம் தராமல் மங்கி விட்டன.

அமரன் (1992) படப் பாடல்கள் வெளி வந்த போது, அந்தப் பாடல்களின் மெட்டமைப்பை விட அதிகம் ஆகரிஷித்தது அதன் ஒலித்தரம்.

அப்போது வாக்மேனில் இந்தப் படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இலவம் பஞ்சின் மினுமினுப்பும், மெது மெதுப்பும் கலந்தது போல.

டைட்டஸ் இயற்பெயர் கொண்ட ஆதித்யன் அடிப்படையில் ஒரு ஒலிக் கலைஞர் (sound engineer) ஆகவே ஒரு சொட்டும் சிந்தாமல் சிதறாமல் கொடுத்திருந்தார்.

ரஹ்மானுக்கு முன்பே ஆதித்யன் கொடுத்த இசை அனுபவம்  நமக்குப் புதுமையாக இருந்தது.

பின்னாளில் கங்கை அமரன் ஒரு பாட்டுப் போட்டியில்,

“ஆதித்யன் இசையமைத்த 

அமரன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர் வாத்தியக்காரர்,

சீவலப்பேரி பாண்டிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கீர்போர்ட் வாத்தியக்காரர்”

என்று சொன்னார்.

1992 க்குப் பின்னான இசை யுகத்தின் திறவுகோலாகப் பின்னர் ஏ.ரஹ்மான் புதியதொரு பரிமாணம் படைத்தார்.

அவர் தொட்ட எல்லைகள் பற்பலது.

இன்னொரு புறம் ஹாரிஸ் ஜெயராஜின் வரவு நிகழ்கிறது.

ஒலியை நம் அருகாமையில் கொண்டு போகும் தொழில் நுட்பம் இன்னும் இன்னும் கிட்ட வரவும், அதற்குத் தோதாய் மிகச் சிறந்த ஒலி நயம்

மிகுந்த பாடல்கள் கிளம்பினது.

அவற்றில் மிகுந்த கர்ம சிரத்தையோடு பேணி வருபவர் ஹாரிஸ்.

அதனால் தான் அவர் இசையமைத்த படங்களின் முகவரி தேடாமல் உடனேயே கேட்டு விடுவது.

ஒரே மாதிரி ட்யூன் என்ற குற்றச்சாட்டை எல்லாம் அவரின் ஒலி நயம் நீர்த்துப் போக வைத்து விடும்.

ஒரே மெட்டுடன் ஓகே ஆக்கி விடுவார் என்று கெளதம் வாசுதேவன் ஹாரிசுக்குப் புகழாரம் சூட்டுவது ஒருபக்கம், இன்னொரு பக்கம்

அந்தக் கூட்டணியில் மிளிர்ந்த பாடல்களின் ஓசை நயத்தை மட்டும் எடுத்தாலே போதும். இதை எழுதும் போது அடி மனசு 

“உன் சிரிப்பினில்” 

https://youtu.be/7GlJSYi-IvQ?si=hSlWpMA06fj6gVki

பாடுகிறது.

இன்றைக்கும் கூட மனசுக்கு இதமாக ஒரு பாட்டுக் கூட்டு (playlist)  தயாரிக்க மனம் விழைந்தால் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை அள்ள நினைக்கும்.

சாலைகள் மாறும்

பாதங்கள் மாறும்

வழித்துணை நிலவு மாறாதே

மனமெல்லாம் சிறகே

உலகெல்லாம் உறவே

https://youtu.be/q8MW_YcbcVM?si=jm0j19T-um1OukJQ

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

ஒலி அழகன் ஹாரிஸ் ஜெயராஜ் ❤️

கானா பிரபா


0 comments: